பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரொடக்சன்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.’
இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி நிக்கி கல்ராணி, இயக்குநர் எழில் மாறன், நடிகர் சூரி, ரவி மரியா, இசையமைப்பாளர் C..சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநரும், நடிகருமான ரவி மரியா பேசும்போது, “படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘இறங்கி அடிச்சா எப்படி இருக்கும்’ என்று தலைப்பு வைத்திருக்கலாம். ஏன் என்றால் படத்தில் அனைவரும் அவ்வளவு தூரம் இறங்கி அடித்துள்ளனர்.
நான் இயக்குநராக பெரிய அளவில் மின்னவில்லை என்றாலும் நடிகனாக சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறேன். அதனால் தான் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். எப்போதும் இயக்குநர் எழில் எனக்கு மிக சிறந்த கதாபாத்திரங்களையே கொடுத்து வருகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது..” என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் சத்யா பேசும்போது, “நான் முதன் முறையாக இப்படத்தில் இயக்குநர் எழிலுடன் இணைகிறேன். நான் எப்போதும் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்கும்போது , முழு படத்தையும் பார்த்துவிட்டு இசையமைக்க மாட்டேன். ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து இசையமைப்பேன். ஆனால் இந்த படத்தை முழுவதும் பார்த்துவிட்டுத்தான் இசையமைத்தேன் காரணம் படத்தில் சூரியின் காமெடிதான். அந்தளவுக்கு சிறப்பாக இருக்கிறது..” என்றார்.
நாயகன் விஷ்ணு விஷால் பேசும்போது, “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் எனக்கு மட்டும்தான் பத்தாவது திரைப்படம் என்று நினைத்தேன். ஆனால் நான் இதைப் பற்றி எழில் சாரிடம் கூறும் நேரத்தில்தான் அவருக்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது. அதன் பின் இசை வெளியீட்டு நேரத்தில்தான் இசையமைப்பாளர் C.சத்யாவிற்கும் இது பத்தாவது படம் என்று தெரிய வந்தது.
‘நீர்ப்பறவை’ படத்திற்கு பின் நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான்.
படத்தில் ஒரு பாடலுக்கு கலர் கலரான உடைகளை எனக்கு படத்தின் உடை வடிவமைப்பாளர் ஜாய் அளித்தார். இது போன்ற ஆடைகளை இப்படத்தில்தான் அணிகிறேன். படத் தயாரிப்பில் இறங்க வேண்டுமா என்று முதலில் யோசித்த எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது..” என்றார்.
விழாவில் இயக்குநர் எழில் மாறன் பேசும்போது, “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 10-வது திரைப்படம்.
நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும், கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தது. விஷ்ணு விஷாலின் தனிச் சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள் எனலாம். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதைவிட அதை விளம்பரப்படுத்துவதுதான் கடினமான ஒன்று.
படத்தின் நாயகியான நிக்கி கல்ராணியை விஜய் டிவி மகேந்திரன் சார்தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது , படத்தில் அவர் பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளிலும் கலக்கியுள்ளார்…” என்றார்.












