ஃபரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பரித் தயாரிக்கும் புதிய படம் ‘வீரையன்’. படத்திற்கு இவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்
இதில் இனிகோ பிரபாகர் ஹீரோவாகவும், ‘இந்தியா-பாகிஸ்தான்’ படத்தில் நடித்த ஷைனி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், வேல.ராமமூர்த்தி, தென்னவன், ‘கயல்’ வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், விஜய் டிவி ஹேமா, இவர்களுடன் பிரீத்திஷா என்ற திருநங்கையும் நடித்துள்ளனர்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பரித், “கிராமப்புறங்களில் இன்றைக்கும் உயிரைவிட பெரிதாக கருதப்படும் மானமும், மரியாதையும் மிக முக்கியம் என்பதுதான் இந்தக் கதையின் முக்கிய அம்சம். இதற்கேற்றாற்போலத்தான் திரைக்கதை எழுதி அமைத்துள்ளேன்.
இந்தப் படத்தின் கதை 1990 காலகட்டத்தை பின்புலமாக கொண்டது. பொறுப்பான ஒரு அப்பா தன் மகன் மேல் நிறைய நம்பிக்கை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார். மகனோ நண்பர்களுடன் வெட்டியாக சுற்றித் திரியும் லோக்கல் பார்ட்டியாக இருக்கிறான்.
திடீரென்று குடும்பத்தில் ஏற்படும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையில் இருந்து தனது தந்தையைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழல் அந்த மகனுக்கு ஏற்படுகிறது. அதை அவன் செய்தானா..? எப்படி செய்து முடிக்கிறான் என்பதுதான் கதை.
கதை பழக்கமானதுதான் என்றாலும் வழக்கமான திரைக்கதையில் நான் இதைச் சொல்லவில்லை. இந்தக் கதை சொல்லும் பின்புலத்தில் சோழ மன்னர்கள் வாழ்ந்த பூமியான தஞ்சை கால ஓட்டத்தில் தடம் புரண்டு, இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறேன்.
பொதுவாக தஞ்சையின் வரலாற்று சின்னம் என்றால் கோவில் மற்றும் அரண்மனை இவற்றைதான் சொல்வார்கள். ஆனால் சோழர்களின் சிறப்பு இவ்வளவுதானா..? பாண்டியர்களின் படை எடுப்பாலும், காலப் போக்கில் பரமாரிப்பு இன்றியும் எவ்வளவோ கலைச் சிற்பங்கள் அழிந்து போயின. அதன் பின்னரும் நவீன அரசாங்க செயல்பாடுகளால் எவ்வளவோ அடையாளங்கள் சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதையும் மீறி இன்னமும் தப்பியிருக்கும் சோழ சாம்ராஜ்யத்தின் அடையாளங்கள், தஞ்சை மண்ணின் பல்வேறு பகுதிகளிலும், காவிரிக் கரையோரங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.
அவற்றையெல்லாம் தேடித் தேடிப் போய் பார்த்து, அந்த பகுதிகளைப் பின்புலமாக பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்தப் படத்தில் வரும் காட்சிகளின் இடங்களில் சுமார் 80 சதவிகிதம் இதுவரை எந்தவொரு கேமராவின் கண்களிலேயும் படாதவை. அப்படி நான் முதன்முதலில் படப்பிடிப்பு நடத்திய ஒரு பகுதியில்தான் ‘தாரை தப்பட்டை’ படம் படமாக்கப்பட்டுள்ளது.
எனது ‘வீரையன்’ படத்தின் பின்புலமாக வரும் ஒவ்வொரு இடமும், சோழப் பேரரசின் மிச்சமான கலை ராஜ்ஜியத்தைக் காட்டும். படத்தின் கதையின் முக்கிய அங்கமாக வரும் மானம், மரியாதை, குடும்பப் பெருமை, பரம்பரைப் பெருமை போன்ற விசயங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்தப் பின்புலங்கள் அமையும். அவை படத்துக்கான உணர்வாக்கத்துக்கு உதவும் அதே நேரம், படைப்பு ரீதியாகவும் ரசிகர்களை பெருமித உணர்வுக்கு ஆளாக்கும்..” என்கிறார் பெருமையோடு.