full screen background image

தணிக்கைத் துறையினரின் பாராட்டினைப் பெற்ற படம் ‘வன்முறை’

தணிக்கைத் துறையினரின் பாராட்டினைப் பெற்ற படம் ‘வன்முறை’

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’. இப்படம்  தமிழ் மற்றும்  மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க, வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, மற்றும் நடிகர்கள் அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அய்யப்பன், திரைக்கதை – ரிஜேஷ் பாஸ்கர், இசை – சிவ சுகுமாரன், கலை இயக்கம் – பீஜேஷ் நின்மாலா, சண்டை இயக்கம் – ஜாக்கி ஜான்சன், புகைப்படங்கள் – அஜீஸ், மக்கள் தொடர்பு – சக்தி சரவணன், எழுத்து, இயக்கம் – மஞ்சித் திவாகர். 

இயக்குநர்  மஞ்சித் திவாகர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக  அறிமுகமாகிறார்.

ACTOR RK SURESH (3)

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும்  கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள்  வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நம் கண் முன்னே நடந்த தொடர் கொடூரங்கள் அச்சமூட்டும் சம்பவங்களாக நிழலாடுகின்றன. தெலுங்கானாவில் சமீபத்தில் ஒரு பெண் மருத்துவர் மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமையும் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் உருவாகி உள்ளது.  பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எச்சரிக்கையூட்டும் வகையிலும் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது .

கேரளாவிலிருந்து தமிழகம் வரும் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நேர்கிறது. அது பற்றி விசாரிக்கும் கடமையும் பொறுப்பும்  நிறைந்த போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே.சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச் செல்கிறார். அவற்றைப் பற்றி ஆராய்கிறார்.

ACTOR RK SURESH (2)

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று அறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும், பொறுப்பான கடமைகளும் படம் பார்ப்பவரை படபடக்க வைக்கும்.

இந்தப் படத்தில் வில்லனாக வரும் வினோத்  கிருஷ்ணனின் கொடூர செயல்கள் பதறவைக்கும். அவரைப் போன்ற கொடூர ஆண்கள் சமூகத்தில் பெண்ணை ஒரு நுகர் பொருளாகக் கருதும் மனப்பான்மை நம்மை கவலைப்பட வைக்கும்.

தமிழில் படம் இயக்குவது பற்றி கேரள  இயக்குநர் மஞ்சித் திவாகர்  கூறும்போது, “தமிழ்ச் சினிமாவுலகிற்கு இந்தப் படத்தின் மூலமாக  அறிமுகமாவதில் நான்  மிகவும் பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கை கொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் .இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று  பார்ப்பதில்லை. திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப் படம் இயக்க  வந்திருக்கிறேன். இத்திரைப்படம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்…” என்கிறார்.

படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் “இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு  எச்சரிக்கை தரும் வகையில்  உருவாகியுள்ள படம்…” என்று பாராட்டி உள்ளனர். இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக் குழு.

இந்த ‘வன்முறை’ திரைப்படம் ஜனவரி 3-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

 

Our Score