‘நான் அவளை சந்தித்தபோது’ – சினிமா விமர்சனம்

‘நான் அவளை சந்தித்தபோது’ – சினிமா விமர்சனம்

‘சினிமா பிளாட்பார்ம்’ என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் V.T. ரித்திஷ்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.   

இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடித்துள்ளார்.  

மேலும், மலையாளத்தின் முன்னணி நடிகரான இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மற்றும் ஜி.எம்.குமார், ‘பருத்தி வீரன்’ சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், ‘காதல்’ சரவணன், ‘நாடோடிகள்’ ரங்கா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா, இசை –  ஹித்தேஷ் முருகவேல், பாடல்கள்  – அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர், நல்.செ.ஆனந்த், கலை இயக்கம் – ஜெய்காந்த், படத் தொகுப்பு – ராஜா முகம்மது, நடன இயக்கம் –  சிவசங்கர், பாலகுமாரன் – ரேவதி, தினேஷ், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சம்பத், தயாரிப்பு  –  V.T.ரித்திஷ்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எல்.ஜி.ரவிசந்தர்.

இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர், ஏற்கெனவே ‘மாசாணி  மற்றும்  பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கியவர்.

தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளதாம்.

சினிமாவில்  உதவி இயக்குநராகப் பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும்போது வழியில் இளம் பெண்(நாயகியை) ஒருவரை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.

ஹீரோ அவரை காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய்விட போகிறான். போன இடத்தில் ஊர்க்காரர்கள் இவர்கள் இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள்.

இதன் பின்னர் என்ன நடக்கிறது..? நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.

தமிழ்ச் சினிமாவில் கே.பாலசந்தர், பாரதிராஜா போல் மிகப் பெரிய இயக்குநராக வேண்டும் என்னும் கனவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் சந்தோஷ் பிரதாப். இவருடன் இவரது உதவி இயக்குநர் நண்பர்களும் இணைந்து வசிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் ஒரு நாள் குடிகார தந்தையிடம் கோபித்துக் கொண்டு தஞ்சாவூர் பக்கமுள்ள தனது சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு பஸ்ஸேறி வருகிறார் சாந்தினி. அவருடைய உறவினர் வீடு சைதாப்பேட்டையில் இருப்பதாகவம் அதற்கு வழி காட்டும்படியும் சொல்கிறார் சாந்தினி.

“விலாசமே இல்லாமல் சென்னையில் யாரையும், எந்த வீட்டையும் கண்டுபிடிக்க முடியாதும்மா…” என்று சொல்லி சாந்தினியை திரும்பவும் ஊருக்கே போய்விடும்படி சொல்கிறார் சந்தோஷ். தனியாகச் செல்ல பயமாக இருப்பதால் துணைக்கு வரும்படி சந்தோஷை அழைக்கிறார் சாந்தினி.

சந்தோஷ் மறுத்தாலும் சில, பல சூழ்நிலைகளால் அவரும் கூடவே போக வேண்டிய சூழல். சாந்தினியின் ஊரில் சந்தோஷைப் பார்த்தவுடன் அவருடன்தான் சாந்தினி காதல் கொண்டு ஓடிப் போய்விட்டதாக நினைக்கும் ஊர்ப் பஞ்சாயத்தார் சந்தோஷை கட்டாய தாலி கட்ட வைத்துவிடுகின்றனர்.

இப்படி, ஒரு அப்பாவிப் பெண்ணை பத்திரமாக அவளுடைய குடும்பத்தாரிடம் விட்டுவிட்டு வருவதற்காக சென்ற சந்தோஷ், அவசரத்தில் அவளுக்கே மாப்பிள்ளையாகி விடுகிறார். முதலிரவிலும் உறவு வைத்துக் கொண்டுவிடுகிறார்.

ஆனாலும் அடுத்த நாள் காலையில் மனைவியின் ஒப்புதலுடன் ஊரைவிட்டுத் தப்பியோடி சென்னைக்கே வந்துவிடுகிறார். குற்றவுணர்ச்சியில் இதனை நண்பர்களிடத்தில் சொல்லியும் தொலைக்கிறார். நண்பர்கள் அவர் செய்தது தவறு என்று இடித்துரைக்கிறார்கள்.

இதனால் சாந்தினி இப்போது எப்படியிருக்கிறார் என்பதைக் கண்டறிய சந்தோஷின் நண்பரான சாம்ஸை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே சாந்தினி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. சாம்ஸின் உதவியால் சந்தோஷின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஊர்க்காரர்கள் மொத்தமாக ஒன்று திரண்டு சாந்தினியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சந்தோஷிடம் அவரது மனைவியை ஒப்படைத்துவிட்டுப் போகிறார்கள்.

அதே நேரம் சந்தோஷின் ஊரில் அவரது அம்மா அவருக்காக பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார். பெண் பார்க்கவும் சந்தோஷை அழைக்கிறார். அம்மாவிடமும், தனது குடும்பத்தாரிடமும் தனக்குத் திடீர் கல்யாணமானதை சொல்ல முடியாமல் தவிக்கிறார் சந்தோஷம். முடிவு என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

1990-களில் நடந்த உண்மைக் கதை என்பதால் வேறு எந்தவிதமான கமர்ஷியல் அயிட்டங்களும் கலக்காத காதல் கதையாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

நாயகன் சந்தோஷ் பிரதாப்பிற்கு பெயர் சொல்லும் படம் இதுவாகத்தான் இருக்கும். தன்மானமிக்க உதவி இயக்குநர்.. உதவி செய்ய நினைக்கும் இளைஞன் என்று இரண்டுவித கேரக்டர்களையும் உணர்ந்து நடித்திருக்கிறார். சாந்தினிக்கு உதவப் போய் அடிதடியில் இறங்கும் அளவுக்கு செல்வதும்.. ஊரில் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டு தாலி கட்டும் காட்சியிலும் கொஞ்சமும் யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார்.

பட வாய்ப்புக்காக நாயாய், பேயாய் அலையும் சந்தோஷ் பிட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரான இன்னசென்ட்டிடம் மாட்டிக் கொள்வது.. சந்தர்ப்ப சூழலால் முதலில் அதற்கு ஒத்துக் கொண்டு பின்பு அதை மறுத்து அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கும் காட்சியிலும் உதவி இயக்குநர்களுக்கு ஒரு மரியாதை செய்திருக்கிறார். அழுத்தமான நடிப்பையும் இந்தக் காட்சியில் அளித்திருக்கிறார் சந்தோஷ்

இதேபோல் இந்த போர்ஷனில் மட்டும் நடித்திருக்கும் மலையாளப் படவுலகின் மூத்த நடிகரான இன்னசென்ட் தனது அனுபவ நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் சாந்தினி மேக்கப்பே போடாமலும், நகர வாடையே படாமலும் அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமான பொருத்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

தனது சொந்த வீட்டிலேயே யாரோ ஒருவர்போல சமைக்க வருவதும்.. வீட்டு வாசலில் அமர்ந்து வீட்டை ஏக்கத்துடன் பார்ப்பதும்.. தனது மனைவி என்று அறிமுகப்படுத்தி வைக்க முடியாத சூழலில்கூட அதைப் பற்றிப் பெரிதாக நினைக்காத மனைவியாகவும் மிக அழகாக நடித்திருக்கிறார் சாந்தினி. அழகு தேவையில்லை. நடிப்பே போதும் என்பதற்கு இந்தக் கேரக்டரும் ஒரு உதாரணம்.

சந்தோஷின் நண்பர்களில் ஒருவரான சாம்ஸ் அவ்வப்போது சிரிப்பை மூட்டுகிறார். இது போன்ற மரத்தடி பஞ்சாயத்து காட்சிகளை சினிமாவில் பார்த்து எத்தனை நாளாச்சு என்பதைப் போல அந்தப் பஞ்சாயத்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..!

ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவே படத்தின் பட்ஜெட்டை காட்டி விடுகிறது. இன்னும் கொஞ்சம் சிறப்பாகவே செய்திருக்கலாம். ஹித்தேஸ் முருகவேலின் இசையில் பாடல்கள் முந்தைய கால கிராமியத்தனத்தைக் கொண்டிருக்கின்றன.

1990-களில் நடந்த கதை என்பதால் அதிகமாக வெளிப்புறத்தில் படமாக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். முடிந்தவரையிலும் அந்தக் காலக்கட்டத்தைக் காட்ட உழைத்திருக்கும் கலை இயக்குநர் ஜெய்காந்திற்கு நமது பாராட்டுக்கள்..!

நடந்த கதை என்பதால் கூடுதல் சுவாரஸ்யத்திற்கு வேறு எந்தக் கதாபாத்திரத்தையும் திணிக்க முடியாமல் அப்படியே வரிசைக்கிரமமாக திரைக்கதையில் எழுதியிருக்கிறார். இதனால் படம் யதார்த்தமாக நடப்பதாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை என்பதுதான் உண்மை.

இருந்தும் அதையெல்லாம் சரிகட்டும்விதமாக கிளைமாக்ஸில் வைக்கும் சில திடுக்கிடும் திருப்பங்களான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்து ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறது.

இது போன்ற படங்களில் எதிர்மறையான கிளைமாக்ஸை வைத்து கண்களை குளமாக்குவதுதான் இயக்குநர்களின் வழக்கம். ஆனால் இந்தக் கதையில் அப்படி வைக்காமல் நல்லவிதமாகப் படத்தை நிறைவு செய்திருக்கும் இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்.

நான் அவளைச் சந்தித்தபோது – குடும்பக் களஞ்சியம்..!  

Our Score