தில்லுக்கு துட்டு – சினிமா விமர்சனம்

தில்லுக்கு துட்டு – சினிமா விமர்சனம்

2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில், சந்தானம் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’.

இத்திரைப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அதே பார்மெட்டில் ‘தில்லுக்கு துட்டு’ இரண்டாம் பாகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்ல. இது முற்றிலும் வேறுபட்ட கதை.

இப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சந்தானமே  தயாரித்திருக்கிறார்.

இதிலும் சந்தானம்தான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிரத்தா சிவதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, சிவசங்கர் மாஸ்டர், இயக்குநர் மாரிமுத்து, மு.ப.வெங்கடேசன், விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், டாக்டர் கார்த்திக், பிரசாந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் ‘standup காமெடி’யில் புகழ் பெற்ற அய்யப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி, இசை – ஷபீர், படத் தொகுப்பு – செஞ்சி மாறன், பாடல்கள் – அருண்பாரதி, கானா வினோத், கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், நடன இயக்கம் – சாண்டி, உடைகள் வடிவமைப்பு – ஆர்.பிரவீன்ராஜ், ஒப்பனை – கே.புஜ்ஜி பாபு, ஆர்.பிரபாகரன், டிசைன்ஸ் – தண்டோரா, ஸ்டில்ஸ் – கே.ராஜ், வி.எஃப்.எக்ஸ் – ஹரிஹரசுதன்(ஜெமினி), சவுண்ட் டிசைன்ஸ் – சின்க் சினிமா, பைனல் மிக்ஸ் – கண்ணன் கன்பத்(ஏ.எம்.ஸ்டூடியோ), தயாரிப்பு மேலாளர் – வல்லல் டி.வெங்கடேஷ், தயாரிப்பு நிர்வாகம் – எம்.செந்தில், தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.ராஜ்நாராயணன், இணை தயாரிப்பு – சி.ரமேஷ்குமார், வெளியீடு – டிரைடண்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன், தயாரிப்பு நிறுவனம் – ஹோம்மேட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் – என்.சந்தானம், எழுத்து, இயக்கம் – ராம்பாலா.

தான் குடியிருக்கும் காலனியில் தனது தாய் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் வசித்து வரும் சந்தானம் ஒரு ஆட்டோ டிரைவர். தினமும் மதுவருந்தி வந்து தெருவில் செய்யும் அவரது அலப்பறையைத் தாங்க முடியாமல் தவியாய் தவிக்கிறார்கள் காலனிவாசிகள்.

அப்படி அவதிப்பட்டு, துன்ப்பப்பட்டு, துயரப்படுபவர்களில் ஒருவர் கார்த்திக். அருகில் இருக்கும் மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார். தன் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகி ஷிரிதா சிவதாஸை ஒரு தலையாய் காதலிக்கிறார் கார்த்திக்.

இவர் ஒரு நாள் ஷிரிதாவிடம் தனது காதலைச் சொல்ல.. அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நாயகி பதறியடித்து ஓடுகிறார். கூடவே கார்த்திக்கையும் பத்திரமாக இருக்கும்படி சொல்கிறார்.

காரணம், நாயகிக்கு யாராவது ஐ லவ் யூ சொன்னாலோ.. அல்லது கல்யாணம் செய்துக்கலாமா என்று கேட்டாலோ ஒரு ஆவி வந்து அவர்களைப் புரட்டியெடுத்துவிடும். சமயத்தில் கொலையே செய்துவிடும்.

இதை அந்தப் பேயிடம் மிதிபட்டு, அடிபட்ட பின்பு புரிந்து கொள்ளும் டாக்டர் கார்த்திக் நாயகியை தன்னுடைய காலனிவாசிகளின் பரம எதிரியான சந்தானத்துடன் கோர்த்துவிடுகிறார். பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொள்வதைப் போல சந்தானத்துக்கு நாயகியைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது.

ஐ லவ் யூ சொல்ல.. ஆவி சந்தானத்தை புட்பால் விளையாடுகிறது. இதில் ஏதோவொரு வில்லங்கம் இருக்கிறது என்பதை அறியும் சந்தானம் இதற்காக நாயகியைத் தேடுகிறார். நாயகி தனது சொந்த ஊரான கேரளாவுக்கு போயிருப்பதை அறிந்து அங்கே ஓடுகிறார்.

நாயகியின் அப்பா அங்கே ஒரு மிகப் பெரிய பிராடு மாந்திரீகராக இருக்கிறார். அவருடனும் சண்டையிட்டு, மல்லுக் கட்டுகிறார் சந்தானம். இவரை எதிர்க்க அதே ஊரில் இந்த சாமியாருக்கு எதிராக இன்னொரு மாந்திரீக கடை போட்டு நடத்தும் ஊர்வசியையும் சந்தித்துப் பேசுகிறார்கள்.

இப்போது மூவருமே நாயகியைச் சுற்றி ஒரு பேய் சுற்றி வருவதை உணர்கிறார்கள். இந்தப் பேயிடமிருந்து நாயகியைக் காப்பாற்றி சந்தானத்திற்கு கல்யாணம் செய்து வைக்க எத்தனிக்கிறார்கள். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த உண்மையான பேய்ப் படத்தின் கதை.

சந்தானம் ரிட்டர்ன்ஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வசனங்கள் உதவி செய்ய நகைச்சுவையை தெறிக்க விட்டிருக்கிறார் நடிகர் சந்தானம். இவரிடத்தில் நடிப்பையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்பதால் நடிப்பு பற்றிய விவரத்தையே விட்டுவிடுவோம்.

காட்சிக்குக் காட்சி நகைச்சுவையை தரும் அளவுக்கு நடித்திருக்கிறார் சந்தானம். கவுண்ட்டர் அட்டாக்கில் மொட்டை ராஜேந்திரனோடு இவர் போடும் கவுண்ட்டர்கள் அத்தனையும் அதகளம். தியேட்டரில் சிரிப்பலை எழுந்து கொண்டேயிருக்கிறது.

நாயகி ஷிரதா சிவதாஸ்.. அழகியல்ல. ஆனால் கேமிரா முகம். பாந்தமாக நடித்திருக்கிறார். கோபமாக நடிக்க வாய்ப்பேயில்லை. அதோடு காதல் கொஞ்சும் அளவுக்கும் நடிக்கவில்லை என்பதால் அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம்.

பெர்பார்மென்ஸில் பின்னியெடுத்திருக்கிறார்கள் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும். முதல் காட்சியில் ஒரு பீரோவை தெருவில் புரட்டியெடுத்தபடியே அறிமுகமாகும் மொட்டை ராஜேந்திரன் தனக்கு மனைவியிருப்பாதாகச் சொல்கிறார். ஆனால் கடைசிவரையிலும் அவரைக் காட்டவேயில்லை.

பேச்சுலர் போலவே சந்தானத்துடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். சிச்சுவேஷன் காமெடியில் அடித்து ஆடியிருக்கிறார். இடையிடையே இரட்டை அர்த்த வசனங்களையும் உச்சரித்திருக்கிறார்கள் சந்தானம் அண்ட் கோ. சென்சாரில் எப்படி கவனிக்காமல்விட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த மருத்துவமனை காட்சி கொஞ்சம் ஓவர்தான்..!

ஊர்வசியின் டைமிங் சென்ஸ் காமெடிக்கு போட்டி போட ஆளே இல்லை. இங்கேயும் அதே கதிதான். இடைவேளைக்கு பின்பு அந்த வீட்டுக்குள் இவர்கள் படும்பாடும், அதில் ஊர்வசியின் புலம்பலும் சிரிக்க வைக்கிறது. கதவை அந்தப் பக்கம் இருந்து மூடும் ஒரு காட்சியில் அதிகக் கைதட்டல்கள். அத்தனை திறமையான இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. வாழ்த்துக்கள் ஸார்..!

தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு ரம்மியம். காட்சிகள் அனைத்துமே அழகு. பாடல் காட்சிகள் அதைவிட அழகு. பேய் பங்களாவில் நடக்கும் காட்சிகளில் கலர் டோன் போட்டு பக்காவாக படமாக்கியிருக்கிறார்கள்.

இதேபோல் படத் தொகுப்பாளரையும் வெகுவாகப் பாராட்டியே ஆக வேண்டும். பேயால் பாதிக்கப்படும் அனைத்துக் காட்சிகளிலும் படத் தொகுப்பாளரின் திறமையான கத்திரியாலும், தொகுப்பாலும் காட்சிகள் பயமுறுத்தியிருக்கின்றன. பாராட்டுக்கள் ஸார்.

ஷபீரின் இசையில் மூன்று பாடல்கள் ஒலிக்கின்றன. மவனே யார்கிட்ட பாடல் காட்சியிலேயே கதையையும் நகர்த்தியிருக்கிறார்கள். காதல் போல் பாடல் ஒரேயொரு டூயட்டாக ஆறுதலைத் தருகிறது. பின்னணி இசை பேயைத் தருவித்து அதுகூடவே நம்மையும் ஓட வைத்திருக்கிறது. நகைச்சுவைக்கு இடமளிக்கும்வகையில் ஒலியைக் குறைத்து வடிவமைத்த ஒலி வடிவமைப்பாளருக்கு நமது கோடானுகோடி நன்றிகள்.

ஒரு சிறந்த நகைச்சுவை பேய்ப் படத்தை பார்க்க விரும்புவர்கள் தாராளமாக இந்தப் படத்திற்குச் செல்லலாம்.

என்ன ஒரேயொரு அனர்த்தம்.. சந்தானம் ஹீரோபோல சண்டை காட்சிகளில் வித்தை காட்டுவதுதான்..! அதுவும் காமெடியாகவே தெரிகிறது..!

சந்தானம் இனிமேல், நாயக பிம்பத்தைவிட்டுவிட்டு இது போன்ற காமெடி வேடத்தை மட்டுமே புனைவது அவருக்கும் நல்லது. அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..!

Our Score