‘இயக்குநர் சிகரம்’ மறைந்த திரு.கே.பாலசந்தர் அவர்களின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று மாலை சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை இயக்குநர் சிகரத்தின் உதவியாளரான மதுரை என்.மோகன் முன்னெடுத்து நடத்தினார்.
இவ்விழாவில், இயக்குநர் சிகரத்தின் சிஷ்யரான சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் விவேக், டெல்லி கணேஷ், நடிகை சச்சு, இயக்குநர்கள் மனோபாலா, பேரரசு, ரமேஷ் கண்ணா, சுரேஷ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.பி.உதயகுமார், அஸ்லாம், ஐந்து கோவிலான், எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகளும் கவிதாலயா மற்றும் மின் பிம்பங்களில் பணியாற்றிய பல ஊழியர்களும், திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம், நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும், ஆளுமையும் தமிழ்த் திரையுலகத்தில் பெரியது.
அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .
அந்த நிலையில் ஒரு நாள் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளர் பாலசந்தரின் மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒரே நாளில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்த மூன்று படங்களுக்கும் நான்தான் பாடல்களை எழுதினேன். மூன்று படங்களிலுமே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த திலீப்தான் ஏ.ஆர்.ரகுமான். மீண்டும் திரைக்களம் எனக்குக் கிடைத்தது.
திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் கே.பாலசந்தர்தான். ‘புன்னைகை மன்னன்’ படத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலில் ‘ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு’ என்ற வரிகளின்போது கேமிராவையும் சேர்த்துத் தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர்.
கே.பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும். பாலச்சந்தர் மட்டுமல்ல பல திரையுலக சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது கே.பாலசந்தரில் இருந்து துவங்க வேண்டும்..” என்றார்.