“சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடுங்க ஸார்..” – விஷாலிடம் கோரிக்கை வைத்த நடிகர்

“சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடுங்க ஸார்..” – விஷாலிடம் கோரிக்கை வைத்த நடிகர்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’.

இத்திரைப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் கமலா தியேட்டரில் நடைபெற்றது.

marimuthu

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து பேசும்போது, “விஷாலுடன் இது எனக்கு 5-வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலரை பார்க்கும்போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்தப் படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலின் அப்பாவை சந்தித்தேன். அப்போது அவருடன் நான் கை குலுக்கினேன். அடுத்த 3 நாட்களுக்கு எனக்கு அந்தக் கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். படத்தின் சண்டை காட்சிகள் தூள் பறக்கும் அளவிற்கு அருமையாக இருக்கிறது.

இந்தப் படத்தின் வெளியீட்டின் போது ஊரடங்கு அனைத்தும் நிறைவு பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இயக்குநருக்கு இதுதான் முதல் படம். அவருக்கு இது வெற்றிப் படமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

விஷால் சார் அவர்களுக்கு தனிப்பட்ட வேண்டுகோள். படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு உங்க கல்யாணம் நடக்கணும். அதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடுங்க ஸார்..” என்றார்.

டப்பிங் கலைஞர் ரவீனா ரவி பேசும்போது, “இந்த படம் என் வாழ்க்கையுடன் ஒன்றி இருக்கிறது. நானும் அப்பாவும்தான் இப்படத்தின் கதையை கேட்டோம். அப்பா பெரிதும் தலையிட மாட்டார். ஆனால், அப்பா இந்த படத்தில் என்னை நடிக்க சொன்னார். கொரோனா காரணமாக அவர் இப்போது என்னுடன் இல்லை. அவரின் ஆசிர்வாதம் என்னுடன் எப்போதும் இருக்கும்…” என்றார்.

தெலுங்கு மொழி வசனகர்த்தா ராஜேஷ் பேசும்போது, “இந்தப் படத்திற்கு தெலுங்கு மொழியில் ‘சாமானியன்’ என்று பெயர் வைத்துள்ளோம். தற்போது, நடக்கக் கூடிய ஒரு நடுத்தர குடும்பத்தின் பிரச்சனையை மையமாக கொண்ட படம் இது.

விஷால் பிலிம் பேக்டரி என்னுடைய வீடு போன்றது. வசனம் எழுதுவது மட்டும் என் வேலை இல்லை. என்ன சொன்னாலும் செய்வேன். விஷாலுடன் கிட்டதட்ட 15-20 வருடம் பயணித்திருக்கிறேன்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் புதுமை காட்டியுள்ளார். நான் யுவன் ஷங்கர் ராஜாவின் பெரிய ரசிகன். ரவீனா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் திருப்பு முனையே அவர்தான். அனைவருக்கும் நிச்சயமாக இந்தப் படம் பிடித்தமானதாக இருக்கும்..” என்றார்.

அறிமுக நாயகியான டிம்பிள் ஹயாதி பேசும்போது, “இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்த வாய்ப்பளித்த இயக்குநர் சரவணன் சார் அவர்களுக்கு நன்றி. என்னுடைய நீண்ட நாள் கனவு நினைவேறியது போன்று இருக்கிறது.

விஷால் சார் என்னுடைய இன்ஸ்பிரஷன். அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டாலும் பெரிதும் பொருட்படுத்த மாட்டார். மாரிமுத்து ஸார் ஏற்கனவே ‘அட்ராங்கி ரே’ என்ற தெலுங்கு படத்தில் என் அப்பாவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் எனக்கு மாமனாராக நடித்துள்ளார். அனைவரும் படத்தை திரையரங்கில் பாருங்கள்…” என்றார்.

Thu.Pa.Saravanan

இயக்குநர் து.ப.சரவணன் பேசும்போது, “அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த கதை வெற்றியடையும் என ஊக்கமளித்தவர் கருந்தேள் ராஜேஷ். அதேபோல், இறுதிவரை துணையாக இருந்தவர் பொன் பார்த்திபன்.

இந்த வாய்ப்பு குடுத்த விஷால் சாருக்கு நன்றி. இன்று நான் இங்கு நிற்பதற்கு காரணம் விஷால் சார்தான். இப்படத்தின் கதையை விஷால் சாரிடம் சொன்னபோது, “யுவனிடம் இந்தக் கதையைச் சொல்லு…” என்றார். பிறகு யுவன் சாரிடம் 30 நிமிடம் என்றுதான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், சொல்லி முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது.

பிறகு விஷால் சார் என்னை அழைத்து, “யுவன் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார். அந்தப் பெயரைக் காப்பாற்று” என்றார். அது இந்த நிமிடம்வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. அதை ஓரளவு நிறைவெற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்…” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, “விஷாலுடன் நிறைய படங்கள் பணியாற்றியிருக்கிறேன். பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. ஆனால், இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும்…” என்றார்.

vishal

நடிகர் விஷால் பேசும்போது, “இயக்குநர் து.ப. சரவணனின் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும் படத்தைப் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், “நல்ல கதை இருந்தால் கூறுங்கள்” என்றேன். அப்படி உருவானதுதான் இந்த ‘வீரமே வாகை சூடும்’ படம்.

இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையைவிட திரைக்கதைதான். புதிய இயக்குநருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

எப்போதும் நான் ஒரு புது இயக்குநரிடம் நல்ல கதையை கேட்டு விட்டால், அந்தப் படத்திற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். அதேபோல் இப்படத்திருக்கும் யுவன்தான் மியூசிக்.

நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள்தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும். ரவீனாவை என்னைப்போல் யாரும் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள். திறமையாக நடித்திருந்தார்.

மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார்.

மாரிமுத்து என்னிடம், “நீ சண்டையை விடவே மாட்டியா?” என்பார். “அதை என் எதிரிதான் முடிவு செய்யணும்…” என்று கூறுவேன். இதுதான் படத்தின் கரு.

வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர், மேலாளரைவிட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகிதான் முதலில் விசாரிப்பார்.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை; கோவில். என்னுடைய ரசிகர்களை எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்றுதான் கூறுவேன்..” என்றார்.

Our Score