ஒரு தயாரிப்பாளராக தனது பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து வருகிறார் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் எல்ரெட் குமார்.
இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோ 2’ திரைப்படம் ஓஹோவென ஓடாவிட்டாலும் ரசிகர்களிடையே பேசப்பட்டது என்பது உண்மை. தற்போது இவர் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘கவலை வேண்டாம்’ படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
இப்படி தரம் வாய்ந்த படங்கள் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்க, அடுத்து இவர் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வீரா’.
அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்த ‘வீரா’ படத்தை அறிமுக இயக்குநரான ராஜாராம் இயக்குகிறார், கிருஷ்ணா, கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், பாக்கியம் ஷங்கர் (கதை, திரைக்கதை, வசனம்), கலை இயக்குநர் செந்தில் ராகவன் மற்றும் இணை தயாரிப்பாளர் வி.மணிகண்டன் என வலுவான கலைஞர்கள் இந்த ‘வீரா’ படத்தில் பணியாற்ற இருப்பது மேலும் சிறப்பு.
“நல்ல தரம் வாய்ந்த கதை களம்தான் ஒரு திரைப்படத்தின் முழுமையான வெற்றியை நிர்ணயிக்கும். அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு கதை களத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குநர் ராஜாராம்.
நாங்கள் தயாரித்த ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்த நடிகர் கிருஷ்ணாவோடு நாங்கள் மீண்டும் இந்த ‘வீரா’ படத்திற்காக கை கோர்த்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் கூட்டணி ஒரு அதிர்ஷ்ட கூட்டணி என்றுகூட சொல்லலாம். விளம்பர பட உலகில் சிறந்த மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இந்த ‘வீரா’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி குவிக்கும் கருணா, இந்த ‘வீரா’ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நிச்சயம் அவருடைய கதாப்பாத்திரமானது ரசிகர்களின் ஆழ்மனதில் பதியுமாறு இருக்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்வேன்.
‘யாமிருக்க பயமே’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட கருணாவோடு நாங்கள் மீண்டும் இந்த ‘வீரா படத்திற்காக இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
ரஜினி சாரின் பட தலைப்பை எங்கள் படத்திற்கு வைத்திருப்பது எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் பெருமை. இந்த தலைப்பின் மூலம் அந்த சிறந்த மனிதரின் முக்கியத்துவத்தை நாங்கள் உணருகிறோம். ‘வீரா’ என்னும் தலைப்பை வழங்கியவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம் சார் தான். தமிழ் திரையுலகின் மிக பெரிய ஜாம்பவானாக கருதப்படும் பஞ்சு அருணாச்சலம் சாருக்கு இந்த தருணத்தில் எங்களின் மரியாதையை செலுத்த கடமைபட்டிருக்கிறோம்…” என்று கூறினார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.