விஜய் சேதுபதி எப்படித்தான் படங்களைத் தேர்வு செய்கிறாரோ தெரியவில்லை.. அவர் தேர்வு செய்யும் படங்களின் கதையைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சோலோ ஹீரோவாக ஹீரோயிஸ படத்தை மட்டும் தேர்வு செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அவர்.
அடுத்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் ‘வன்மம்’. இதில் அவருடன் இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார் அவர் ‘கழுகு’ படத்தின் ஹீரோவான கிருஷ்ணா. இவர்களுடன் சுனைனா ஹீரோயினாக நடிக்கிறாராம். ஆனால் இவர் கிருஷ்ணாவுக்குத்தான் ஜோடியாம்.. “விஜய் சேதுபதிக்கு யார் ஹீரோயின்..? சஸ்பென்ஸா வைச்சிருக்கீங்களா?”ன்னு இயக்குநரிடம் கேட்டால், “அதை உங்க சாய்ஸுக்கே விட்டுர்றேன்..” என்கிறார்.
மேலும் ஸ்ரீரஞ்சனி, ‘கோலிசோடா’ படத்தில் வில்லனாக நடித்த மதுசூதனன் ஆகியோரும் நடிக்கிறார்களாம். படத்திற்கு ஒளிப்பதிவு பாலபரணி. இசை எஸ்.எஸ்.தமன்.. பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார். இத்தனை பெரிய கைகளை இணைக்க வேண்டும் என்றால் தயாரிப்பும் பெரிய இடமாக அல்லவா இருக்க வேண்டும்..?
ஆமாம்.. பெரிய இடம்தான்.. ‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்து ‘பொக்கிஷம்’ படத்தோடு தனது பொக்கிஷத்தை இழந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் காத்திருந்த, நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் இருவரும்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இதே தயாரிப்பு நிறுவனம் தற்போது தற்போது ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் ‘மீகாமன்’ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த நிலைமையில் வரும் 26-ம் தேதி முதல் இந்த ‘வன்மம்’ படத்தின் ஷூட்டிங்கும் துவங்கப் போகிறதாம்..
இது முழுக்க முழுக்க நாகர்கோவில் வட்டாரத்தில் நடக்கும் கதையாம். அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரம், நேட்டிவிட்டி.. பழக்க வழக்கம் எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்களாம்.. படப்பதிவு முழுவதும் அங்கேதான் என்கிறார் இயக்குநர்.
எழுதி இயக்கும் அறிமுக இயக்குநர் ஜெய்கிருஷ்ணா கலைமணி, கமல்ஹாசன், ஆர்.கே.செல்வமணி, சிம்பு போன்றவர்களிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்தவராம். நிறைய பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார் என்பது பேச்சிலேயே புரிந்தது..
இந்தப் படம் பற்றி இயக்குனர் ஜெய்கிருஷ்ணா சொல்கையில், “பகைமை உணர்வு ஒரு மனுஷனுக்கு அதிகமானால் அந்த உணர்வினால், அவன் என்னென்ன அல்லலுக்கு ஆளாகுகிறான் என்பதுதான் கதை..” என்றார்.
மேலும் “தனிப்பட்ட மனிதர்கள் மீதான கோபம்.. அடக்கி வைக்கப்பட்டு என்றைக்கோ ஒரு நாள் வெடிக்கும்போது ஏற்படும் அளவு கடந்த வன்முறையை கட்டுப்படுத்தவே முடியாது.. அதனால் அந்த வன்மத்தை எப்படி ஆரம்பத்திலேயே தடுப்பது என்பதையும் கொஞ்சம் சொல்லியிருக்கிறோம்..
இதில் ஹீரோயிஸம் கிடையவே கிடையாது.. கதைதான் ஹீரோ.. நாகர்கோவில் வட்டாரம என்றாலும் எந்த ஜாதிக்காரரையும் குறித்துச் சொல்லக் கூடிய படமாக இருக்காது..
விஜய் சேதுபதிக்கும், கிருஷ்ணாவுக்கும் இணையான கேரக்டர்கள்தான்.. இதில் கதையைக் கேட்டவுடன் விஜய்சேதுபதி உடனேயே ஒத்துக் கொண்டார். அப்ப அந்தக் கதை எந்த அளவுக்கு அவரைப் பாதிச்சிருக்கும்னு பாருங்க..” என்றார் இயக்குநர்.
இயக்குநரின் அளவு கடந்த நம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறோம்.. வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!