18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி கொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப் பேரரசி வேலு நாச்சியாரின் வரலாறு திரைப்படமாகிறது.
’வீர மங்கை வேலு நாச்சியார்- சிவகங்கை ராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தைத் திருநாளில் தொடங்குகிறது.
இது குறித்து படக் குழு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்தியில், “சிவகங்கையை ஆண்ட வீர மங்கை வேலு நாச்சியாரின் 224-வது நினைவு நாள் டிச.25 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி, ’வீர மங்கை வேலு நாச்சியார்- சிவகங்கை ராணி’ திரைப்படத்திற்கான அலுவலகத்துக்கு பூஜை போடப்பட்டது.
வீர மங்கை வேலு நாச்சியாரின் கதையை திரைப்படமாக எடுக்க சட்ட ரீதியாக தக்க உரிமை பெறப்பட்டுள்ளது. இப்படத்தில் வேலு நாச்சியாராக நடிக்க பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி திரையனுபவம் கொண்ட ராஜேந்திரன் மணிமாறன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ’சூரியவம்சம்’ ரீமேக்கில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு, தனது கேமராவால் ஜாலங்கள் செய்யும் தொழில் நுட்ப வித்தகர், ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார். அசோக் மேத்தா படத் தொகுப்பையும், டி.பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வையையும் செய்யவிருக்கின்றனர். நிகில் முருகன் மக்கள் தொடர்பு பணியைச் செய்யவிருக்கிறார்.
இவர்களுடன், உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரும் இந்தப் படத்தில் இணையவிருக்கிறார்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.