full screen background image

ஒண்டிமுனியனும் நல்லபாடனும் – திரைப்பட விமர்சனம்

ஒண்டிமுனியனும் நல்லபாடனும் – திரைப்பட விமர்சனம்

Starring: Parotta Murugesan, Vijayan, Karthikesan, Chithra Natarajan, Vijay Senapathy, Murugan, Vikatan, Vidhya And Others

Banner: Thirumalai Productions Written & Directed by: Ra. Sugavanam Produced by: K. Karuppasamy Co-Produced by: Amaravathy Music Director: NTR (Natarajan Sankaran) Lyricist: Sengodan Title Music: Karthik Kailai Kuzhu DOP: J. T. Vimal Editor: Sathish Kurosaw VFX: Naveen Ragavendra Art: JK Antony Stunt: Mass Mohan Sound Design: Hari Prasad Colorist: Karthik Effects: Sekar DI: Sara Studio Stills: Theni Seenu Publicity Designer: Kambam Sankar

வருடா வருடம் வருட கடைசியில்தான் சிறந்த படங்கள் வெளிவரும். அதிலும் சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் சிறந்தவைகள் அனைத்துமே அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்ற மூன்று மாதங்களில்தான் தியேட்டர்களுக்கு வரும்.

அந்த வகையில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் இந்த ஒண்டிமுனியும் நல்லபாடனும் என்ற படத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதுவும் ஒரு கிராமத்து கதை. கிராமத்து மக்களின் வாழ்வியலை பேசும் திரைப்படம். இவர்தான் ஹீரோ என்று இந்த படத்தில் நடித்திருக்கும் பரோட்டா முருகேசனை காட்டினால் சினிமா தொழிலாளர்கள் மட்டுமல்ல, சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள்கூட நம்ப மாட்டார்கள், ஆனால், அப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பரோட்டா முருகேசன் என்ற இந்த 60 வயது முதியவர்.

இந்தப் படம் கொங்குச் சீமையில் படமாக்கப்பட்டுள்ளது. கொங்கு வட்டாரத்திலேயே விவசாயத்தை மட்டுமே முன்னிறுத்தும் கிராமங்கள்தான் அதிகம். அப்படியொரு கிராமத்தில் வாழும் கடினமான உழைப்பாளி பரோட்டா முருகேசன்.

கொங்கு வட்டாரத்தில் கடும் உழைப்பாளிகளை நல்லபாடன் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த பரோட்டா முருகேசனின் உழைப்பைப் பார்த்து அவரை நல்லபாடன் என்றுதான் அழைக்கிறார்கள். அதுவே, படத்தின் தலைப்பாகவும் மாறிவிட்டது. சிறப்பு.

நல்லபாடன் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் அந்த கிராமத்தில் வசிக்கிறார். தன்னுடைய சொந்த நிலத்தில் கடுமையாக உழைத்தும் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஒருநாள் அவருடைய மகன் கிணற்றில் விழுந்து விடுகிறான். அந்த மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க அவன் நல்லபடியாக பிழைத்து வந்தால் உனக்கு ஒரு ஆட்டை பலி கொடுக்கிறேன் என்று அந்த ஊருக்குள் இருக்கும் அவருடைய இஷ்ட தெய்வமான ஒண்டிமுனியிடம் வேண்டிக் கொள்கிறார் நல்லபாடன்.

அந்த சிறுவன் உயிர் பிழைத்து வந்துவிட தான் வேண்டிக் கொண்ட ஒண்டிமுனியால்தான் தன் பையன் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறான் என்று நினைக்கும் நல்லபாடன் முனியாண்டிக்கு பலி கொடுப்பதற்காக ஒரு சிறிய ஆட்டை வாங்கி வளர்த்து வருகிறார். இப்போது அந்த ஆடு பலி கொடுக்க வேண்டிய வயதுக்கும் வந்துவிட்டது.

தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நல்லபாடன் அந்த கோவிலில் பூஜை செய்து தன்னுடைய நேர்த்தி கடனை செய்ய நினைக்கிறார்.

ஆனால் இப்போது அந்த ஒண்டிமுனி கோவில் பூட்டப்பட்டு இருக்கிறது. காரணம் அந்த ஊரில் மிகப் பெரிய பணக்காரர்களான பண்ணையார்கள் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்தான்.

பெரிய பண்ணையார் கார்த்திகேஷன் மற்றும் சின்ன பண்ணையார் முருகன் என்ற அந்த ஊரின் பெரிய தலைக்கட்டுகளுக்கு இடையில் ஈகோ போர் நடக்க அந்தக் கோவில் திருவிழாவை நடத்தவிடாமலேயே இருவரும் தடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் நல்லபாடனாலும் ஒண்டிமுனிக்கு தன்னுடைய பரிகாரத்தை செய்ய முடியாமல் தவிக்கிறார்.

கிடாவும் இப்போது பெரிதாக வளர்ந்துவிட்டது. அதை இப்பொழுது பலி கொடுத்தால்தான் இல்லாவிடில் அது ஒரு வேளை இயற்கையாக இறந்துவிட்டால் ஒண்டிமுனிக்குத் தான் கொடுத்த வாக்கு செல்லாததாகி போய்விடுமே என்று நினைத்து பயப்படுகிறார் நல்லமாடன்.

இதற்கிடையில் நல்லமாடனின் மகள் தன்னுடைய மாமியார் வீட்டில் இருந்து விரட்டப்படுகிறாள். திருமணத்தின்போது மகளுக்கு அணிவிப்பதாக சொன்ன நகைகள் கொடுக்கப்படாததால் தன்னை மாமியார் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக மகள் சொல்கிறார்.

இன்னொரு பக்கம் அவருடைய மகன் வேலனும் வளர்ந்து வாலிபன் ஆகி இப்போது ஒரு பெண்ணை காதலித்து வருகிறான். அந்த காதலிக்கு டூவீலர் வாங்க வேண்டி இருப்பதால் அந்தப் பணத்திற்காக ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க இருக்கும் அந்த ஆட்டையை விற்க முடிவு செய்கிறான் வேலன்.

அந்த ஊர் மக்களின் நீர் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய அந்த ஊரில் ஒரு குளம் வெட்ட அரசு முடிவு செய்கிறது. இதற்காக அந்த ஊரிலேயே 50 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் பண்ணையார் கார்த்திகேசனிடம் அரசு ஐந்து ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுக்கும்படி கேட்கிறது.

இதை ஏற்க மறுக்கும் கார்த்திகேசன் திடீரென்று அந்த ஒண்டிமுணி சாமிக்கு திருவிழா நடத்த சம்மதம் தெரிவிக்கிறார். எப்படியோ கோயில் திறக்கப்பட்டு திருவிழா நடந்தால் தான் தன்னுடைய நேர்த்திக் கடனை செய்ய முடியும் என்பதால் முருகேசன் கார்த்திகேசனுக்கு ஆதரவு கொடுக்க கார்த்திகேசனும் முருகேசனிடம் நைசாகப் பேசி ஏமாற்றி அவருடைய ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறார்.

இதன் பின்னர் பண்ணையார் முருகனும் விழாவில் தான் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதால் திருவிழா நடத்த அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். இதை அடுத்து அந்த ஊரில் பல வருடங்கள் கழித்து திருவிழா நடக்கிறது. இந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அங்கே நடக்கிறது.

அந்த சம்பவம் என்ன..? நல்லபாடன் ஒண்டிமுனிக்கு கிடாவை பலி கொடுத்தாரா? இல்லையா? ஊர் ஒன்றுபட்டதா.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

அசல் கிராமத்தானாக தன்னுடைய குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் நல்லபாடனாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசன் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற  நடிப்பை காட்டுவதற்கு அவருடைய முகமும், உடலும் ஒத்துழைத்து இருக்கின்றன.

ஒரு கிராமத்து விவசாயியாக அப்பாவித்தனத்துடன் நடித்திருக்கும் பரோட்டா முருகேசன் நிச்சயமாக இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான பட்டியலில் போட்டியிடுகிறார் என்பது உறுதி.

பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் அடித்து தன் முகத்தை காட்டியிருக்கும் முருகேசன், இந்தப் படத்தில் நாயகனாக நடித்து ஒரு சாதனை படைத்திருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

பெரிய பண்ணையாராக நடித்திருக்கும் கார்த்திகேயன், சின்னப் பண்ணையார்  முருகன், இருவரும் தங்களது ஈகோதனத்தினால் ஒருவருக்கொருவர் முட்டிக் கொண்டும், கத்திக் கொண்டும், விரோதத்தை வளர்த்துக் கொண்டும் அந்த ஊரில் ஒரு நல்லதை  செய்யவிடாமல் தடுக்கும் வில்லன் நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள்.

மகன் வேலனாக நடித்திருக்கும் விஜயன், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மருமகனாக நடித்திருக்கும் விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன், இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விகடன் மற்றும் அந்த ஊர் மக்கள் அனைவருமே தங்களுடைய நடிப்பை சிறப்பாகவே காண்பித்து இருக்கிறார்கள் இதற்கு காரணம் இயக்குநரின் இயக்கத் திறமை

தொழில் நுட்பத்திலும் இந்த படம் சிறந்துதான் விளங்குகிறது. ஒளிப்பதிவாளர் விமல் தன்னுடைய கேமராவில் அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வளைத்து படமாக்கி இருக்கிறார். காலில் செருப்புகூட போடாமல் தங்களுடைய குடும்பத்திற்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் வெள்ளந்தியான மக்களை நம் கண் முன்னே அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் படம் எந்த ஒரு கோணத்திலும் வெளியில் போகாமல் ஒரே கதையோட்டத்தில் சீராக சென்று இருக்கிறது. பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் நம்மை கவர்ந்திருக்கிறார்.

முழுக்க, முழுக்க கிராமிய வாழ்க்கை என்பதால் அதில் கொஞ்சமும் மேற்பூச்சு எதுவும் இல்லாத வகையில் அழகாக தொகுக்கப்பட்ட காட்சிகளை நமக்கு கொடுத்திருக்கிறார் பட தொகுப்பாளர் சதீஷ் குரேசேவா.

ஒரு சாதாரண கதை கருவை வைத்துக் கொண்டு அந்தக் கதைக் கருவுக்குள் வரும் கதை மாந்தர்களின் வாழ்வியலை கொஞ்சம் அதிகப்படியாக சொல்லாமலும், எதையும் மறைக்காமலும், அருமையான ஒரு திரைக்கதை மூலமாக சுவாரசியமான கிராமத்து வசனங்கள் காட்சிகள் அமைப்பில் அந்த மண்ணின் வாழ்வியலை நாம் கண் முன்னே கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் சுகவனம்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அழகாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர் சுகவனம். கிராமத்து படங்களில் நகரத்தில் வாழ்பவர்களின் ஒரு ஏக்கமும் அடங்கி இருக்கும் என்பார்கள். அதுபோன்று இந்தப் படத்தின் கதை. திரைக்கதை. வசனம் மூலமாக ஒரு அழகான கிராம காவியத்தை பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுகவனம்.

அவருக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

RATING : 4 / 5

Our Score