“பாலாவின் ‘வர்மா’ படம் சரியில்லையாம்…” – குப்பையில் போட்டது தயாரிப்பு நிறுவனம்..!

“பாலாவின் ‘வர்மா’ படம் சரியில்லையாம்…” – குப்பையில் போட்டது தயாரிப்பு நிறுவனம்..!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலாவுக்கு இதுவரையிலும் நேராத ஒரு அவமானம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் கடைசியாக இயக்கியிருக்கும் ‘வர்மா’ என்ற திரைப்படத்தின் உருவாக்கம் சிறப்பாக இல்லை என்பதால் அதனைத் தூக்கியெறிந்துவிட்டு அதே கதை, அதே ஹீரோவை வைத்து வேறொரு இயக்குநர் மூலமாக படத்தை மீண்டும் உருவாக்கப் போவதாக அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகமே எதிர்பார்த்திருக்காத ஒரு டிவிஸ்ட் இது..!

தெலுங்கில் 2017-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘வர்மா’ திரைப்படம்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் பாலா. விக்ரமுக்கும், பாலாவுக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பு உண்டு என்பதால் தனது மகனின் முதல் திரைப்படத்தை பாலாவே இயக்கிக் கொடுத்தால் பெரிய பெயரும், புகழும், எளிதான நுழைவாசலும் கிடைக்கும் என்று நடிகர் விக்ரம் கணக்கிட்டார்.

varma-vikram-dhuruv

இதற்காகவே தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை தமிழில் தனக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களிடத்தில் சொல்லி அவர்களை வாங்க வைத்து அதன் பின்பு பாலாவை அணுகி, தனது மகனுக்காக இந்தப் படத்தை இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார் விக்ரம்.

ரீமேக் படங்களை செய்ய விரும்பாத பாலா, விக்ரமிற்காக மட்டுமே இந்தப் படத்தை இயக்க ஒத்துக் கொண்டார். 2018 மார்ச் 2-ம் தேதியன்று ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கியது. 2018 செப்டம்பர் 24-ம் தேதியன்று கிரீன் பார்க் ஹோட்டலில் படத்தின் அறிமுக விழாவும் நடந்தேறியது. 2019 ஜனவரி 9-ம் தேதி நடிகர் சூர்யா வர்மா படத்தின் டிரெயிலரை வெளியிட்டு சிறப்பித்தார்.

இப்போது படம் எடுத்து முடித்தாகிவிட்டது.  படம் வெளியாகும் தயார் நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் படத்தைத் தயாரித்த நிறுவனம் படம் சரியில்லை என்று கூறி மொத்தப் படத்தையும் தூக்கிக் குப்பையில் போட்ட விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

varma-movie-dropped-news

இது குறித்து ‘வர்மா’ படத்தின் தயாரிப்பாளரான முகேஷ் ஆர்.மேத்தா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘’எங்களது E-4 எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக தெலுங்கில் தயாரித்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பை பாலாவின் ‘பி ஸ்டுடியோ’வுக்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து இயக்க ஒப்பந்தம் செய்தோம். ‘வர்மா’ என்கிற பெயரில் தமிழில் இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கி முடித்துள்ளார்.

படப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்ய அதன் முதல் பிரதியை இயக்குநர் பாலா எங்களிடம் ஒப்படைத்தார். அதனைத் திரையிட்டுப் பார்த்தபோது எங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி இல்லை.  

தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் இருந்த பல விஷயங்கள் ‘வர்மா’ படத்தில் இல்லை. உயிர்ப்பான சிந்தனை இல்லை. ஆகையால் இந்தப் படத்தை நாங்கள் வெளியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம்.

உடனடியாக மற்றொரு இயக்குநரை வைத்து புதிதாக ‘அர்ஜூன் ரெட்டி’ தமிழ் பதிப்பின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளோம். அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக மீண்டும் நடிப்பார்.

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் உயிர்ப்பும், உண்மைத் தன்மையும் அந்த பதிப்பில் இருக்கும். அதிகாரப்பூர்வமாக படக் குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

பல கோடிகளை செலவழித்து பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தாலும் வேறு வழியே இல்லாமல் இந்தப் படத்தை நிறுத்தும் முடிவை எங்களால் தவிர்க்க முடியவில்லை. நாங்கள் தொடங்க உள்ள புதிய ரீமேக் படத்தை 2019 ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…’’ என அவர் தெரிவித்துள்ளார்.

?????????????????????????????????????????????????????????

?????????????????????????????????????????????????????????

இதுவரையிலும் இந்தியத் திரையுலகமே கண்டிராத ஒரு புதுமையான விஷயமாக இது இருப்பதால் இந்திய அளவில் திரைக் கலைஞர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த இயக்குநருக்காக தேசிய விருதினைப் பெற்றிருக்கும் இயக்குநர் பாலாவின் இயக்கம் சரியில்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் நிலைமை ஆகிவிட்டதே என்றெண்ணி கோடம்பாக்கத்தில் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.

நாம் விசாரித்தவரையிலும் ‘அர்ஜூன் ரெட்டி’யில் இருக்கும் சில காட்சிகள் தமிழ் மண்ணுக்கேற்றவாறு இல்லை. இங்கே அதனை ரசிக்க மாட்டார்கள் என்பதால் சில காட்சிகளை ஷூட் செய்யாமலேயே விட்டிருக்கிறார் இயக்குநர் பாலா. இதனால் ‘அர்ஜூன் ரெட்டி’ பாதிப்பில் உருவான படமாக மட்டுமே அது இருக்கும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்து.

இந்தக் கருத்தினை அவர்கள் நடிகர் விக்ரமிடமும் கூறியிருக்கிறார்கள். விக்ரம் இதனை தனது நண்பரான இயக்குநர் பாலாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனாலும் பாலா ‘என்னால் அப்படியெல்லாம் எடுக்க முடியாது. இதுதான் என்னுடைய படம்’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாராம்.

varma-movie-stills-1

இருதலைக் கொள்ளி எறும்பாக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் இடையில் மாட்டிக் கொண்டார் நடிகர் விக்ரம். அவருக்கோ அவரது மகன் துருவுக்கு ஒரு மிகப் பெரிய ஹிட்டான ஓப்பனிங் கிடைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.

அதற்கான ஸ்கோப் உள்ள படமாகவும் ‘அர்ஜூன் ரெட்டி’ இருப்பதால்தான் அதன் ரீமேக்கில் தனது மகனை நடிக்க வைக்க திட்டமிட்டு செய்தார். ஆனால் கடைசியில் நிலைமை இப்படியானதால் பாலாவிடம் மேற்கொண்டு பேச முடியாமல் விட்டுவிட்டாராம்.

விக்ரமை சமாதானப்படுத்துவதற்காக அவருடைய மகன் துருவையே தொடர்ந்து நாயகனாக நடிக்க வைப்பதாகச் சொல்லி தயாரிப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள். இப்போது விக்ரம் பேசாமடந்தையாகிவிட்டார்.

தயாரிப்பு நிறுவனமோ தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்து இப்போது இயக்குநரை மாற்றிவிட்டு புதிய இயக்குநரை வைத்து புதிதாக ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை உருவாக்கப் போவதாகச் சொல்லி செய்தியை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறது.

ஆக, இது பாலாவிற்கு அவமானமா அல்லது.. பெருமையா.. என்பதை இதுவரையிலும் எடுத்திருக்கும் படத்தையும், எடுக்கப் போகும் படத்தையும் பார்த்தால்தான் தெரியும்..!

 

Our Score