கவிஞர் சினேகன் புதிய படம் ஒன்றில், ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.
கவிஞர் சினேகன் ஏற்கெனவே ‘யோகி’ படத்தில் அமீருடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு ‘உயர்திரு 420’ படத்திலும் நடித்திருந்தார். இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ‘பொம்மி வீரன்’ என்றொரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இது நாட்டுப்புற கலைஞர்கள பற்றிய படமாம்.
இந்தப் படத்தில் சினேகனுடன் நாடகக் கலைஞர்கள், குரல்வள கலைஞர்கள், வாத்தியக் கருவி கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் என்று பலதரப்பட துறையைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் அனைத்துக் கலைஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதால் இதனைப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கைக் குறிப்பினை சேகரித்து ‘தமிழக நாட்டுப் புறக் கலைஞர்களின பதிவேடு’ என்கிற நூல் ஒன்றை தயாரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளார் சினேகன்.
இது பற்றிப் பேசிய கவிஞர் சினேகன், “இந்த நூல் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். இது நாட்டுப் புற கலைஞர்களுக்கு இடையே உலகளாவிய பரந்த தொடர்பை ஏற்படுத்தும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பு..” என்றார்.