யாக்கை பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் அய்யாவுவாக ராதாரவி, ஜானாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, அக்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, நண்பராக கௌசிக், ரம்யாவாக கிரண்மாய்,கமுதியாக தும்கன் மாரி, துளசியாக குழந்தை ஜாய்ஸ், சீமாவாக ஐஸ்வர்யா நடித்துள்ளனர்.
இணை தயாரிப்பு: வான் புரொடக்ஷன்ஸ், இணை தயாரிப்பாளர்: ஜெயவேல்முருகன், இசையமைப்பாளர்: போபோ சஷி. ஒளிப்பதிவாளர்: எஸ்.ஸ்ரீராம் சந்தோஷ், படத் தொகுப்பு – யு.முத்தையன் டிஎஃப்டி, சண்டை இயக்குநர்: தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர்: பது, நடனம்: தினேஷ், பாப்பி, விளம்பர பாடல் நடனம் : ஸ்ரீதர், ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக், பத்திரிக்கை தொடர்பு : நிகில் முருகன்.
இந்த வருணன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல்முருகன்.
சென்னையில் ரவுடியிசம் என்றாலே அது வட சென்னைதான் என்பதை சொல்ல வந்திருக்கும் 101-வது திரைப்படம் இது.
ரவுடியிசத்தின் அடிப்படையாக இந்த முறை தண்ணீரை கையிலெடுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவனின் வாக்கு.
அந்த தண்ணீர் இப்பொழுது தமிழகத்தில் மட்டுமல்ல… உலகம் முழுவதுமே மிகப் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. அந்த தண்ணீர் தொழிலில் ஈடுபடும் இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் மோதலும், அடிதடியும், வெட்டுக் குத்து, கொலைகளும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
வடசென்னை ராயபுரம் பகுதியில் ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழிலே செய்து வருகிறார் அய்யாவு என்ற ராதாரவி. இதே ஏரியாவில் இன்னொரு பகுதியில் சரண்ராஜ் இதே தொழிலை செய்து வருகிறார் ஜான் என்ற சரண்ராஜ். அவருடைய மைத்துனர் டப்பா என்ற சங்கர்நாத் விஜயனும், சரண்ராஜின் மனைவி மகேஸ்வரியும் இவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
ராதாரவியிடம் ஹீரோ துஷ்யந்தும், அவருடைய நண்பர் பிரியதர்ஷனும் வேலை செய்து வருகிறார்கள். சரண்ராஜூம், ராதாரவியும் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் செய்திருக்கிறார்கள். ஒருவர் வாட்டர் கேன் போடும் பகுதியில், இன்னொருவர் வாட்டர் கேன் போடுவதில்லை என்ற வாய்மொழி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் இருவரின் தொழிலும் இப்போதுவரையிலும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கிறது.
துஷ்யந்த் கேப்ரில்லாவையும், பிரியதர்ஷன் ஹரிப்பிரியாவையும் காதலித்து வருகிறார்கள். ஹரிப்பிரியா பிரியதர்ஷன் காதல் மட்டும் திருமணத்தில் முடிகிறது.
சரண்ராஜின் மனைவியும், மைத்துனனும் சரண்ராஜூக்கே தெரியாமல் தடை செய்யப்பட்ட சுண்டக் கஞ்சியைக் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்கள். இது தடை செய்யப்பட்ட பானம் என்பதால் அந்த பகுதியின் மதுவிலக்கு பிரிவின் இன்ஸ்பெக்டரான ரவி இதை ஒரு நேரத்தில் கண்டுபிடித்து தண்ணீர் பேக்டரிக்கு சீல் வைத்துவிடுகிறார்.
அதற்குப் பிறகு இன்ஸ்பெக்டர் ரவி தன்னுடைய சொந்த பணத்தை சரண்ராஜிடம் கொடுத்து வேறு பெயரில் அதே இடத்தில் வாட்டர் கேன் சர்வீஸ் நடத்த சொல்கிறார். இது விஷயமாக ராதாரவிக்கும், சரண்ராஜ் கோஷ்டிக்கும் இடையில் மோதல் வெடிக்க இதன் விளைவாக அடிதடி, வெட்டுக்குத்து, கொலைகளும் தொடங்குகின்றன.
முடிவில் யார் உயிருடன் இருந்தார்கள்.. யார் யாரை சாய்த்தார்கள்… என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக துவக்கப்பட்டு ஒரு வருடத்திலேயே படத்தை முடித்தும் விட்டார்கள். இப்பொழுது ஐந்தாண்டு காலம் கழித்துதான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் துஷ்யந்துக்கு இதுதான் முதல் படம் என்பதால் ரொம்பவே நாம் அவருடைய நடிப்பை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். படத்தை தான் தாங்கி பிடிப்பதற்கு பதிலாக ராதாரவி, சரண்ராஜ், மகேஸ்வரி என்ற திரைக்கதையில் நிறைய நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் இடையில் தானும் ஒரு நடிகனாக மட்டுமே இதில் தலையை காட்டி இருக்கிறார்.
இன்னொரு நாயகன் போன்ற கேரக்டரில் நடித்திருக்கும் பிரியதர்ஷனும் தன்னுடைய பங்களிப்பாக சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார். ஒரு நாயகியான காபிரில்லா மிகவும் சின்ன வயது பெண்ணாக இருந்தாலும் ஒரு முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஹரிப்பிரியா அனைவராலும் ரசிக்கும்படியான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்திருக்கிறார். எப்பொழுதும் பக்கத்து வீடு, அல்லது கடைகளிலேயே வாங்கி சாப்பிடும்படியான ஒரு சுவாரசியமான கேரக்டரில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
அய்யாவு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி தன்னுடைய முதிர்ச்சியான ஒரு நடிப்பை இதில் காண்பித்திருக்கிறார். அளவோடு நடித்திருக்கிறார். வசனங்களை ஏற்றி, இறக்கி உச்சரிப்பிலும் வசீகரமான நடிப்பை காண்பித்து… தன்னுடைய 60 வருட கால திரையுலக அனுபவத்தினால் இந்த படத்தைக் கொஞ்சம் பார்க்க வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் பழைய வில்லனான சரண்ராஜ் திக்குவாய்க் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தத் திக்குவாய் கேரக்டர் எதற்காக என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதராக அவரை காண்பித்து இருக்கிறார்கள். அதுவரையிலும் சந்தோஷம்தான்.
இவருடைய மனைவியாக நடித்திருக்கும் மகேஸ்வரியின் பேயாட்டம்தான் படத்தில் மிக, மிக சுவாரசியமானது. இவருடைய மைத்துனராக நடித்திருக்கும் ஷங்கர்நாத் விஜயனும் வில்லத்தனத்தை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜீவா ரவி, யாளியாக நடித்திருக்கும் அர்ஜுனா கீர்த்திவாசன், ரம்யாவாக நடித்திருப்பவர், துளசியாக நடித்த ஐஸ்வர்யா என்று அத்தனை பேருமே இயக்குநரின் சொல்படி கேட்டு நடந்து மிக சிறப்பான நடிப்பினை காட்டியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் வடசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை மிக அழகாக காண்பித்திருக்கிறார். படத்தில் முக்கால்வாசி காட்சிகளை இரவு நேர காட்சிகளாகவும், அதையும் சிவப்பு நிற பின்னணியில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் மிகவும் சிறப்பு என்று சொல்லலாம்.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான் அதே சமய பின்னணி இசையில் காட்டுக் கத்தலாக இல்லாமல் கொஞ்சமாக அடக்கி வசித்திருக்கிறார்.
கதை, எழுதி படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ஜெயவேல் முருகன் வட சென்னை ரவுடிகளை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக வாட்டர் கேன் தொழிலை மையமாக வைத்து இந்தப் படத்திற்கு கதை, திரைத்கதையை அமைத்திருக்கிறார்.
தொழில் வாட்டர் கேனாக இருந்தாலும், தொழிலினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அடிதடி, வெட்டு குத்து, கொலையாகவே இதிலும் காண்பித்திருப்பதால் நமக்கும் பல படங்களில் பார்த்த கொலைகளையே திருப்பவும் பார்த்தது போலவே தெரிகிறது.
இந்த வாட்டர் கேன் என்கின்ற ஒரு விஷயத்தை தவிர மற்றது எதுவும் நமக்கு புதிது இல்லை. எல்லாமே நாம் வேறு வேறு வட சென்னை படங்களில் பார்த்த சம்பவங்கள்தான்.
மொத்தத்தில் இந்த ‘வருணன்’ கொட்டவில்லை. அதே சமயம் சொட்டவும் இல்லை. அளவோடு மழையை தந்திருக்கிறார்.
RATING : 3 / 5









