“அரசியல் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக் கூடாது. பத்திரிகை, இணையத்தளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது…” என்று நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் இந்த உத்தரவு குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் அவர்களை மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
யாரையும் எக்காலத்திலும் இழிவுப்படுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனை செய்யக் கூடாது. பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது..” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று மாலை திருவான்மியூரில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரமின் மகள் திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கிக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பு நடந்த அடுத்த நாள் காலையிலேயே விஜய் இந்த அறிக்கையை விட்டிருப்பது பலருக்கும், பலவித சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.









