சூர்யா ஹீரோவாக நடிக்கும் அஞ்சான் படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை நடனமாட அழைத்ததாகவும் அப்போது அவர் சூர்யாவா அது யார் என்று கேட்டதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.
இந்த வதந்தி கை, கால் முளைத்து வளர்ந்துவிட, இணையத்தளங்களில் சூர்யாவின் ஆதரவாளர்கள் கரீனா கபூரை வறுத்தெடுத்துவிட்டார்கள்.. இந்தம்மாவை மும்பையைத் தவிர வேற எங்கயாவது எவனுக்காவது தெரியுமா என்ற ரீதியில் தனிப்பட்ட தாக்குதலாகவும் போய்விட விஷயம் கரீனா கபூரின் கவனத்திற்குக் கொண்டு போகப்பட்டது.
இதையடுத்து மும்பை மீடியாக்களிடம் இது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் கரீனா கபூர்.
அதில், “இது போன்ற ஆதாரமற்ற கதைகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்கு தெரியவில்லை. ‘அஞ்சான்’ படத்தில் ஒரு பாடலுக்கு நான் குத்தாட்டம் ஆடுவதாக செய்திகள் வந்ததால் அதற்கு மறுப்பு சொல்ல நேர்ந்தது. அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. இந்தி தவிர தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
சூர்யா நடித்த ‘சிங்கம்-2’ படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடித்து வருகிறேன். அப்படி இருக்க அவரை தெரியாது என்று எப்படி கூறுவேன்? சூர்யாவை தெரியாது என்று நான் சொல்லவே இல்லை. அவரை சந்தித்தில்லை என்றுதான் கூறினேன். எனது பேட்டி திரித்து வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். சூர்யா திறமையான நடிகர். இந்தி படத்தில் அவர் நடித்தால் நானும் அவரோடு இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். ஊடகங்கள் உண்மையை உணர்ந்து எழுத வேண்டும்…” என்று கூறியுள்ளார்.
சரிங்கப்பா.. அதான் மேடம் சொல்லிட்டாங்கள்ல.. பிரச்சினையை இத்தோட முடிங்கப்பா..!