‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ டீம், தமிழக சுற்றுப் பயணம்..!

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ டீம், தமிழக சுற்றுப் பயணம்..!

படத்தைத் தயாரிப்பதைவிடவும், அதன் விளம்பரத்திற்காகத்தான் இப்போது அதிக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மல்லுக் கட்டிக் கொண்டிரூக்கிறார்கள். எப்படியாவது ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்கிற ஒரேயொரு கொள்கையோடு ஒவ்வொரு படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் படும்பாட்டை சொல்ல முடியவில்லை.

வெறுமனே பத்திரிகைகளையும், டிவிக்களையும் மட்டுமே நம்பியிருக்காமல்.. சென்னை வாழ் ரசிகர்களுக்கு மட்டுமே தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கமால், நாமளே ஏன் ஊர், ஊராகச் சென்று மக்களைச் சந்திக்க்க் கூடாது என்று நினைத்து ஒரு சிலர் இப்போது படத்தின் பிரமோஷனுக்காக வெளியூர்களுக்கு பறந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் சில சின்ன பட்ஜெட் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவை சேலம், கோவை ஆகிய ஊர்களில் நடத்தியிருக்கிறார்கள். அன்னக்கொடியும் கொடி வீரனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரை ரயில்வே மைதானத்தில் நடத்தினார்கள்.

அந்த வரிசையில் அடுத்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திற்காக அப்படத்தின் ஹீரோவான ஆர்யா படக் குழுவினருடன் மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களின் ரசிகர்களை சந்திக்கப் புறப்படுகிறாராம்.

இந்த ரசிகர்களின் சந்திப்பில் இந்தப் படத்தின் டிரெயிலரும், இதில் இடம் பெற்றுள்ள ‘லக்கா மாட்டிக்கிச்சு’ பாடலும், ‘நா ரொம்ப பிஸி’ என்ற பாடலும் வெளியிடப்பட இருக்கின்றன.

நாளை காலை மதுரையிலும், மாலையில் திருச்சியிலும் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. அடுத்த நாள் 8-ம் தேதி சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலும், 9-ம் தேதி கோவையிலும் இந்த இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக 72 மணி நேரத்தில் 25000-க்கும் அதிகமான ரசிகர்களிடத்தில் இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்கப் போகிறார்கள்.

கூடவே வேறொரு சமூகப் பணியையும் கோவையில் செய்யப் போகிறார் ஆர்யா. சைக்கிள் ஓட்டுவதில் மிக பிரியரான ஆர்யா உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் காலை 7 மணி முதல் 10 மணிவரையிலும் கோவை ஓ.பி. சாலையில் இருந்து டி.வி.சாமி சாலையில் நடைபெறவுள்ள சைக்கிளிங் ரேஸில் கலந்து கொள்ளவுள்ளார்.

படத்தை பிரபலப்படுத்தின மாதிரியும் ஆச்சு.. சைக்கிளிங் ஓட்டிய மாதிரியும் ஆச்சு என்ற இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் ஆர்யா.

Our Score