“என் கட்டை விரலை இழந்து நிற்கிறேன்..” – கே.பி.யின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

“என் கட்டை விரலை இழந்து நிற்கிறேன்..” – கே.பி.யின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரி்ன மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை :- இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குனர் சிகரத்தின் இறப்பு.

பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று; தமிழ் சினிமாவின் துண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை. சலித்துப்போன பாணியில் புளித்துப்போன கதைகளால் அலுத்துப்போன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.

திரையுலகம் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற உன்னத இயக்குனரை இழந்து நிற்கிறது. குடும்பம் தங்கள் தலைவனை இழந்து நிற்கிறது. பல இயக்குநர்கள் தங்கள் பிதாமகனை இழந்திருக்கிறார்கள். நான் கவிதை எழுதும் என் கட்டை விரலை இழந்து நிற்கிறேன்.

போய் வாருங்கள் இயக்குனர் சிகரமே.. உங்கள் புகழைக் காத்துக் கிடக்கும் பெருங்கடமையில் எங்கள் காலம் கழியும். நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற சராசரிக் கோரிக்கையெல்லாம் இந்தச் சமூகத்தில் எடுபடாது. நீங்கள் இயக்கிய கலைச் சித்திரங்களே உங்கள் நினைவுச் சின்னங்களாகும். உங்கள் புகழ் வாழ்க..!