full screen background image

வசந்தகுமாரனால் எழுந்த மோதல்..!

வசந்தகுமாரனால் எழுந்த மோதல்..!

இந்தப் பிரச்சினை கடந்த சில மாதங்களாகவே திரையுலகத்தில் புகைந்து வந்ததுதான். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம் ரிலீஸான பின்பு தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடித்துத் தரும்படி விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொள்ள.. அவரும் ஒத்துக் கொள்ள.. 1 கோடி சம்பளம் பேசி.. அதில் 9 லட்சம் ரூபாய் அட்வான்ஸையும் கொடுத்துவிட்டார்.

படத்திற்கு ‘வசந்தகுமாரன்’ என்றும் பெயர் வைத்துவிட்டார்கள். கதை டிஸ்கஷன் ஓடிவிட்டது.. கதையும், திரைக்கதையும் முடிவாகியது. கதையின்படி விஜய்சேதுபதி கொஞ்சம் உடம்பை பெருக்க வேண்டும். பின்பு உடம்பை குறைக்க வேண்டுமாம். இது மாதிரியான உடலமைப்பில் வித்தியாசத்தைக் காட்ட வேண்டுமெனில் கொஞ்சம் பயிற்சியெடுத்து கூடுதல் காலமும் ஆகும். இதனால் விஜய் சேதுபதி வசந்தகுமாரனை அப்படியே விட்டுவிட்டு அப்போதைக்கு வந்த படங்களான ‘சூது கவ்வும்’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டால் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்து முடித்தார்.

ஆனால் அடுத்து ‘வசந்தகுமாரனி’ல் நடிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் தனது குருநாதர் சீனு ராமசாமி அழைத்தாரே என்று அவருடைய ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். அப்போது சுரேஷ் தரப்பில் கேட்டதற்கு “சீனு ராமசாமி எனது குருநாதர். தட்ட முடியவில்லை..” என்று உண்மையைச் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. விட்டுவிட்டார்கள்.

பொதுவாக திரையுலக வழக்கப்படி நடிகர்கள் எந்த நிறுவனத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்தார்களோ அதை முடித்துவிட்டுத்தான் அடுத்தப் படத்தில் நடிக்க வேண்டும். அப்படி முடியாதபட்சத்தில் அந்தத் தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டால்  அதற்கடுத்த படங்களில் நடிக்கலாம். இதற்கு தயாரிப்பாளர் நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் மிக அவசியம்.

விஜய் சேதுபதி சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்திற்கும், கெஸ்ட் ரோலில் நடித்த ‘திருடன் போலீஸ்’ படத்திற்கும், தனுஷ் தயாரிக்கும் ‘நானும் ரெளடிதான்’ படத்திற்கும் அடுத்தடுத்து சுரேஷிடம் ‘நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்’ வாங்கிக் கொடுத்திருக்கிறார். எப்படியும் நமது படத்தில் நடித்துக் கொடுத்துவிடுவார் என்றுதான் அவரும் நினைத்திருக்கிறார்.

ஆனால் இதன் பின்பு வசந்தகுமாரன் படம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை வளர்ந்து ஒரு கட்டத்தில் தடித்த பேச்சுத் தாக்குதலாக போய் முடிந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த விஜய் சேதுபதி “உன் படத்தில் நான் நடிக்க மாட்டேன். வாங்கின காசை வட்டி போட்டு கொடுத்தர்றேன். ஆளை விடு..” என்று சுரேஷிடம் சொல்லியிருக்கிறார்.

‘வசந்தகுமாரன்’ படத்திற்காக தான் இதுவரையிலும் அலுவலகம் அமைத்து, கதை டிஸ்கஷன் செய்து, உதவி இயக்குநர்கள் மற்றும் இயக்குநருக்கு கொடுத்த சம்பளத்தையும் சேர்த்து 90 லட்சம் செலவாகியிருப்பதாகவும் கூறுகிறார் சுரேஷ். இதனையும் மனதில் கொண்டு “2 கோடி ரூபாய் தருகிறேன். என்னை விட்டுவிடுங்கள்..”
என்கிறார் விஜய் சேதுபதி.

இப்போது இது ஈகோ மோதலாகிவிட.. “எனக்குக் காசெல்லாம் வேண்டாம். ஒப்பந்தப்படி என் படத்தில் நடித்துக் கொடுத்தே தீர வேண்டும்..” என்கிறார் சுரேஷ். ஆனால் விஜய் சேதுபதியோ விடாப்பிடியாக “அதான் காசு தரேன்ல.. வாங்கிட்டு போ..” என்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாகவே இந்த சச்சரவினால் மனம் குழம்பிய தயாரிப்பாளர் சுரேஷ், தனது முகநூல் பக்கத்தில் தான் பட நிறுவனத்தை மூடிவிட்டு சினிமாவுலகத்தைவிட்டே வெளியேறப் போவதாக எழுதியிருந்தார். அடுத்த நாள் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக பிரஸ்மீட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அது உடனேயே கேன்ஸல் செய்யப்பட்டது.

பின்பு இது தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சிலில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் விஜய் சேதுபதி இதையே சொல்ல.. சுரேஷும் தன் முடிவில் பிடிவாதமாக இருக்க.. எந்த முடிவும் எட்டவில்லையாம்.

vijay-sethupathi-1

இது தொடர்பாக விஜய் சேதுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை இது :

ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ-9 நிறுவனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறுதலான நடவடிக்கைளின் காரணமாகவும், அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும்  ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும், நான் வாங்கிய 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும் அன்றே கூறி விட்டேன்.

ஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்த போது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து ‘வசந்தகுமாரன்’ திரைப் படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன்.

நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ’புறம்போக்கு’ திரைப் படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்நிலையில் ‘வசந்தகுமாரன்’ திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

இது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நட வடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப் பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்.”

இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள்ளார்.

காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பதில் சொல்லும்விதமாக மதியம் 2 மணிக்கு ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் தனது தரப்பு விளக்கத்தைச் சொல்வதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் சுரேஷ். அப்போது இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டார் சுரேஷ்.

suresh-1

அந்த அறிக்கையில், “இன்று மதியம் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட அறிக்கையில் ஸ்டூடியோ-9 ஆர்.கே.சுரேஷாகிய நான் அவரை மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறியுள்ளதை கண்டு மிக அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவே இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பினை அவசரமாகக் கூட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நானும், விஜய் சேதுபதியும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் வெளிவந்த பத்தாவது நாளில் எனது ‘ஸ்டூடியோ-9’ தயாரிப்பு நிறுவனத்துக்காக விஜய் சேதுபதி ‘வசந்தகுமாரன்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக எங்களால் முதன்முறையாக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்று பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்த நாள் 2013 ஜனவரி 13. எங்களது ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்தில் டிசம்பர் 2013-ல் நடிப்பதாகக் கூறினார் விஜய் சேதுபதி.

டிசம்பர் 2013-ல் கேட்டதற்கு அவரின் குருநாதர் திரு.சீனு ராமசாமி அவர்களின் திரைப்படத்தில் நடிப்பதால் அதனை முடித்த பிறகு எங்கள் திரைப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக என்னிடம் கூறினார். நண்பர் என்ற முறையில் நானும் விட்டுக் கொடுத்தேன்.

இதற்கிடையில் ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்திற்காக அலுவலகம் அமைத்து Pre Production வேலைகளை ஆரம்பிக்கக் கூறினார். அவர் சொல்லின்படி அலுவலகம் அமைத்து வேலைகளைத் துவக்கினோம். அலுவலகத்தை அமைத்துவிட்டு ஆறு மாதங்கள் கழித்து கேட்டதற்கு தான் இப்போது நடித்து வரும் படங்கள் தாமதமாவதால், ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்திற்கு உடம்பை குறைத்துக் காட்டி கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டியிருப்பதால் தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கூறியதால் அதற்கும் எவ்வித மறுப்பும் இன்று சம்மதம் தெரிவித்தோம்.

இதனிடையில் தனுஷ் தயாரிக்கும் ‘நானும் ரெளடிதான்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனினும் தனுஷ் கேட்டுக் கொண்டதின் பேரில் நோ அப்ஜெக்சன் சர்பிடிகேட்டை தனுஷிற்கும், விஜய் சேதுபதிக்கும் அனுப்பி வைத்தோம்.

பிறகு எனது இணை தயாரிப்பாளர் நாசரை விஜய் சேதுபதி தொடர்பு கொண்டு தனக்கு இந்த சர்டிபிகேட் தேவையில்லை என்றும் தனக்கு ‘வசந்தகுமாரன்’ படத்தில் நடிக்க விருப்பமில்லை என்றும் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக நானும், இணை தயாரிப்பாளர் நாசரும் விஜய் சேதுபதிபதியை சந்தித்து பேசியபோது தனக்கு வசந்தகுமாரன் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்றும் தன்னை இந்த்த் திரைப்படத்தில் இருந்து விடுவிக்கும்படியும் அலுவலகம் அமைத்து Pre Production செய்ததற்கான செலவிற்கான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் தருவதாகக் கூறினார். மேலும் அப்படியும் இந்தப் படத்தில் நடித்தே ஆக வேண்டுமெனில் 1 அல்லது 2 வருடங்கள் கழித்து தான் நடித்துத் தருவதாகவும் அவரேதான் கூறினார்.

இவைகள்தான் ‘வசந்தகுமாரன்’ படம் தொடர்பாக நடந்த உண்மைகள்.

ஆனால், நாங்கள் அவரை மிரட்டுவதாகவும்  அவரிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயம். இதனால் எனது சமூக மதிப்பிற்கு மிகப் பெரிய பாதிப்பும், தொழில் ரீதியாக எனக்கு மிகப் பெரிய பாதிப்பும் ஏற்படும் சூழல்நிலை உள்ளதால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எனது தரப்பு உண்மைகளை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்..” என்று தெரிவித்துள்ளார்.

பிரஸ்மீட்டில் “என் முடிவில் எந்த மாற்றமுமில்லை. விஜய் சேதுபதி என் படத்தில் நடித்துக் கொடுத்துதான் ஆக வேண்டும்..” என்று உறுதியாகச் சொன்னார் சுரேஷ். “அவர்தான் மாட்டேன்றாரே.. வேற ஹீரோ பார்க்கலாமே..?” என்று கேட்டதற்கு, “அதெப்படி.. ஒப்பந்தம் போட்டிருக்கோம்ல.. இத்தனை மாசமா அவருக்காகக் காத்திருந்தேன்ல.. அதுக்கு பரிகாரம் வேணும்..” என்றார் சுரேஷ்.

லாபம்-நஷ்டம், கூட்டல்-கழித்தல் கணக்குக்கெல்லாம் தீர்வு சொல்லிவிடலாம். ஈகோ பிரச்சனைக்கெல்லாம் தீர்வினை மூன்றாவது ஆட்கள் தர முடியாது. சம்பந்தப்பட்டவர்களேதான் தீர்வினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் இரு தரப்பினருமே பாதிக்கப்படுவார்கள். காலம்தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது உறுப்பினரான சுரேஷின் நடவடிக்கைக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்திருக்கிறதாம். ஆனால் நடிகர் சங்கமோ இப்போதுவரையிலும் மெளனமாக இருக்கிறது.. இதுதான் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்ததற்கு காரணம்..!

சங்கங்கள் தீர்மானமாக, உறுதியாக, நேர்மையாகச் செயல்பட்டாலே திரையுலகப் பிரச்சினைகள் பாதியைத் தீர்த்துவிடலாம்..!

Our Score