full screen background image

தெனாலிராமனை வைத்து மொழிச் சண்டையை உருவாக்காதீர்கள்-வடிவேலு வேண்டுகோள்..!

தெனாலிராமனை வைத்து மொழிச் சண்டையை உருவாக்காதீர்கள்-வடிவேலு வேண்டுகோள்..!

வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘தெனாலிராமன்.’ இந்த படத்தில் வடிவேல் தெனாலிராமனாகவும், அரசனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தத் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கில்டு அமைப்பின் செயலாளர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கும் சூழலில் தெலுங்கு அமைப்புகள் கோர்ட் படியேறியிருக்கி்னறன.

நீதிபதிகள் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தெலுங்கு அமைப்புகளின் கோரிக்கைக்காக இன்றைக்கு நீதிபதிகள் தெனாலிராமன் படத்தைப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையில் இந்த விஷயம் குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேட்டியளித்திருக்கும் வடிவேலு, தனது காமெடி மொழி கடந்தது என்றும், தான் யாரையும் மனம் புண்படுத்தும்படி நகைச்சுவை செய்ததில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

‘‘தெனாலிராமன், ஒரு அற்புதமான படம். இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று எல்லா மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த சமயத்தில், யாரோ பிரச்சினையை தூண்டி விடுகிறார்கள். படத்தை பார்க்காமலே கருத்து தெரிவிப்பதில், எந்த நியாயமும் இல்லை.

‘தெனாலிராமன்’ படத்தில், கிருஷ்ணதேவராயர் என்று ஒரு வார்த்தைகூட இல்லை. தெனாலிராமனுக்கும், அரசருக்கும் உள்ள நட்பை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். படத்தில், சுந்தர தெலுங்கு மொழியை உயர்த்திப் பேசியே நடித்து இருக்கிறேன்.

எனக்கு மொழி வேறுபாடு கிடையாது. மொழி தெரியாதவர்கள்கூட என் ‘காமெடி’யை ரசிப்பார்கள். அதை சிலர் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். ‘காமெடி’யாக நடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

‘காமெடி’யை இழிவாக நினைக்காதீர்கள். நகைச்சுவை என்பது உடலுக்கும், மனசுக்கும் ஆரோக்கியம் தருகிற அபூர்வ மருந்து. சஞ்சீவ மலையில்கூட இந்த மருந்து கிடைக்காது. அதை நான் மக்களுக்கு தாராளமாக கொடுத்து வருகிறேன். நான், யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டேன். புண்பட்ட மனதுக்கு நகைச்சுவை என்ற மருந்தை கொடுப்பவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில், எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் மொழி சண்டையை இழுத்து விட்டு, சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள். அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. யாரோ தூண்டி விடுகிறார்கள் என்பதற்காக, ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மனதையும் புண்படுத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்..’’ என்று கூறியிருக்கிறார்.

நன்றி : தினத்தந்தி

Our Score