full screen background image

“சொல்லைவிட செயலில் காட்டுங்கள்”-தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் இயக்குநர் போஸ் வெங்கட் வேண்டுகோள்

“சொல்லைவிட செயலில் காட்டுங்கள்”-தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் இயக்குநர் போஸ் வெங்கட் வேண்டுகோள்

‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, இயக்குநர் மஸ்தான், நாயகன், நாயகி, ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி பேசும்போது, “தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும்…” என்றார்.

நடிகரும், இயக்குநருமான ‘போஸ்‘ வெங்கட் பேசும்போது, “விருதுகள் பல பெற்றும், சிறந்த விமர்சனங்களைப் பெற்றும் நான் இயக்கிய ‘கன்னி மாடம்’ திரைப்படம் ஏன் வெற்றியடையவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. அதை நினைத்தால் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயலில் காட்டினால்தான் அப்படம் வெற்றியடையும்…” என்றார்.

இசையாமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது, “கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர்’ திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்றுவிட்டது.

ஒரு படம், இரண்டு படம் இசையமைத்துவிட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால், மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்துவிட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் இனிமேல் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன்…” என்றார்.

ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும்தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படத்தில் அறுசுவையையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன். பொருளாதார ரீதியிலும் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “கடந்த 10 மாதங்களாக மக்கள் அனைவரும் அஞ்சி, அஞ்சி வாழ்ந்தார்கள். ஆனால், இந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு மாபெரும் நன்றி.

இப்படத்தின் இசை நன்றாக இருக்கிறது. கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். இயக்குநர் மஸ்தான் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸ்தான்’ என்று போற்றப்படும் அளவிற்கு மாஸான இயக்குநராக வருவார்.

கதாநாயகி மற்றும் கதாநாயகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள். புதுமுகங்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. எந்தப் படமாக இருந்தாலும், பட்ஜெட் போட்டு எடுத்தால் 25 நாட்களுக்குள் முடித்துவிடலாம். அதற்கு உதாரணம் இயக்குநர் ராம. நாராயணன். அவர் 25 நாட்களில் படத்தை முடித்துவிடுவார். 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஆகவே, சிறுபட தயாரிப்பாளர்கள் மற்றும் புதுமுக இயக்குநர்கள் ராம நாராயணனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு செலவுகளைக் குறைக்க வேண்டும். நடிகர்களுக்கு அளவான சம்பளம் கொடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடிகர்களுக்கு அளவிற்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது…” என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசும்போது, “இப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. உடனேயே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். சிறிய படங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அதைவிட திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் சிறிய படங்கள் வெற்றியடையும்…” என்றார்.

விழாவின் இறுதியில் இப்படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.

Our Score