full screen background image

வீட்ல விசேஷம் – சினிமா விமர்சனம்

வீட்ல விசேஷம் – சினிமா விமர்சனம்

Romeo Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects  சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படம், இந்தியில் நீனா குப்தா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

எல்.கே.ஜி.’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற இனிமையான பொழுது போக்கு திரைப்படங்களில் தனி நாயகனாக நடித்திருந்த RJ.பாலாஜி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் மற்றும் ஊர்வசி இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த மலையாள நடிகை K.P.A.C.லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல  முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கார்த்திக் முத்துக்குமார், கலை இயக்கம் – விஜயகுமார், பாடல்கள் – பா.விஜய், படத் தொகுப்பு – செல்வம் R.K., இசை – கிரீஷ் கோபாலகிருஷ்ணன், நடன இயக்கம் – தினேஷ், கதை – சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல், திரைக்கதை குழு – M.K.சுரேந்தர், J.ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக் V., T.S.கோபி, N.சிவகுரு, R.குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன், திரைக்கதை, வசனம் – R.J.பாலாஜி. ஆடை வடிவமைப்பு – திவ்யா நாகராஜன், ஒலி வடிவமைப்பு – S.விஜய் ரத்தினம், ஒலிக் கலவை – A.M.ரஹ்மத்துல்லா, வி.எஃப்.எக்ஸ் – R.ஹரிஹரசுதன், டி.ஐ.கலரிஸ்ட் – ராஜராஜன் கோபால், புகைப்படங்கள் – ராமமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், தயாரிப்பு நி்ர்வாகம் – N.விக்கி, தயாரிப்பு மேலாளர்கள் – P.செல்வ குமார்-சிவக்குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

R.J.பாலாஜி-N.J.சரவணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மூல படைப்பான ‘பதாய் ஹோ’வின் திரைக்கதையை, தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றியமைத்துள்ளனர்.

இந்த வீட்ல விசேஷம்’ படம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது. அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை  100% வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது.

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் சாதாரண விசயமாக கருதப்பட்ட விசயத்தை தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப பெரிய விசயமாக்கி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதை முடிந்தவரை சுவாரஸ்யமாக எடுத்ததில் தான் இயக்குநர்கள் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் தனித்துத் தெரிகிறார்கள்.

படத்தின் நாயகன் ஆர்.ஜே. பாலாஜி ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு ஒரு தம்பி உண்டு. 50 வயதிற்கு மேல் உள்ள அப்பா சத்யராஜ் அம்மா ஊர்வசி இருவருக்கும் மகன்கள் மீது பெரும்பாசம் உண்டு.

ஆர்.ஜே. பாலாஜி தான் வேலை செய்யும் பள்ளியின் தாளாளரான அபர்ணா பாலமுரளி மீது காதல் கொள்கிறார். இருவரின் காதலும் கனிந்து வரும் வேளையில் ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவான ஊர்வசி கர்ப்பமாகிறார்.

இத்தனை வயதுக்குப் பின் அம்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் பாலாஜியை கிண்டல் செய்ய.. பாலாஜிக்கு தன் அம்மா, அப்பா மீது வெறுப்பு வருகிறது. அந்த வெறுப்பைக் காட்டும் நேரத்தில் அவரின் காதலும் உடைபடுகிறது. இறுதியில் ஆர்.ஜே.பாலாஜியின் பிரச்சனைகள் எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஆர்.ஜே.பாலாஜி தனக்கு ஏற்றாப்போல ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார். அவர் டார்கெட் செய்துள்ள பேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும்படியே க்யூட்டாக நடித்துமுள்ளார். அவரின் முந்தைய படங்களில் இருந்து பார்க்கும்போது எமோஷ்னல் காட்சிகளில் இந்தப் படத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி தோற்றத்தில் கொண்டுள்ள முதிர்ச்சியை நடிப்பிலும் கொண்டு வந்திருக்கிறார். வயதான பின் அம்மா அப்பாவிற்கு வரும் உடல் சார்ந்த காதல் மீது எந்தத் தவறுமில்லை என்று அவர் ஆர்.ஜே.பாலாஜியிடம் சொல்லுமிடத்தில் அனைவரையும் கவர்கிறார் அபர்ணா பாலமுரளி.

ஆர்.ஜே அபர்ணா கூட்டணியை சிங்கிள் ஷாட்டில் துவம்சம் செய்துவிடுகிறது சத்யராஜ், ஊர்வசி கூட்டணி. இருவரும் இணைந்து அடிக்கும் லூட்டியில் பல்லு போன பாட்டிக்கும் பல்செட் கழறும் அளவிற்கு சிரிப்பு அள்ளுகிறது தியேட்டரில்.

குறிப்பாக க்ளைமாக்ஸில் ஊர்வசி காட்டும் பெர்பாமன்ஸுக்கு வயிற்று வலி கன்பார்ம். தன் முகத்தில் காட்டும் கோணல் மாணல் ரியாகஷன்களால் அதகளப்படுத்துகிறார். சத்யராஜ் அப்பாவி ரியாக்‌ஷன்களில் தனி ஆவர்த்தனம் செய்கிறார்.

படத்தில் இசை அமைப்பாளர் இந்தக் கதைக்கு தேவையான பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பணியும் சிறப்பான பணியே. அன்பை வெளிப்படுத்த வயது ஒரு தடையே இல்லை. கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் கணக்கு வழக்கில்லாமல் காதல் கொள்ளலாம் / கொள்ளணும் என்பதை போல்டாகச் சொல்லியுள்ளார்கள்.

படத்தின் வேகத்தில் சின்னச் சின்ன தடைகள் போல சில நீளமான காட்சிகள் இருக்கின்றன. காட்சி மொழியைவிட பேச்சு மொழியே படத்தில் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் அவை ரசனையாகவே இருப்பதால் இந்த ‘வீட்ல விசேஷ’த்தை வீட்டில் உள்ள அனைவரும் சென்று பார்க்கலாம்.

RATINGS : 3.5 / 5

Our Score