full screen background image

‘சலவை நிலா பொழிகிறது’, ‘இளைய நிலா பொழிகிறது’ என்று மாறிய மர்மம்..!

‘சலவை நிலா பொழிகிறது’, ‘இளைய நிலா பொழிகிறது’ என்று மாறிய மர்மம்..!

பழைய காலத்தால் மறக்க முடியாத பொக்கிஷமான பாடல்களை எத்தனையோ முறை நாம் கேட்டிருக்கிறோம். கூடவே பாடியிருக்கிறோம். ஆனால் அந்தப் பாடல் உருவான நேரத்தில்கூட பல சுவாரஸ்யமான கதைகள் நடந்திருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை வெளியில் சொன்னால்தான் நமக்கே தெரிகிறது..

அப்படியொரு சுவாரஸ்ய கதையை இன்று மாலை ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘நனையாத மழையே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கூறினார்.

director r-sundarrajan

1978-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற பாவேந்தர் கவியரங்கத்தில் கவிஞர் அறிவுமதியை, முதன்முறையாக கவி பாட மேடையேற்றியவர் புலவர் புலமைப்பித்தனாம். இன்றைக்கு நடந்த விழாவுக்கு இருவருமே வந்திருந்தார்கள்.

புலவர் புலமைப்பித்தன் பேசும்போது அந்த கவியரங்கத்தில் அறிவுமதி பாடிய ஒரு கவிதைக்கு தான் திருத்தம் சொன்னதை எடுத்துரைத்தார். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் தனது பேச்சின்போது இதைக் குறிப்பிட்டுக் காட்டி தான் பேசும்போது அவர் சொன்ன ஒரு சுவாரஸ்யமான பாடல் சம்பந்தப்பட்ட கதை இது.

“பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற சாகாவரம் பெற்ற பாடலான ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில்  ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தார்.

vairamuthu

அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை பொருத்தமாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தை வேண்டுமென்று நான் கவிஞரிடம் வற்புறுத்தினேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னார். “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று அவரிடத்தில் சொன்னேன்.

R.Sundarrajan, Ilayaraja at Chithiraiyil Nilachoru Movie Audio Launch Stills

அப்போது இளையராஜாவும் என்னிடம்.. “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும். அவர் சொல்றதும் ஒருவித்த்தில் சரியானதுதான். இதுவரைக்கும் யாருமே நிலாவை வைத்து இப்படி எழுதியதில்லை..” என்று அட்வைஸ் செய்தார்.

அதற்கு நான், “இல்ல ஸார்.. இந்தப் படத்துல ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்று சொன்னேன். “ஓ.. நீ இப்படியெல்லாம் யோசிக்கிறியா.. சரி.. கதைக்கு தேவையில்லைன்னா மாத்திக்கலாம்..” என்று இளையராஜாவும் சொன்ன பிறகே வைரமுத்து அந்த வரியை ‘இளைய நிலா பொழிகிறது’ என்று மாற்றிக் கொடுத்தார்..!

அன்னிக்கு நான் மட்டும் அந்த வரியை மாத்தலைன்னா என்ன ஆகியிருக்கும்..? அந்தப் பாடல் இந்த அளவுக்கு பேமஸ் ஆயிருக்குமான்னு ஒரு பக்கம் சந்தேகம் வருதுல்ல. அதுனால பாடலுக்கோ, கவிதைகளுக்கோ திருத்தம் சொல்றது சரியானதுதான்…” என்றார் ஆர்.சுந்தர்ராஜன்.

சந்தேகம் உண்மையானதுதான்..!

அது போகட்டும்..  ‘சலவை நிலா’வுக்கு என்ன அர்த்தம்..?

[இந்தச் சம்பவத்தை இதற்கு முன்னரே பல மேடைகளில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் குறிப்பிட்டு பேசியிருந்தாலும் நம் சினிமா தளத்தில் இதனை பதிவு செய்வது இதுதான் முதல் முறை என்பதால் இங்கே பதிவிடப்படுகிறது..!]

Our Score