அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படம்..!

அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படம்..!

வால்மேட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் இணைந்து தயாரிக்க புதிய படம் ஒன்று துவங்கியிருக்கிறது.

இந்தப் படத்தின் நாயகனாக வைபவ் நடிக்கவிருக்கிறார். திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணி புரிந்த சாச்சி என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

புதிய படம் பற்றி இயக்குநர் சாச்சி கூறும்போது, ” நான் இயக்குநர் அவதாரம் எடுக்க, சரியான தயாரிப்பு நிறுவனத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். காத்திருப்புக்கான பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.

எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் வைபவ்விடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது, அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்தாலே இது தெரியும். 

இதுவொரு ரொமாண்டிக் காமெடி திரைப்படம். ஒரு நாயகன், ஒரு நாயகி மற்றும் ஒரு வில்லன். நாயகன் ஒரு நடுத்தர வர்க்ககத்தைச் சார்ந்தவர், ஒரு எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.

இதைக் கேட்கும் போது அரைச்ச மாவையே அரைக்கின்ற உணர்வு எழலாம். ஆனால், அதை படமாக்கும்விதம் ரசிகர்களுக்கு  புதுமையான அனுபவத்தை கொடுக்கும்…” என்றார். 

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று காலை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

இந்த விழாவில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரான ஆர்.ரவீந்திரன் மற்றும் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர், நாயகன் வைபவ், நடிகர் சதீஷ், இயக்குநர் சாச்சி மற்றும் படத்தில் இடம் பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

நாயகி உட்பட மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

Our Score