இப்போதெல்லாம் ஒரு சினிமாவிற்கு கிடைக்கின்ற மிகப் பெரிய விளம்பரமே திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிகின்றவரையில் அத்திரைப்படம் பற்றிய ஸ்டில்ஸ்களையோ, டீஸர்களையோ, டிரெயிலர்களையோ வெளியிடாமல் பொத்தி, பொத்தி பாதுகாப்பதுதான்..! இது அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி ரசிகர்களை ஏங்க வைக்கும் என்பது திரையுலக அஷ்டாவதனிகளின் அவதானிப்பு..!
வசந்தபாலன். தமிழ்ச் சினிமாவின் மிகக் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். அவருடைய முதல் படமான ஆல்பம் தோல்வியடைந்தாலும், அடுத்து செய்த வெயில், அங்காடி தெரு ஆகிய படங்கள் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. கடைசியாக அவர் இயக்கிய அரவான் வெற்றி பெறாவிட்டாலும் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கிய படமாக இடம் பெற்றுவிட்டது.
இப்படத்தின் தோல்வியினால் பெரிதும் வருத்தப்பட்ட வசந்தபாலன், வெயில், அங்காடி தெரு போல அடுத்து ஒரு சூப்பர்ஹிட்டை கொடுக்கின்றவகையில் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. எங்கேயும் மேடையேறப் போவதில்லை என்கிற வைராக்கியத்தில் இருக்கிறார்.
அதனை குறிக்கோளாக வைத்து ‘காவியத்தலைவன்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இதில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், சித்தார்த், வேதிகா, லஷ்மி ராய், நாஸர், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன், எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் தயாரிக்கிறார்கள். வசனத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுத.. கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வசந்தபாலன்.
இந்தப் படத்தின் கதை 1930-களில் தமிழ்நாட்டில் இருந்த மேடை நாடகக் கலை தொடர்பானது என்கிறார்கள். மேலும் புகழ் பெற்ற மேடை நாடகக் கலைஞர்களும், காதலர்களுமான கே.பி.சுந்தராம்பாள், கி்டடப்பா இருவருடைய காதல் கதைதான் இப்படம் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப் படம் பற்றிய செய்திகளை அவ்வப்போது பேஸ்புக்கில் இடுவது மட்டுமே வசந்தபாலனுக்கும், வெளியுலகத்துக்குமான தொடர்பாக இருக்கிறது. இந்த நிலையில் முதல்முறையாக இன்றைக்கு தனது ‘காவியத் தலைவன்’ படத்தின் டைட்டில் டிஸைனை வெளியிட்டிருக்கிறார்..!
இனி அடுத்து ஸ்டில்கள்.. அதற்கடுத்து டீஸர்.. அதற்கும் அடுத்து டீரெயிலர்கள்.. இசை வெளியீட்டு விழா, டிரெயிலர் வெளியீட்டு விழா, பிரஸ் மீட், கடைசியாக மெயின் பிக்சர் என்று நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு..!
இந்தக் காலத்துல ஒரு சினிமாவுக்கு எப்படியெல்லாம் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கு பாருங்க..!