‘முண்டாசுப்பட்டி’ திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் – தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்.
இதுவரை எவரும் கண்டிராத கதை களத்தை ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வழங்கிய பெருமை இயக்குனர் ராமிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்ற இந்த இருவர் வெற்றி கூட்டணி, தற்போது ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்கும் பெயரிடப்படாத அதிரடி படத்திற்காக இணைந்திருக்கிறது.
திரையுலகின் வர்த்தக களத்தில் தரமான திரைப்படங்களை கொண்டு கால் பதித்து வருகிறது ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ என்பதை இந்த படம் மூலம் உறுதியாக சொல்லலாம்.
“எனக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே முண்டாசுப்பட்டி படத்தில் இருந்தே நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. தன்னுடைய நூறு சதவீத ஒத்துழைப்பையும் இயக்குநருக்காக வழங்கும் ஒரு நடிகர் விஷ்ணு விஷால். அவருடன் இந்த படத்திற்காக மீண்டும் ஒரு முறை இணைந்திருக்கிறேன்.
பொதுவாகவே ஒவ்வொரு நடிகரின் திரையுலக வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு திரைப்படம் அவர்களுக்கு திருப்பு முனையாக அமையும். அந்த வகையில் உருவாகப் போகும் இந்த அதிரடி திரைப்படம் விஷ்ணு விஷாலின் திரையுலக வாழ்க்கையில் மீண்டும் ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ராம்.
“ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுப்பவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து நான்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அவருக்கு இந்த கதாபாத்திரம் கன கச்சிதமாக பொருந்தும். அவருடைய ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட கதை களத்தில் உருவாகிவரும் இந்த அதிரடி திரைப்படமானது நிச்சயமாக விஷ்ணு விஷாலை வேறொரு பரிமாணத்தில் பிரதிபலிக்கும்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு.