மகன் பெயரில் கட்சியைத் துவக்கினார் தந்தை – கட்சியில் சேரக் கூடாது என்று மகன் எச்சரிக்கை..!

மகன் பெயரில் கட்சியைத் துவக்கினார் தந்தை – கட்சியில் சேரக் கூடாது என்று மகன் எச்சரிக்கை..!

இன்று மாலையில் திடீரென்று அமைதியாக இருந்த திரைத்துறை, அரசியல் துறை இரண்டையும் கலந்து கட்டி அடித்ததை போன்ற ஒரு செய்தி வெளியானது.

‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், உடனடியாக இதை மறுத்து நடிகர் விஜய்யின் தரப்பு, இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் விஜய் எந்த அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை என்றும் விளக்கமளித்தது.

விஜய்யின் மேலாளர் இதனை மறுத்த 5-வது நிமிடத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “அந்தக் கட்சி பதிவு செய்தி உண்மைதான். நான்தான் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய சொந்த முயற்சி. இது விஜய்யின் அரசியல் கட்சி அல்ல. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை..” என்று கூறினார்.

S.A.சந்திரசேகரின் இந்தப் பேட்டி வெளியான சில நிமிடங்களில் நடிகர் விஜய் இதற்கு உடனடியாக எதிர் விளக்கமளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதுதான் :

“இன்று என்‌ தந்‌தை திரு.எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌ அவர்கள்‌ ஓர்‌ அரசியல்‌ கட்சியை ஆரம்பித்துள்ளார்‌ என்பதை ஊடகங்களின்‌ வாயிலாக அறிந்தேன்‌. அவர்‌ தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும்‌ இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இதன்‌ மூலம்‌ அவர்‌ அரசியல்‌ தொடர்பாக எதிர்காலத்தில்‌ மேற்கொள்ளும்‌ எந்த நடவடிக்கைகளும்‌ என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்‌.

மேலும்‌ எனது ரசிகர்கள்‌, எனது தந்‌தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில்‌ இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம்‌ என கேட்டுக் கொள்கிறேன்‌. அக்கட்சிக்கும்‌ நமக்கும்‌ நமது இயக்கத்திற்கும்‌ எவ்வித தொடர்பும்‌ கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்‌.

மேலும்‌ என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌…”

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

Our Score