ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் – கோழிக்கடை கோபால் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘எல்லாம் நன்மைக்கே.’
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘ஒன் வே’ படத்தில் நடித்த தமிழ் பாண்டியன் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம் நடிகர் தேர்வு நடக்கிறது.
1980-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை அம்பிகா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, அனுமோகன், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.
முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராகப் பயின்ற ராஜா பரணிதரபிரபு இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தனது முதல் படமாக இயக்குகிறார்.
படத்தின் இயக்குநரான ராஜா பரணிதரபிரபு இந்தப் படம் பற்றிப் பேசும்போது, “இந்த ‘எல்லாம் நன்மைக்கே’ படம் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக உருவாகிறது.
படத்தின் கதையைக் கேட்ட நடிகை அம்பிகா, “இது மக்களுக்கு மிகவும் பிடித்த கதை” என்று பாராட்டியதை எனக்குக் கிடைத்த விருதாக கருதுகிறேன். அம்பிகாவின் மகளாகவும், கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.
இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம்..” என்றார்.
இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது.