full screen background image

சிட்டி ஆப் ட்ரீம்ஸ் – சினிமா விமர்சனம்

சிட்டி ஆப் ட்ரீம்ஸ் – சினிமா விமர்சனம்

சென்ற ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் அளவுக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்றிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் இது.

ஜீசஸ் என்ற அரி லோபஸ் 12 வயது சிறுவன், மிக்சிகோவில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறான். வாய் பேச முடியாதவன். தன்னுடைய பெயரை ஜீசஸ் என்று கைகளில் பச்சை குத்தி வைத்துள்ளான். மிகப் பெரிய புட்பால் பிளேயராக வேண்டும் என்பதுதான் இவனுடைய மிகப் பெரிய கனவு.

அவருடைய குடும்பத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வேலை பார்க்க வைத்து அந்தப் பணத்தில் நாம் வாழலாம் என்று நினைக்கும் இவனுடைய தந்தை வருகின்ற ஒரு புரோக்கரிடம் மகனை ஒப்படைக்கிறார்.

அந்த புரோக்கர் ஜீசஸை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வருகிறார். தான் ஒரு மிகப் பெரிய புட்பால் கோச்சிங் சென்டரில் சேர்ந்து கால்பந்து வீரனாக போகிறேன் என்ற கனவில் வந்த ஜீசஸை, அமெரிக்கவில் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் இருக்கும் ஒரு மர்மமான, மறைவான கொத்தடிமை கூடத்தில் விற்றுவிட்டு போகிறான் அந்த புரோக்கர்.

பழைய துணிகளை தைத்துக் கொண்டிருக்கும் அந்த கொத்தடிமை கூடத்தில் இருப்பவர்கள் அனைவருமே கடத்தி வரப்பட்டவர்கள்தான். குழந்தைத் தொழிலாளர்கள்தான். அவர்கள் அனைவரையும் அங்கே அடைத்து வைத்து ஒரு நாளைக்கு 18 மணி நேரம் அவர்களிடம் இருந்து உழைப்பை வாங்கி துணிகளை தைத்து கடைக்கு அனுப்பும் ஒரு பெரிய நாசக்கார கூட்டத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான் அரி லோபஸ்.

ஜீசஸ் அங்கே இருந்து பல முறை அவர் தப்பிக்க நினைத்து பின்பு மாட்டிக் கொண்டு சவுக்கடி வாங்கி உடல் முழுவதும் ரத்த காயத்துடன் சாவின் விழிப்புக்கே சென்று திரும்பினாலும் மீண்டும், மீண்டும் அவனுடைய புட்பால் கனவு அவனை உசுப்பேத்தி விட்டுக் கொண்டே இருக்க அங்கிருந்து தப்பிக்க அனைத்து வகை வழிகளையும் செய்து கொண்டே இருக்கிறான் ஜீசஸ்.

அவனுடைய தப்பித்தல் முயற்சி கடைசியாக என்ன ஆனது?.. அங்கேயிருந்து தப்பித்தானா?… இல்லையா?… அவனுடைய புட்பால் கனவு என்ன ஆனது?… என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சோகமான ஒரு திரைக்கதை.

சிறந்த நடிகருக்கான அத்தனை விருதையும் இந்த ஜீசஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அரி லோபஸ் என்னும் பையனுக்கே கொடுத்துவிடலாம். அப்படி ஒரு வெறித்தனமான நடிப்பை காண்பித்திருக்கிறான்.

இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நம் மனதை கொள்ளை கொண்டிருக்கிறான். அவன் கண்ணீர் விடும்போதெல்லாம் நமக்கும் கண்ணீர் வருகிறது. அவனுடைய சோகம் நம்மையும் தாக்குகிறது. அவனுக்கு விழுந்த அடிகள் எல்லாம் நமக்கு விழுந்தது போலவே இருக்கிறது அப்படி ஒரு நடிப்பினால் நம்மை பெரிதும் கவர்ந்து விட்டான் அரி லோபஸ். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

அதேபோல் இந்த படத்தில் நடித்த மற்றவர்களும் குறிப்பாக அந்த எலனா என்ற பெண்ணும் மிகச் சிறப்பாக நடித்து தன்னுடைய கேரக்டருக்கேற்ற நடிப்பை காண்பித்து நம்மையும் படத்துக்குள் மிக ஆழமாக இழுத்துவிட்டாள்.

அந்த இடத்தின் முதலாளியாக நடித்திருக்கும் எல்ஜெபின் ஒரு கெத்தான வில்லன். அவனது அடியாளான சீசரின் வெறித்தனமான நடிப்பும் பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது. அதேபோல் அவ்வப்பொழுது வந்து பெண்களை பாலியல் தேவைக்காக இழுத்துச் செல்லும் நிக்கோல் ஆண்ட்ரூஸூம் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் சார்ஜெண்ட்டும், உதவி சார்ஜண்டாக நடித்த இருவருமே தங்களுடைய அழகான நடிப்பை, கோபத்தை, வீரத்தை காட்டி இருக்கிறார்கள்.

அதிலும் அந்த பெண் சார்ஜன்ட் கடைசியில் ஒரு தெய்வமாக வந்து நின்று இவர்களை காப்பாற்றுகின்ற பொழுது நம்மை அறியாமலேயே நாம் கைதட்டி விடுகிறோம். அந்த அளவுக்கு படத்தின் இயக்குநர் மிகச் சிறப்பான ஒரு இயக்கத்தை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.

நடிப்பு மட்டுமில்லாமல், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்ற அத்தனையிலும் இந்தப் படம் மிக சிறப்பாகத்தான் இருக்கிறது. அந்தக் கொத்தடிமை கூடத்தின் இருட்டான தரையில்.. சின்ன விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த சின்ன குழந்தைகளின் உழைப்பும், உடம்பும், சுரண்டப்படுவதையும் தாக்கப்படுவதையும் காண்பிக்கும் பொழுது அமெரிக்காவிலும் இப்படியா நடக்கிறது என்று நம்மை அறியாமலேயே கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அந்தப் பையன் ஒரே ஒரு சமயத்தில் அதை இடத்திலிருந்து தப்பித்து ஓட்டமாக ஓடுகின்ற பொழுது ஓடு.. ஓடு ஓடு…” என்ற நம்மையும் சொல்ல வைத்து அவன் ஓடுகின்ற ஓட்டத்தை வைத்து நமக்குள் ஒரு சந்தோஷத்தை கொடுக்கும்விதமாக பின்னணி இசையை அமைத்து மிக அழகாக அந்தக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆள் கடத்தல், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை, அடிமைத்தனம் என்று இந்த மாதிரியான குற்ற செயல்களும் அமெரிக்க போன்ற மிகப் பெரிய நாடுகளில் நடக்கிறது என்பதை நம்மால் முதலில் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒரு சாதாரண குற்றங்களுக்கே அமெரிக்காவில் கடுமையான தண்டனைகள் இருக்கின்றபொழுது இது போன்ற குற்றங்கள் செய்வதற்கு எப்படி ஒரு சிலருக்கு மனம் வருகிறது?.. எப்படி மாட்டிக் கொள்ளாமல் இதை செய்கிறார்கள் என்கின்ற ஒரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.

ஆனாலும் இந்தப் படத்திற்கு பின்பு அங்கிருந்து சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களும், பத்திரிகை தகவல்களும் எண்ணமும் அமெரிக்காவில் இது போன்று கொத்தடிமை முறையும், அடிமைத்தனமும், குழந்தை கடத்தலும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் வருந்தத்தான் செய்கிறது.

இது போன்ற செயல்களை இந்தியாவில் முடியாவிட்டாலும் அமெரிக்காவிலாவது இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுங்கள் என்று இந்தப் படம் சொல்ல வைத்திருக்கிறது.

இது ஹாலிவுட் படம் மட்டுமே அல்ல.. உலகம் தழுவிய ஒரு திரைப்படம்.. உலகம் முழுவதும் இந்தக் கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் ஜீசஸ் போன்ற அப்பாவிகளின் வாழ்க்கையை சொல்ல வைத்திருக்கும் படம்.

இந்தப் படத்தில் பங்கு கொண்ட நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

RATING : 4.5 / 5

Our Score