இந்தக் காலத்திற்கேற்ற கதைதான்.. நடுத்தர வர்க்கத்தினரின் கூடாத ஆசை எங்கே போய் முடியும் என்பதைத்தான் இதில் காண்பித்திருக்கிறார்கள்..!
ஒரு லேத் பட்டறையில் மேனேஜராக பணியாற்றி வரும் ஹீரோ செந்தில். இவருடைய மனைவி தேன்மொழி என்கிற விஜயலட்சுமி. 2 வயதில் ஒரு மகள். பெயர் வெண்ணிலா.
அழகான வீடு.. அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த நிலையில் பக்கத்து வீட்டிற்கு குடிவரும் இளவரசி என்ற பெண்ணால்தான் அந்தக் குடும்பத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
கந்துவட்டி பெரும் புள்ளியான முத்துராமனின் மகள் இந்த இளவரசி. திருமணம் ஆகியும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், இவர்களைத் தனிக்குடித்தனம் வைத்தால் குழந்தை உண்டாகும் என ஜோசியர் சொன்னதைக் கேட்டு இந்த வீட்டில் மகளையம், மருமகனையும் குடியமர்த்துகிறார் முத்துராமன்.
இயல்பாகவே துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக இருக்கும் தேன்மொழியின் நடத்தை தேன்மொழிக்கு பிடிக்காமலேயே இருக்கிறது. இந்த நேரத்தில் தேன்மொழிக்கு ஒருவன் செல்போனில் டார்ச்சர் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். அவன் ஒரு முறை தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்து கேட்டுவிடும் இளவரசி அவனை நையப்புடைக்கிறாள். இதனைப் பார்த்து தேனுக்கு இளவரசி மீது நட்பு உண்டாக.. அது இணை பிரியா நட்பாக உருவெடுக்கிறது..
இரு வீட்டாரும் நெருங்கிய சொந்தங்கள் போலாகிவிடுகிறார்கள். இந்த நேரத்தில் பட்டறை ஓனரின் மகள் திருமணத்திற்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் செந்திலும், தேனும்.. தேன்மொழி தனக்கு போட்டுக் கொள்ள நல்ல நகைகள் இல்லை என்பதால் திருமணத்திற்கு வர மறுக்கிறாள். கேட்டு பார்ப்போமே என்ற எண்ணத்தில் இளவரசியிடம் ஒரு நகையை கேட்டு வாங்கி கல்யாணத்திற்குச் செல்கிறார்கள்.
அங்கிருந்து திரும்பும்போது திடீரென்று ஒரு திருடன் நகையை அத்துக் கொண்டு ஓடிவிட.. பதைபதைக்கிறாகள் தம்பதிகள்.. செய்தியறிந்து இளவரசியும், அவள் கணவனும் அதிர்ச்சியாகிறார்கள். முத்துராமனுக்கு தகவல் செல்கிறது. அவரும் இதைக் கேட்டுவிட்டு லோக்கல் ஸ்டேஷனில் செந்திலை புகார் கொடுக்க வைக்கிறார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் செந்தில் மீதே சந்தேகப்பட.. முத்துராமனும் இதை நம்புகிறார். பணத்தையே பிரதானமாக நினைக்கும் முத்துராமன் தன் மகள் இளவரசியை பிரெயின் வாஷ் செய்து செந்தில் தம்பதிகளுக்கு எதிராக திசை திருப்புகிறார்.
இவர்களுடைய டார்ச்சர் தாங்காமல் ஊரில் விவசாயத்திற்காக விட்டு வைத்திருந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்கிறான் செந்தில். அந்தப் பணத்துடன் வீடு திரும்புபவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.. அதுதான் சஸ்பென்ஸ்.. முடிவு என்ன என்பதை தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!
பப்பாளி படத்திற்கு பிறகு செந்தில் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இது. ரொமான்ஸிலும், பக்குவமான கணவன் கேரக்டரிலும் சின்னத்திரை நடிப்பை காட்டியிருக்கிறார். முத்துராமனுடன் மோதலில் ஈடுபடும்போது தனது இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகளிலும்.. அக்காள் கணவருடன் சண்டையிடும்போதும் கேரக்டராகவே மாறியிருக்கிறார். வெல்டன் செந்தில்குமார் ஸார்.. கிளைமாக்ஸில் அசத்தியிருக்கிறார். நிச்சயம் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.. ஆனால் எதுவுமே செய்ய முடியாதவனால் இதைத்தான் செய்ய முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
விஜயலட்சுமி அழகான, குடும்பப் பெண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார். சிறந்த நடிகையாக பெயரெடுத்திருக்க வேண்டியவர்தான். படங்கள் இல்லாததாலும், அதற்கான பிளாட்பார்ம் கிடைக்காததாலும் இன்னமும் முன்னேறி வரும் நடிகையாகவே இருக்கிறார். செந்திலை கொஞ்சுகின்ற பேச்சும், நடிப்பும் மிக இயல்பு.. அந்த கசகசா, கசமுசா மேட்டர் சிரிக்க வைக்கிறது. நகை தொலைந்த பிறகு இறுதிவரையில் சோகத்தைக் காட்டியபடியே வருவதால் சீரியல் நடிகை போலாகிவிட்டார்.. ஆனால் அதிலும் குறைவில்லாமலேயே நடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சிருந்தா ஆசாப் இதில் இளவரசி வேடத்தில் நடித்திருக்கிறார். துவக்கத்தில் அடாவடி பெண்ணாக அறிமுகமாகி.. பின்பு அப்பாவின் செல்ல மகள்.. தேன்மொழியின் நண்பி.. அப்பாவின் தூண்டுதலால் பாசம் மாறி செந்திலின் மகளைக் கடத்துவதற்கு துணை போகும் அளவுக்கு போவதெல்லாம்.. இவருடைய நடிப்பில் குறையொன்றுமில்லைதான்..!
இளவரசியின் அப்பாவாக வரும் முத்துராமன் இந்த கந்துவட்டி வில்லன் வேடத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறார். பணத்திமிரை இப்படித்தான் சிலர் காட்டுவார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பாசமான அப்பா.. திடுக்கென்று கடுமையான வட்டிக்காரன் என்று இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்திருக்கிறார். இவருடைய கோபமான பேச்சால்தான் கிளைமாக்ஸ் அல்லல்படுகிறது..
தன்ராஜ் மாணிக்கத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.. கண்ணனின் ஒளிப்பதிவு கதையை மீறவில்லை.. முழுக்க முழுக்க படமாக்கலே பிரதானமாக இருப்பதால் அனைத்து தொழில் நுட்பத்தையும் கதை சொல்வதற்குள் அடக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்..
நடுத்தர வர்க்கத்தினர் அக்கம்பக்கம் மிக இயல்பாக பழகி நட்பாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். ஏதோ ஆத்திர அவசரத்துக்கு உதவுவதற்கு பக்கத்து வீடுகளைத் தவிர வேறில்லை என்பது அவர்களது நினைவு. ஆனால் அந்த நட்பை ஒரு அளவோடு கட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் நல்லது என்பது இந்தப் படம் நமக்கு உணர்த்தும் நீதி..!
எத்தனை சிரமங்கள் பட்டாலும் தங்கத்தின் மீதான மோகம் பெண்களுக்குக் குறைவதேயில்லை.. ஓசி நகையை வாங்கிப் போட்டாவது திருமணத்திற்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இங்கு அதிகம். அப்படிப்பட்ட சமயங்களில் எங்கோ, யாருக்கோ நடந்த ஒரு விஷயமாக இது இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நடந்த கதைதான்..
இப்போதெல்லாம் நிறைய திரைப்படங்கள் என்ன சொல்ல வருகின்றன என்பதை கடைசிவரையிலும் சொல்வதேயில்லை. ஆனால் வெளியில் ‘எங்க படம் மக்களுக்கு ஒரு பாடம்’ என்கிறார்கள்.. இப்படித்தான் படங்கள் வெளியாகி வந்த வேகத்தில் சுருட்டிக் கொள்கின்றன.
ஒரு காலத்தில் விசுவும், டி.பி.கஜேந்திரனும், வீ.சேகரும்தான் இது போன்ற குடும்பத்திற்குத் தேவையான படங்களை ஆசிரியர் என்கிற பொறுப்போடு வழங்கினார்கள். இன்றைக்கு இது போல கொடுப்பதற்கு ஒருத்தர்கூட இல்லை.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படியொரு அழகான படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கத்திற்கு நமது பாராட்டுக்களும்.. நன்றிகளும்..!
‘வெண்நிலா வீடு’ ஒரு அழகான குடும்பம்..!