full screen background image

“தடவும்போதே கிள்ளியும்விடுவார் பாரதிராஜா…” – வைரமுத்துவின் பதிலடி..!

“தடவும்போதே கிள்ளியும்விடுவார் பாரதிராஜா…” – வைரமுத்துவின் பதிலடி..!

கோவையில் நடந்த ‘கவிஞர்கள் திருவிழா’வில் வைரமுத்துவின் ஏற்புரையில் இருந்து சில பகுதிகள்..

“நான் பொய் சொல்வதை நிறுத்தி விட்டேன்’ என்கிறார் பாரதிராஜா. வாழ்க்கை சின்ன சின்ன பொய்களால்தான் இயங்குகிறது. ‘உங்கள் படம் போல் எடுக்க இனி ஆளில்லை’ என்ற பொய்தான் உங்களை வாழ வைக்கிறது.

என்னை பாராட்டிய வார்த்தைதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.   என் மீது அவரை போன்று பாசத்தை பொழிந்தவரும் இல்லை.. அவரை போன்று கண்டித்தவரும் எவரும் இல்லை.. தடவிக் கொடுக்கும்போதே கிள்ளியும் விடுவார் அவர்.

என்னை ‘சுயம்பு’ என்றீர்கள். ‘வீரிய வித்து’ என்றீர்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு விதை முளைக்க மண், காற்று, வெப்பம், நீர் நான்கு காரணிகள் தேவை. ஒரு விதை முளைப்பதற்கே நான்கு காரணிகள் தேவையென்றால் ஒரு கவிஞன் முன்னுக்கு வருவதற்கு எத்தனை காரணங்கள் தேவை..? நான் வீரிய விதையா..? இல்லையா என்பதை அடுத்த நூற்றாண்டு சொல்லும். ஆனால் இந்த விதை மீது மழையாகப் பொழிந்த்து கருமேகம் என்ற இந்த பாரதிராஜாதானே..?

கர்வம் பிடித்தவனா இந்த வைரமுத்து..? என்னை விட எளிமையானவன் உண்டா..? தன்னம்பிக்கைக்கு பெயர் கர்வம் என வைப்பதா…? தன்னம்பிக்கை வேறு. கர்வம் வேறு.. என்னால் முடியும் என்று சொல்பவன் தன்னம்பிக்கை உள்ளவன். என்னால் மட்டும்தான் முடியும் என்று சொல்பவன்தான் கர்வம் கொண்டவன்.

வைகறை மேகங்கள் புத்தகத்தை உயர்ந்த இடத்திலிருந்து படித்ததாகச் சொன்னார் பாரதிராஜா. உயர்ந்த கவிதைகளை உயர்ந்த இடத்திலிருந்துதான் படிக்க முடியும். எனக்குப் பாடல் எழுத வாய்ப்பு வருகிறபோது பிரசவத்தின் வாசலில் இருக்கிற எனது மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டுப் போகிறேன். அதுவொரு மாலைப் பொழுது.. அந்த இசையமைப்பாளர் எனக்குக் கொடுத்த டியூனில்தான் இது ஒரு பொன்மாலைப் பொழுது என பிறந்தது.. இசையமைப்பாளர்கள் கிழித்துப் போட்ட சப்தத்தை தமிழால் தைத்துக் கொடுப்பவன் நான்.

என்னிடம் விஷயம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தவர் பாரதிராஜா.   ‘புதிய வார்ப்புகள்’ பார்த்து மிரண்டேன். பாரதிராஜாவை பார்த்து ஒன்று சொன்னேன். ‘உங்கள் படத்தில் எல்லாம் மாறி இருக்கிறது. திரைப்பாட்டு மொழியை தவிர. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அதை மாற்றிக் காட்டுவேன்’  என்றேன். உடனே என்னை அழைத்தார்.

நான் அவர் கூப்பிட்ட ஹோட்டலுக்கு சென்றேன். அங்கே பாரதிராஜவாவுடன் இளையராஜாவும் இருந்தார். உடனே இளையராஜா மெட்டு ஒன்றை கூறிவிட்டு, ‘என்ன பாரதி.. இந்த ஆள் பாட்டு எழுதி விடுவாரா..?’ என்று கேட்டார். உடனே பாரதிராஜா, ‘இருடா பார்க்கலாம்..’ என இளையராஜாவை பார்த்து கூறினார். அவர் உரிமையோடு பேசுவார்.

அந்த ‘வாடா’, ‘போடா’ என்று பேசும் உரிமையை எல்லாம் மேடையில் பயன்படுத்துவது தப்பு.. அறையில் பயன்படுத்துவது அன்பு.. மேடையில் பயன்படுத்துவது வம்பு…” என வைரமுத்து பேசிக்கொண்டிருக்க…

இந்த நேரத்தில் மைக்கை பிடித்த பாரதிராஜா, “எனக்கு உங்களைப் போல அடுக்கு மொழியில் பேச வராது. எதுகை மோனைகள் தெரியாது. நான் பாமரன். எனக்கு பாமர மக்களைத்தான் தெரியும். எனக்கு எதையும் மறைச்சு வைச்சுப் பேசத் தெரியாது. என்ன தோணுதோ பேசிருவேன். அதனால் பல நண்பர்களை இழந்திருக்கிறேன். இங்கே வாழ்த்தத்தான் வந்தேன். சண்டையிடவோ.. பட்டிமன்றம் பேசவோ நான் வரவில்லை. மன்னிக்கவும்.. வாழ்த்துகள் கவிஞருக்கு.. நன்றி.. வருகிறேன்..” என சொல்லி விட்டு அரங்கை விட்டு வெளியேறினார். 

தொடர்ந்து பேசிய வைரமுத்து, “நான் எதையும் நேரடியாகப் பேசி பழக்கப்பட்டவன். அரசியலுக்கும் கலைக்கும் என்ன வேறுபாடு என்றால், அரசியலில் இருப்பதை சொல்லாதவரை வெற்றி. ஆனால் கலையில் இருப்பதை சரியாகச் சொல்பவனுக்குத்தான் வெற்றி. எனவே கலையில் இருக்கும் நான் எனக்குள் இருப்பதைத்தான் சொல்வேன்..

பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா என்பவர்கள் வேறு வேறு தாய் பெற்ற 3 சகோதரர்கள். என்னை கொண்டாட வேண்டுமென்றால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னமும்தான்.

சினிமாவில் பாடாலாசிரியர்கள் சிறுபான்மையின சாதி. கடைசியில் தேவைப்படுகிறான். அவன் முக்கியம் என அவனேதான் நினைத்துக் கொள்கிறான். முக்கியமில்லை என சினிமா நினைக்கிறது. நான் முக்கியமானவன் என நிரூபிக்க இங்கே 34 ஆண்டுகள் போராடினேன்.

பாலச்சந்தரை நான் மறக்கவே முடியாது.. பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நான், சில ஆண்டுகளில் ஒரு சிக்கலை சந்தித்தேன். என்னை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சியில் சிக்கி, தனித்து விடப்பட்டேன்.

அப்போது பாலச்சந்தர் ‘வானமே எல்லை’, ‘அண்ணாமலை’, ‘ரோஜா’ என்று மூன்று படங்கள் தயாரித்து கொண்டிருந்தார். மூன்று படங்களிலும் நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாருமே வேறு, வேறாய் இருந்தார்கள். ஆனால் அந்த மூன்று படங்களிலும் பாடலாசிரியராக என்னை மட்டுமே ஆக்கியது பாலசந்தர்தான். ‘அந்த மூன்று படங்களும் தோற்றால், வடுகபட்டிக்கு சென்று விவசாயம் பார்க்கப் போகிறேன்’ என்றேன். ஆனால் அந்த மூன்று படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.

‘ரோஜா’ மூலம் ஏ.ஆர்.ரகுமான் எனும் மிகச் சிறந்த இசையமைப்பாளர் கிடைத்தார்.  அவரைக் கொண்டு பல சாதனைகள் படைத்தோம்…” என்றார் வைரமுத்து.

பாவம் வைரமுத்து.. 60-வது அகவையில் அடியெடுத்து வைக்கும்போது மனதிற்கினியவர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளோடு புதிய ஆண்டை துவக்குவோம் என்று நினைத்து விழாவை ஏற்பாடு செய்தவர்.. கடைசியில் நிலைமை இப்படியாகிவிட்டது..!

எல்லாஞ்சரி.. வைரமுத்துவின் இந்த 60-வது ஆண்டு மணிவிழாவிற்கு.. பிறந்த நாள் விழாவிற்கு… அவரது இல்லத்தரசியார் பொன்மணி வரவே இல்லையாம்..?

அப்புறம் என்ன பெரிய மணி விழா..?

Our Score