full screen background image

வெள்ள குதிர – திரைப்பட விமர்சனம்

வெள்ள குதிர – திரைப்பட விமர்சனம்

Cast: Harish Ori, Abhirami Bose, Regin Rose, Melady, Uthiri Vijayakumar and Others.

Written and Directed by: Saranraj Senthilkumar Cinematography: Ram Dev Music: Bharath Aaseevagan Lyrics: Guru, Ambika, Tamil Mani Editor: Pradeeep, Saranraj Senthilkumar Art Director: Kannan Dialogues: Saranraj Senthilkumar, Arulanandam Sound Design & Mixing : Antony Thomson Confirmist: Vijay Shiva Special MakeUp – Anusuya K Di & Colourist: Balagangadharan Dubbing & Mixing :Malini Jeyaraj, Arun kumar (Black & White Studio) Sound Effects: D. Narayanan Audiography (SFX & 5.1 Mixing): Tony J Antony Executive Producer: Harish Ori, Saranraj Senthilkumar Co – Director: Prabha Alles Associate Director: Azhaguselvan GR Assistant Directors: Vasu, Agni, S. Sakthivel Produced: Harish Ori Arthanari Production: Nijam Cinema Presented by : Dream Warrior Pictures

வருடத்திற்கு சில திரைப்படங்கள் மட்டுமே அனைத்து வகையான விருதுகளையும் பெறுவதற்கு தகுதியான திரைப்படமாக வெளிவரும். அந்த வகையில் இந்த ஆண்டு பல விருதுகளை பெறுவதற்காக போட்டியிடும் அளவுக்கு தகுதியான திரைப்படமாக வெளிவந்திருக்கிறது இந்த வெள்ள குதிர என்ற திரைப்படம்.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும் அவர்களுடைய தினப்படியான வாழ்வியல் சம்பவங்களையும் திருடர் கூட்டமாக இருக்கும் அரசியல் வியாதிகளும், அதிகார வர்க்கமும்.. எப்படியெல்லாம் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் ஒரு சாதாரண ஒரு மனிதன் தன் குடும்பத்தை காப்பாற்ற முயலும் போது அவனை கெட்ட செயல்களில் இழுத்து விடும் வாழ்க்கைச் சூழலையும் இத்திரைப்படம் கண் முன்னே வைத்திருக்கிறிருக்கிறது.

படத்தின் நாயகனான ஹரிஷ் கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் போதுமலை கிராமத்தை பூர்வீமாகக் கொண்டவர். அவருடைய தந்தை ஹரி சிறுவனாக இருக்கும்பொழுதே மலையில் இருந்து இறங்கி நகரத்திற்கு வந்து குடி பெயர்ந்துவிட்டார். அதனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலைமை என்பதால் தன்னுடைய மூதாதையர் வாழ்ந்த அந்த போதுமலை என்ற மலைப் பகுதிக்கு தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் வருகிறார் ஹரிஷ்.

அந்த ஊரில் அவருக்கென்று இருக்கும் ரத்த சம்பந்தமுள்ள உறவினரான தன்னுடைய பெரியப்பாவின் வீட்டில் குடியேறுகிறார் ஹரிஷ்.

அந்த மலைக் கிராமத்திலிருந்து கீழே இறங்கி செல்வதற்கு 15 கிலோமீட்டர் நடந்து வர வேண்டும். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அனைத்தையும் யாரோ ஒருவரிடம் சொல்லிவிடுவார்கள். யார் கீழே இறங்கினார்களோ, அவர்கள் மொத்தமாக வாங்கி வந்து தருவார்கள். இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த போதுமலையில் ஹரிஷின் தினசரி நடவடிக்கையும் இதுவாகவே மாறுகிறது.

அப்படி இருந்தும் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கவே அந்த ஊரில் இருக்கும் மற்றொரு உறவினர் மூலிகை ரசம் தயாரிப்பதில் வல்லவராக இருக்கிறார். அந்த ஊரில் ஏதாவது திருமணம் நடந்தால் மட்டும்தான் அந்த மூலிகை ரசத்தை தயாரித்து அன்றைய விருந்தில் கொடுப்பார் அந்தப் பெரியவர்.

அந்த மூலிகை ரசத்தை தினமும் கொண்டு வந்து கொடுத்தால் டாஸ்மாக் கடையில் அதை விற்று காசாக்க நினைக்கிறார் ஒரு பணக்காரர். ஹரீஷிடம் அதைச் சொல்லி அந்த மூலிகை ரசத்தை செய்து கொண்டு வரும்படி சொல்ல ஹரிசும் நிறைய பணம் கிடைக்கிறது என்ற எண்ணத்தில் சட்ட விரோதமான அந்த செயலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் அந்த ஊர் மக்களின் அப்பாவித்தனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு விஜயகுமார் என்ற வில்லன் அந்தக் கிராமத்தில் வசிக்கும் முக்கால்வாசி மக்களின் நிலங்களை பறித்துவிட்டார். இன்னமும் கொஞ்சம் நிலங்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில் திடீரென்று அந்த வில்லன் விஜயகுமாரின் முகமூடி கிழிகிறது.

அந்த ஊருக்கு பாதை அமைப்பதற்கு தமிழக அரசு ஒத்துக் கொண்டதாக வந்த கடிதத்தை யாரிடமும் காட்டாமல் மறைத்திருக்கிறார் விஜயகுமார். இது தொடர்பான சண்டையில் விஜயகுமார் அவமானப்பட தான் வாங்கிய சொத்து பத்திரங்களை கிராம மக்களிடம் திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் மூலிகை ரசம் தயாரிப்பை வனத் துறையினர் பார்த்து விட அவர்கள் அந்த பெரியவரின் மகன் மீதும் ஹீரோ ஹரீஷ் மீதும் வழக்கு பதிவு செய்கிறார்கள்.

ஹரிஷ் தலைமறைவாக இருக்க அவருடைய மனைவியான அபிராமி ஜோஷ் ஊர்க்காரர்களால் அவமானப்படுத்தப்படுகிறார் இதை சாதகமாக பயன்படுத்த நினைக்கும் விஜயகுமார் ஹரிஷின் குடும்பத்தையே போலீசில் மாட்டிவிட நினைக்கிறார்.

இதற்குப் பின் என்ன நடந்தது? நாயகன் ஹரிஷ் வனத்துறையிடமிருந்து தப்பித்தாரா அந்த ஊர் மக்களுக்கு நியாயம் கிடைத்ததா.. அரசு சாலை போட்டு கொடுத்ததா… என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் என்றாலும் அது வெளியில் தெரியாத வண்ணம் அவர் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்ற ஹரிஷ் தன்னுடைய பட்டறையின் பெயரையும் இந்தப் படத்தில் காப்பாற்றி இருக்கிறார்.

திக்கித் திக்கிப் பேசும் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை வைத்து தன்னுடைய கண்களாலேயே ஒவ்வொரு நடிப்பையும் அவர் காண்பித்த விதம் அருமை என்றே சொல்லலாம்.

அவருடைய மனைவி அவரை விட்டுப் பிரிவதாக சொல்லும்போது இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடு என்று அந்த மனைவியிடம் காலில் விழுகாத குறையாக கெஞ்சி கூத்தாடிய அவரை கிராமத்திற்கு அழைத்துவரும் அந்த காட்சியில் உண்மையாகவே நம்முடைய பரிதாபத்தை பெற்றுவிட்டார் ஹரிஷ்.

ஹரிஷின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாகவே தெரிகிறார். எந்த வகையிலும் சினிமா ஹீரோயினாக தன்னை காட்டிக் கொள்ளாமல் அந்த ஊர் மக்களின் மருமகளாக தனது உடை, மேக்கப், நடிப்பு என்று அனைத்துவிதத்திலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஹரீஷுக்கு பெரியப்பாவாக நடித்தவர் தன்னுடைய இயல்பான நடிப்பில் தன்னுடைய தம்பியின் பேரன், தனக்கும் பேரன் என்ற பாசத்தோடு அந்த பேரனை அணைக்கின்ற காட்சி நெகிழ வைக்கிறது.

மேலும் படத்தில்ந நடித்திருக்கும் பல நடிகர் நடிகைகள் அனைவருமே அந்த ஊர் மக்கள்தான். அந்த ஊர் மக்களை மிக அழகான நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் பரத் ஆசிகவன் பின்னணி இசை மூலமாக நம்மை அந்த மலை கிராமத்திலேயே உலாவ வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிக அழகான ஒரு பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். பல இடங்களில் பின்னணி இசை இல்லாமல் இருப்பதே படத்திற்குப் பலமாக அமைந்துவிட்டது.

ஒளிப்பதிவு செய்திருக்கும் ராம்தேவ் சூரிய வெளிச்சத்தை தவிர வேறு எந்த வெளிச்சத்தையும் பயன்படுத்தாமல் அந்த வெளிச்சத்திலேயே அந்த கிராமத்தை அழகாக காட்டி நமக்கு கொஞ்சம் பொறாமையையும் ஊட்டி இருக்கிறார்.

நகர்ப்புற காட்சிகளில் சிலவையே இருந்தாலும் மீதம் இருக்கும் காட்சிகள் அனைத்தும் அந்தக் கிராமத்தையே சுற்றி சுற்றி வருவதால் படத்தை நம்மால் பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.

படத்தின் இயக்குநரான சரண்ராஜ் செந்தில்குமார் படத்தின் பட தொகுப்பாளர் வேலையையும் செய்து இருப்பதால் அவர் என்ன நினைத்தாரோ, அதையே நமக்கும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.

படிப்பறிவில்லாத அப்பாவி பொதுமக்கள் எப்போதும் பேராசைப்படுவதே கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பிறந்த அந்த ஊரின் மீதான அவருடைய பற்றும், பாசமும் சாகின்றவகையில் இருக்கும். இந்த மண்ணில்தான் இறக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பத்தாம்பசலித்தனம் அல்ல. அது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

தாங்கள் இறந்தாலும் தங்களுடைய ஆவியோ, ஆன்மாவோ இந்தக் கிராமத்தில்தான் அலைய வேண்டும் என்ற அவருடைய அந்த விருப்பம் விலைமதிப்பில்லாதது.

15 கிலோமீட்டர் தூரம் இறங்கி திரும்பவும் மேலே நடந்து கிட்டத்தட்ட முப்பது கிலோ மீட்டரை நடந்தே வாழ்க்கையை ஓட்டும் அந்தக் கிராமத்து மக்களின் மனநிலையை சொகுசு வாழ்க்கை வாழும் நகரத்து மக்களாகிய நாம் ஒரு கணமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட இடங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து சாலை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும், அதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இந்தக் கதையோடு ஒட்டிய நீதியாக சொல்லியிருக்கிறார். இதற்காகவே அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதற்கிடையில் நாயகனின் அப்பா வைத்திருந்த ஒரு வெள்ளை குதிரையை வைத்து சென்டிமென்ட்டாக நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்த ஒரு உயிரினத்தை நினைத்துப் பார்க்கும்விதமாக அதையும் ஒரு சாமியாக்கியவிதம் உண்மையில் கிராமத்து மனிதர்களின் வாழ்வியல் சம்பவம் என்று சொல்லலாம். அதையும் இந்த திரைப்படத்தில் மிக அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.

நல்ல படங்கள் வரவில்லை.. வரவில்லை என்று புலம்புவதைவிடவும் இது போன்ற சிறந்த திரைப்படங்கள் இருந்தால் அதை பார்த்து பாராட்டி அந்தக் கலைஞர்களை ஊக்கிவிப்பது நம்முடைய திரை ரசிகர்களின் கடமை.

ஆக, இத்திரைப்படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படங்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது. பாருங்கள்.. மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 3.5 / 5

Our Score