மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு’ புகழ் பிரகாஷ் ராகவன், அர்ஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பகத்குமார், படத் தொகுப்பு – ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, இசை – அச்சு ராஜாமணி, சண்டை இயக்கம் – தினேஷ், மக்கள் தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – மனோஜ்குமார் நடராஜன். நேரம் – 1 மணி 42 நிமிடங்கள்.
மதுரையில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றும் வரலட்சுமி கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படம்தான் இந்த ‘வெல்வெட் நகரம்.’
கொடைக்கானல் மலைப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இடத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறது ‘அத்வைதா’ என்னும் கார்ப்பரேட் நிறுவனம். இதற்காக அந்த மலைப் பகுதியில் மக்கள் வசிக்கும் வீடுகளில் செயற்கையாக தீ விபத்தினை ஏற்படுத்துகிறது அந்த நிறுவனம்.
திரைப்பட நடிகையும், சமூக ஆர்வலருமான ‘கெளரி’ என்னும் நடிகை கஸ்தூரிக்கு இந்தத் தகவல் கிடைக்கிறது. அவரிடம் அந்த இடத்தை கார்பரேட் நிறுவனம் கைப்பற்ற நினைக்கும் தகவல்கள் அடங்கிய பைல் கிடைக்கிறது.
மதுரையில் லோக்கல் டிவி சேனலில் நிருபராக இருக்கும் பிரியா என்னும் வரலட்சுமிக்கு இந்தத் தகவல் கிடைக்கிறது. கஸ்தூரியின் நெருங்கிய தோழியான வரலட்சுமி இதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக கஸ்தூரியை சந்திக்க சென்னைக்கு வருகிறார்.
இவர் வரும் நேரத்தில் சென்னையில் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். கொலையாளிகள் யார் என்று தெரியாத நிலை. அந்த டாக்குமெண்ட்டுகளை கைப்பற்ற முடியாத நிலைமையில் தவிக்கிறார் வரலட்சுமி.
அதேபோல் அந்த கார்பரேட் நிறுவனத்தின் அடியாட்களும் அந்த டாக்குமெண்ட்டுகளை கைப்பற்ற வேண்டி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு காவல்துறையும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.
வரலட்சுமி சென்னையில் தன்னுடைய நண்பியான மாளவிகா சுந்தரின் வீட்டில் தங்கியிருக்கிறார். மாளவிகாவும், அவளது கணவரும் இரவு நேர பார்ட்டிக்காக ஹோட்டலுக்குப் போயிருந்த நேரத்தில் அங்கே திருட்டுக் கும்பலான அர்ஜய் டீமுடன் வந்த சந்தோஷ் கிருஷ்ணாவுடன் அடிதடியில் இறங்குகிறார் மாளவிகாவின் கணவர்.
தான் அடி வாங்கிவிட்டதை அவமானமாக கருதிய சந்தோஷ் கிருஷ்ணா, அர்ஜயை உசுப்பிவிட.. அவர்கள் மாளவிகாவின் பின்னாலேயே வந்து அவர்களுடைய வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
பெரிய பணக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டவுடன் வீட்டில் இருக்கும் வரலட்சுமி, மற்றும் அனைவரையும் அடித்து, உதைத்து அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்கிறது அந்தக் கும்பல்..!
இறுதியில் இந்தக் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா..? கஸ்தூரி மறைத்து வைத்திருந்த ஆவணங்களை கைப்பற்றினாரா..? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகி வரலட்சுமி எதையோ செய்யப் போகும் கோபத்தில் தோன்றுகிறார். நிச்சயமாக ஹீரோயின் படமாக இருக்கப் போகிறது என்று எண்ணும் நேரத்தில் கதையை மாற்றிவிட்டதால்.. வரலட்சுமி ‘வரு’வாக சுருங்கிப் போகிறார்.
பழங்குடியின மக்களுக்காகப் போராடப் போகிறார் என்று பார்த்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே கடைசிவரையிலும் போராடி ஜெயிக்கிறார். எப்படி பார்த்தாலும் இது அடிதடி படம் என்பதாலும், நடிப்புக்கு வாய்ப்பளிக்காமல் ஆக்சனுக்கே வாய்ப்பளித்திருப்பதாலும் இந்தப் படத்திற்கு வரலட்சுமி எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.
வரலட்சுமியின் தோழியாக நடித்திருக்கும் மாளவிகா ஓரளவு தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். அவரது கணவர் பிரதீப்பை மோசடிக் கும்பல் தாக்கும் போதும் அவர் காட்டும் கண்ணீரும், நடிப்பும், அவ்வப்போது தனது கண்களினால் பயத்தையும், தவிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மைக்கேல் அர்ஜித் கோஷ்டியில் ‘டில்லி’யாக ரமேஷ் திலக், ‘செல்வமாக’ சந்தோஷ் கிருஷ்ணா, ‘சித்தப்பாவாக’ கண்ணன் பொன்னையா, ‘ராக்கெட்டாக’ குமார் என்று ஐந்து ரவுடிகளையும் வைத்துக் கொண்டு கடைசிவரையிலும் மரணத்தோடு விளையாட விட்டிருக்கிறார் இயக்குநர்.
கொள்ளைக்கார கும்பலின் தலைவனாக நடித்திருக்கும் அர்ஜாய் அமைதியாக ரவுடி வேலையைச் செய்கிறாராம். வசனத்தில்கூட நிதானமமாக பேசுகிறார். செயல்படுகிறார். ஒரு வித்தியாசத்திற்கு என்று வைத்தால்கூட லாஜிக் உதைக்கிறது.
அவமானம் தாங்காமல் கொலை செய்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் சந்தோஷ் கிருஷ்ணாவும், தப்பான ஆளுககிட்ட வேலைக்கு வந்துட்டமோ என்று கடைசி நேரத்தில் வருத்தப்படும் ரமேஷ் திலக்கும்.. ரத்தம் சிந்தாமல் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் கண்ணன் பொன்னையாவும் கொஞ்சமாய் கவர்ந்திருக்கிறார்கள்.
இடையில் வரலட்சுமியின் தம்பியான பிரகாஷ் ராகவனை தாஜா செய்து மேக்கப் போடுறேன் என்று சொல்லி தன் கையில் எச்சில் துப்பி, அவர் முகத்தில் தடவுவதெல்லாம் அருவருப்பின் உச்சம். நீக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி.
கூடுதலாக லோக்கல் சப்-இன்ஸ்பெக்டர் மதன் குமார், டாக்குமெண்ட்டை தேடி வந்து இவர்களிடம் மாட்டிக் கொண்டு திடீரென்று நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாறி செய்யும் குழப்பம் படத்தை கொஞ்சமேனும் கடைசி நேரத்தில் பார்க்க வைத்திருக்கிறது.
மதன் குமாரின் போனில் இருந்து வரும், ‘அப்பா போனை எடுப்பா’ என்ற ரிங் டோனைக் கணித்து வரலட்சுமி உஷாராகும் காட்சி போன்ற டிவிஸ்ட்டுகளும் படத்தில் குறைவுதான்..!
ஒளிப்பதிவாளர் பகத் குமாரின் ஒளிப்பதிவில் படம் முழுவதிலும் நல்ல வெளிச்சம்.. வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களில் கேமிராமேனின் பங்களிப்புதான் அதிகம். இரண்டு சண்டை காட்சிகளை பிரமாதமாக படமாக்கியிருக்கிறார்கள். படத் தொகுப்பாளரின் கச்சிதமான தொகுப்பும் குறையே சொல்ல முடியாதபடிக்கு இருக்கிறது.
மிகவும் பிரயத்தனப்பட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அறையிலும் நடக்கும் கதைகள்.. அறையைவிட்டு வெளியில் வரும்போது நடப்பது என்று.. காட்சிகளைப் பிரித்து, பிரித்துக் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்.
‘Quentin Tarantino-வுக்கு நன்றி’ என்பதை டைட்டில் கார்டில் பார்த்த போதே சுதாரிப்பாக இருந்திருக்க வேண்டும். ஏதோவொரு வெளிநாட்டு படத்தின் கதைச் சுருக்கமாக இது இருக்க வாய்ப்புண்டு என்பதை படம் முடிந்த பிறகே அறிய முடிகிறது.
ஒரே படத்தில் இரண்டு கதையாக.. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாததாக தேர்வு செய்திருக்கிறார்கள். ஒன்று.. அந்த டாக்குமெண்ட்டை தேடி அலைவதையே முழு படமாக எடுத்திருக்க வேண்டும். அல்லது இந்தக் கொள்ளைக்கார கும்பல்களின் அட்டகாசத்தையே முழுப் படமாக எடுத்திருக்க வேண்டும். இரண்டையும் போட்டுக் குழப்பியிருப்பதால் படம் எந்தவிதத்திலும் நம்மைக் கவரவில்லை.
முதல் பாதியைவிட இரண்டாம் பாதிதான் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. இருந்தாலும், கதையும், திரைக்கதையும் எங்கே போகிறது என்பதே தெரியாத வகையில் திரைக்கதையை அமைத்திருப்பதால் ரசிகர்களையும் குழப்பமாகவே அமர வைத்து கடைசியில் தெளிய வைத்து வெளியே அனுப்புகிறார்கள்.
படத்தின் கதை என்ன என்பதைவிடவும் இந்தப் படத்திற்கு எதற்கு ‘வெல்வெட் நகரம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..!!