full screen background image

“தெலுங்கு கவிஞரின் பாடல் வரிகளை கண்ணதாசன் பயன்படுத்தினார்!” –  இயக்குநர் வி.சி.குகநாதன் பேச்சு!

“தெலுங்கு கவிஞரின் பாடல் வரிகளை கண்ணதாசன் பயன்படுத்தினார்!” –  இயக்குநர் வி.சி.குகநாதன் பேச்சு!

1972ல் வெளிவந்த படம் தமிழ்த் திரைப்படம் ‘வசந்த மாளிகை’. திரையிட்ட இடங்களில் எல்லாம் 25 வாரங்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம்.

50 வருடங்களுக்கு பிறகு இந்த ‘வசந்த மாளிகை’ திரைப்படத்தை கோவை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், டெக்கான் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான தம்பிதுரை, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜனவரி மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

டிஜிட்டலில் மாற்றி 8.1. சவுண்ட் சிஸ்டத்தில் டால்பி அட்மாஸ் ஒலியில் ரிலிசாகும் இந்த ‘வசந்த மாளிகை’ படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் திரைப்பட எழுத்தாளரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகநாதன் டிரெய்லரை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, “டி.ராமாநாயுடு தயாரித்த ‘வசந்த மாளிகை’ படத்தின் கதை தெலுங்கில் ஒரு பெண் எழுதி புத்தகமாக வந்த கதையாகும். இதை நாயுடு அவர்கள் தெலுங்கில் தயாரித்தார். அதே சமயம் தமிழிலும் தயாரிக்க விரும்பினார். பலரிடம் பேசியும் அவர்கள் இந்த கதையில் நடிக்க முன்வரவில்லை.

“அதே வேளையில் என்.டி.ஆர். நடித்து ராமநாயுடு தயாரித்து வெளியிட்ட ஒரு தெலுங்கு படம் பெரிய ஹிட்டாகி ஓடி கொண்டிருந்தது. அந்தப் படத்தின் தமிழ் உரிமையை தனக்கு வழங்கினால் ‘வசந்த மாளிகை’ படத்தின் கதையை நான் உங்களுடன் சேர்ந்து தயாரிக்கிறேன்” என்று நாகிரெட்டி கூறவும் சற்றும் யோசிக்காமல் “சரி” என்று கூறினார் ராமாநாயுடு.

நாகிரெட்டியாருக்கு என்.டி.ஆர். நடித்து வெற்றி பெற்ற படத்தின் உரிமையை ராமநாயுடு வழங்கினார். அதுதான் எம்.ஜி.ஆர். நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘எங்கள் வீட்டு பிள்ளை’ திரைப்படம். இதன் பின்பு நாகிரெட்டியாரும், ராமநாயுடுவும் இணைந்து விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் பேனரில் தயாரித்த படம்தான் இந்த “வசந்த மாளிகை”.

இதை ‘படம்’ என்று சொல்ல மாட்டேன். ‘ஒரு பல்கலைக் கழகம்’ என்றுதான் சொல்வேன். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், கவிஞர் கண்ணதாசன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட் என பல தூண்களால் செதுக்கப்பட்ட இந்தக் காவியம் ‘திரை உலகினருக்கு ஒரு பல்கலைக் கழகம்’ என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

இதில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக “இரண்டு மனம் வேண்டும்; இறைவனிடம் கேட்பேன்” என்ற வரிகள் (இதன் தெலுங்கு பதிப்பில்) கவிஞர் ஆத்ரேயா எழுதிய வரிகள். அதை அப்படியே எடுத்து தமிழில் கண்ணதாசன் பயன்படுத்தினார். எத்தனை காலங்கள் கடந்தாலும் இன்றைய இளைய சமூகத்தினருக்கு இத்திரைப்படம் புத்தம் புதிய படமாகவே இருக்கும்…” என்று வாழ்த்தினார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், அரவிந்த் ராஜ், பேரரசு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இணை செயலாளர் எஸ்.சௌந்தரபாண்டியன், கோவை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் குமார், இணை செயலாளர் ரகுபதி ஆகியோரும் வாழ்த்தி பேசினார்கள்.   முடிவில் பத்திரிக்கை தொடர்பாளர் விஜயமுரளி நன்றி கூறினார்.

Our Score