பொறுத்தது போதும்; பொங்கி எழு என்ற பாணியில் தங்களை தரக்குறைவாக யுடியூபில் பேசிய ஒரு நபரை திரைப்பட நடிகை உள்ளிட்ட 3 பெண்கள் ரவுண்டு கட்டி தாக்கியிருக்கிறார்கள். இது தமிழகத்தில் இல்லை. கேரளாவில்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் பி நாயர். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பெண்ணுரிமை சங்கத்தில் இருப்பவர்களெல்லாம் பாலியல் தொழில் செய்பவர்கள் என்றும், அவர்களை மேலும் பலவிதமாக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.
இதைப் பார்த்துவிட்டு கேரளாவில் பல பெண்ணுரிமை சங்கத்தினர் கொதித்துப் போனார்கள். இவர்களில் ஒருவர் பாக்யலட்சுமி. இவர் மலையாள சினிமாவின் முக்கியமான டப்பிங் கலைஞர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணியில் இருந்த, இருக்கும் நடிகைகளுக்கெல்லாம் குரல் தானம் செய்து வருவது இவர்தான். மணிசித்ரதாழு திரைப்படத்தில் ஷோபனாவுக்கு இரவல் குரல் கொடுத்தவர் இவர்தான்.
விஜய்யின் வீடியோவை பார்த்தவுடன் ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணுரிமை சங்கத்தைச் சேர்ந்தவர் கேரளாவின் பெண்கள் கமிஷனில் புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறையில் சைபர் கிரைமிலும் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. சைபர் கிரைம் வழக்கு என்றால் நிறைய பார்மாலிட்டிகள் உண்டு என்பதால் தாமதமாகியிருக்கிறது.
இதை பொறுக்காத பாக்யலட்சுமி, தியா சனா, ஸ்ரீலட்சுமி என்ற மூவர் கூட்டணி நேற்று மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த விஜய் நாயரை நேரில் போய் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
அவரும் பதிலுக்கு பதில் பேச.. கை கலப்பாகி.. கையில் கொண்டு போன என்ஜின் ஆயிலை அவர் மீது ஊற்றி.. விஜய் நாயரை இந்த மூவர் கூட்டணி தாக்கியிருக்கிறது. இந்தத் தாக்குதலை தியா வீடியோவாக எடுத்து அதை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துவிட்டார்.
இந்த அதிரடித் தாக்குதலின்போது அருகில் இருந்த தாம்பனூர் பகுதி காவல்துறையினர் உள்ளே நுழைந்து அப்போதைக்கு பிரச்சினையில் இருந்து விஜய் நாயரை மீட்டிருக்கிறார்கள்.
இப்போது அதே போலீஸ் ஸ்டேஷனில் விஜய் நாயர் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதேபோல் விஜய் நாயர் மீது தாக்குதல் நடத்திய நடிகை பாக்யலட்சுமி, தியா சேனா, ஸ்ரீலட்சுமி ஆகிய மூவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரச்சினை பெரியதாக உருவெடுத்ததும் அதே யூடியூபிலேயே பொது மன்னிப்பும் கேட்டிருக்கிறார் விஜய். ஆனாலும் தாக்குதலைத் தொடுத்துவிட்டது மகளிரணி. விஜய் தான் ஒரு சைக்காலஜி மருத்துவர் என்கிறார். திரைப்படத் துறையிலும் கதை இலாகாவில் பணியாற்றுவதாகச் சொல்கிறார்.
பாக்யலட்சுமியோ நான் செய்தது சரிதான். இந்தச் சம்பவம் தொடர்பாக தான் ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். “இப்படி நாலு பேரை சாத்தினால்தான் பெண்களுக்கெதிராக இப்படி பேசுவும், எழுதுவதும் குறையும்” என்கிறார் பாக்யலட்சுமி.
என்றாலும் இரு தரப்பையுமே இப்போதைக்கு கைது செய்யாமல் தவிர்த்திருக்கிறது கேரள போலீஸ். காரணம், கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சரான ஷைலஜா இந்தத் தாக்குதலை வரவேற்று பெண்ணுரிமை சங்கத்தினருக்கு ஆதரவு கொடுத்திருப்பதுதான்..!
கேரளாவில் இப்போதைய சென்சேஷனலான பிரச்சினையாக இதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி சட்டத்தை ஒரு பொது ஜனம் கையில் எடுக்கலாமா என்பதுதான் அனைத்து டிவிக்களிலும் இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சியின் தலைப்பு..!
இப்படி ஆள், ஆளுக்கு உடனடி தீர்ப்பு சொல்ல வந்தால் அப்புறம் போலீஸ் எதற்கு.. நீதிமன்றம் எதற்கு..?