full screen background image

வேட்டையன் – சினிமா விமர்சனம்

வேட்டையன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ழுத்து, இயக்கம்டி.ஜெ.ஞானவேல், இசைஅனிருத், ஒளிப்பதிவுஎஸ்.ஆர்.கதிர், தயாரிப்பு வடிவமைப்புகே.கதிர், சண்டை இயக்கம்அன்பறிவ், படத்தொகுப்புபிலோமின்ராஜ், திரைக்கதைபி.கிருத்திகா, கலை இயக்கம்சக்தி வெங்கடராஜ், நடன இயக்கம்தினேஷ், ஒப்பனைபானு, பட்டணம் ரஷீத், ஜிதேந்திர சாவன்ட், உடைகள் வடிவமைப்புபெருமாள் செல்வம், அனுவர்த்தன், வீரா கபூர், தினேஷ் மனோகரன், லிஜி பிரேமன், புகைப்படங்கள் எஸ்.ஆர்.முருகன், பத்திரிக்கை தொடர்புரியாஷ் கே.அஹமத், சதீஷ்(TEAM AIM).

இயக்குநர் ஞானவேல் தனது முந்தைய படமான ஜெய் பீம் படத்தில் காவல் துறையினர் ஏழை, எளிய மக்கள் மீது நடத்திய அராஜகம் மற்றும் அத்துமீறலையும், படுகொலை செய்வதையும் அப்பட்டமாகக் காட்டியிருந்தார். இந்தப் படத்தில் நாடு முழுவதும் போலீஸார் செய்யும் போலி என்கவுண்ட்டர்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக டிரான்ஸ்பரில் வந்து சேர்கிறார் அதியன் என்ற ரஜினிகாந்த். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அதியன், மிக அதிக கிரைம் ரெக்கார்டுகளைக் கையில் வைத்திருக்கும் குற்றவாளிகளை தயவு தாட்சண்யமே பார்க்காமல் என்கவுண்ட்டர் செய்துவிடுவார். கன்னியாகுமரிக்குள் கால் வைத்ததும் அதையே செய்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு உள்ளடங்கிய கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் பிஸிக்ஸ் ஆசிரியையாக இருக்கும் துஷாரா விஜயன், கஞ்சா கடத்துபவர்கள் தங்களது பள்ளியை கஞ்சா குடோனாகப் பயன்படுத்துவதைக் கண்டறிகிறார்.

மனம் கொதிக்கும் துஷாரா, இது குறித்து எஸ்.பி. அதியனுக்குத் தகவல் கொடுக்கிறார். அதியன் இது உண்மைதானா என்பதை தனக்குக் குற்ற வழக்குகளில் துப்புத் துலக்க உதவி செய்யும் பேட்ரிக் என்ற பகத் பாசில் மூலமாக அறிந்து கொண்டு மொத்த டீமையும் பொறி வைத்துப் பிடிக்கிறார். இந்தக் கஞ்சா கும்பலின் தலைவனையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுகிறார்.

துஷாரா விஜயன் பி.ஹெச்டி படிப்பதற்காக சென்னைக்கு டிரான்ஸ்பராகி சென்றவர், திடீரென்று ஒரு நாள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையில் குற்றவாளி என்று சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டவர் தப்பியோடுகிறான்.

அவனைக் கண்டுபிடித்து ஸ்பாட்டிலேயே என்கவுண்ட்டரை கிரியேட் செய்து கொலை செய்கிறார் அதியன். இந்த என்கவுண்ட்டர் போலியானது என்று சொல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் பலரும் புகார் கொடுக்க இது பற்றி விசாரிக்க  மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான அமிதாப்பச்சன் சென்னைக்கு வருகிறார்.

அவர் தன்னுடைய விசாரணையில் அதியன் கொலை செய்த நபர் உண்மையான குற்றவாளி இல்லையென்று அதியனிடம் சொல்கிறார். அதிர்ச்சியடைந்த அதியன் இதை மேலும் விசாரிக்க, விசாரிக்க தான் கொலை செய்த நபருக்கும், இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்து கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து உண்மையான குற்றவாளியைத் தேடுகிறார். அந்தக் குற்றவாளியை அதியன் கண்டுபிடித்தாரா இல்லையா..? எதற்காக இந்தப் படுகொலை நடந்தது..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

‘அதியன்’ என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் எஸ்.பி.யாக நடித்திருக்கும் ரஜினிக்கு போலீஸ் வேடமென்றால் அல்வா சாப்பிடுவதுபோல..! அவருடைய முந்தைய போலீஸ் படங்களெல்லாம் அவருடைய மாஸான ஆக்சன் காட்சிகளுக்காகவே இன்று வரையிலும் பேசப்படுகின்றன.

ஆனால் இந்தப் படத்தில் அந்த அதிரடி ஆக்சன்களையெல்லாம் கொஞ்சம் குறைத்துவிட்டு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகவே பவனி வருகிறார். முதல் பாதியில் என்கவுண்ட்டரை ஆதரிக்கும்விதமாய் பேசும் ரஜினி, இரண்டாம் பாதியில் அதற்கு நேரெதிராய் முடிவெடுக்கும் ஒரு மனிதராக உருமாறுகிறார்.

சமூக விரோதிகளை என்கவுண்ட்டர் செய்வதைவிடவும், மக்களுக்குப் பாதுகாவலனாகத்தான் காவல்துறை செயல்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டும் விதமாக இரண்டாம் பாதியில் அவர் நடித்திருக்கும் தொனி நிச்சயமாக மக்களுக்குப் பிடித்தமானது.

வருடைய இப்போதைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் ரஜினி ஸ்டைலில் நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு, சண்டை காட்சிகளில் காட்டும் ஆக்சன் என்று தனது பக்காவான படை பரிவாரங்களை திரையில் காட்டியிருக்கிறார் ரஜினி. அதிலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் குறி வச்சா இரை விழணும்என்று அடிக்கடி சொல்லும் பஞ்ச் வசனம் அவரது ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் பூஸ்ட்டாகவே அமைந்துள்ளது.

ஆனால் ரஜினியின் வயதும், அவருடைய உடல் வாகுவும் சண்டை காட்சிகளில் அவருடைய ஸ்பெஷலான வேகத்தைக் கொடுக்காமல் விட்டிருக்கிறது. அவருடைய தோற்றமும் வயதானதை பறைசாற்றுவதைப் போல அமைந்திருப்பதால் அவருடைய ரசிகர்களுக்கே மிகப் பெரிய ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது.

இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் முதல்முறையாக தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப்பச்சன், தனது அடர்த்தியான, கம்பீரமான குரல் வளத்தாலும், தீர்க்கமான பார்வையாலும் தான் பேசும் வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும்விதத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

மலையாள உலகின் நடிப்புத் திலகமான பகத் பாசில் படம் நெடுகிலும் வரும் போலீஸ் இன்ஸ்பர்மர் கதாப்பாத்திரத்தில் அவ்வப்போதும் சிரிக்க வைத்தும், திரைக்கதையை நகர்த்தவும் பெரிதும் உதவியிருக்கிறார்.

மூளை இல்லைன்னா போலீஸ் ஆகலாம். திருடனாக முடியாதுஎன்று போலீஸையே கலாய்க்குமிடத்தில்தான் தியேட்டரே அதிர்ந்தது. இவருடைய சோகமான முடிவு நாம் எதிர்பாராதது.

நீட் கோச்சிங் கிளாஸ் என்று சொல்லி இந்தியா முழுமைக்கும் கோச்சிங் சென்டர்கள் நடத்தி ஆயிரம் கோடிக்கும் மேலாக சம்பாதிக்கும் நவீன இந்தியாவின் கொள்ளையனாக நடித்திருக்கும் ராணா டக்குபதியின் வில்லத்தனம் நச் என்று நம் மனதில் இடம் பிடித்திருக்கிறது.

ரஜினியின் மனைவியாக நடித்து ஒரு பாடலுக்கு துள்ளலாய் நடனமாடியிருக்கும் மஞ்சு வாரியர் அதிகக் காட்சிகள் இல்லையென்றாலும் கவர்கிறார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் ரசிகர்கள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்க வைக்க தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் மொத்த ஆடியன்ஸின் பரிதாபத்தையும் பெறும் அளவுக்கு நடித்து படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

இவர்கள் மட்டுமில்லாமல் கெட்ட போலீஸ் அதிகாரியாக கிஷோர், நல்ல போலீஸ் அதிகாரியாக ரோகிணி, பெண் தொழிலதிபர் அபிராமி, போலீஸ் டிஜிபி ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் என்று முகம் தெரிந்தவர்கள் அனைவருமே திரைக்கதையோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அனிருத்தின் இசையில் மனசுலாயோபாடல் முன்பேயே ஹிட்டடித்துவிட்டது. பாடல் காட்சியும், நடனமும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது. கூடவேவேட்டையன் தீம்மற்றும் ஹண்டர் வந்தார்பாடல்கள் பரவாயில்லை ரகமாக ஒலித்திருக்கின்றன. பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் அனிருத்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதை பிரேம் பை பிரேம் எடுத்துக் காட்டியுள்ளது. பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளில் ரஜினிக்குப் பெரிதும் உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனாலும் ரஜினியின் வயதான கைகளையும், முகத்தையும் அத்தனை குளோஸப்பில் காட்டியிருக்க வேண்டாமே..?!

படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ் முதல் பாதியில் திரைக்கதையை வேகமாக நகர்த்தியிருந்தாலும், இரண்டாம் பாதியில் வேறு, வேறு விஷயங்களைப் பேசியிருப்பதால் அவற்றைத் தொகுத்தளித்ததில் சிறிது தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.

ரஜினியின் உண்மையான அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான சமூக சிந்தனையுள்ள கருத்துக்களை அவரை வைத்தே பேச வைத்திருக்கும் இயக்குநர் ஞானவேலுவுக்கு முதல் நன்றிகள்.

நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் கொள்ளை, போலி என்கவுண்ட்டர்கள், அப்பாவிகள் மட்டுமே மாட்டிக் கொள்ளும் என்கவுண்ட்டர்கள் என்ற இன்றைய நாட்டின் அதிமுக்கியப் பிரச்சினைகளை ரஜினி மூலமாகவே மிக எளிதாக மக்களுக்குப் புரியும்வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரை நடிக்க வைத்திருக்கும் இயக்குநர், அவர்களை சரியாக கையாண்டதோடு, அவர்களின் கதாபாத்திரங்களையும் திரைக்கதையோடு ஒட்டி பயணிக்க வைத்திருக்கிறார்.

ஆனாலும் ‘காலா’, ‘கபாலி’, ‘ஜெயிலர்’ லெவலுக்கு ரஜினி ஸ்டைலுக்கு தீனி போடும் அளவுக்கு திரைக்கதையில் காட்சிகளும், வேகமும் இல்லாததால் இடைவேளைக்குப் பின்பு ரஜினி இருக்கும்போதே படம் போரடிக்கத்தான் செய்கிறது.

படம் முடிய முக்கால் மணி நேரத்துக்கு முன்பாகவே வில்லன் யார்.. கொலை குற்றவாளி யார் என்பது தெரிந்துவிட்டதால் அந்த சஸ்பென்ஸ் திரில்லர் உடைந்துபோய் விறுவிறுப்பும் குறைந்துவிட்டது.

நீட் தேர்வு மட்டுமில்லாமல், அனைத்துவித படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வினை வைத்து கல்வியை வியாபாரமாக்கியிருக்கும் இன்றைய மத்திய அரசின் திட்டங்கள், முடிவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பொருளாதாரக் குற்றங்கள்.. அதைத் தடுக்கும் சட்டங்கள்.. அதற்கான தண்டனைகள் போன்றவற்றை விளக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

எல்லாவற்றையும் கடந்து என்கவுண்ட்டர்கள் குற்றங்களைத் தடுக்க உதவாது. கடும் தண்டனையே குற்றவாளிகளை சீர்திருத்தும் என்ற உண்மையை உரக்கச் சொன்னதுக்காகவே இந்தப் படத்தை நாம் வாழ்த்தி வரவேற்போம்..!

வேட்டையன் – குறி தப்பவில்லை. ஆனால் வேகம் குறைவு..!

RATING : 3.5 / 5

Our Score