‘வாலு’ படம் ஆகஸ்ட்-14 ரிலீஸ் உறுதியானது..!

‘வாலு’ படம் ஆகஸ்ட்-14 ரிலீஸ் உறுதியானது..!

நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் சிம்பு, ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வாலு’. கடந்த 2 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு முடிவடைந்திருக்கும் இந்தப் படத்திற்கு சோதனைகளெல்லாம் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருந்தது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஹன்ஸிகாவுடன் காதல் ஆரம்பித்து, பின்பு நடுவிலேயே பிரிவு ஏற்பட்டதும் இதே படத்தில்தான். ஆனால் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை என்பதுதான் சிம்புவுக்கு, காதல் தோல்வியைவிட பெரிய சோகம்.

இந்தப் படத்தின் நீண்ட நாள் ஷூட்டிங் காரணமாய் வாங்கிய கடன் குட்டி மேல் குட்டி போட்டு குட்டி தீவு போல உருவாகிவிட்டதால் படத்தை ரிலீஸ் செய்யவே பணமில்லை என்று கையை விரித்துவிட்டார் தயாரிப்பாளர்.

இதனால் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தரே தனது மகனுக்காக களத்தில் இறங்கி தானே ‘வாலு’ படத்தை வாங்கி வெளியிட முன் வந்தார். நல்ல முயற்சிதான் என்றாலும் இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகையைக் கொடுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக கோர்ட் படியேற.. இதுவரையில் 4 முறை வெளியீட்டு தேதி அறிவித்த பின்பும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார்கள் அப்பாவும், மகனும்.

கோர்ட்டில் ‘சமரசமாக போகலாமே’ என்று நீதிபதி அட்வைஸ் செய்ய.. இதையே காரணமாக எடுத்துக் கொண்டு கடன் வாங்கியவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் இந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் இதில் தலையிட்டுள்ளார். கடன் தொகை எவ்வளவு என்று விசாரித்து பெரும் தொகை ஒன்றை கொடுத்து சிம்புவுக்காக செட்டில் செய்துள்ளாராம் விஜய். மேலும் முந்தைய படங்களின் தோல்வியால் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்திற்கு விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களையும் அழைத்த விஜய், ‘சிம்புவின் படத்தை எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக தன்னுடைய ‘புலி’ படத்தை அவர்களுக்கே தருவதாக’ ஒப்புதல் தந்துவிட்டாராம்.

இதன் காரணமாகவே சமீபத்தில் நடைபெற்ற ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்புவின் தந்தை இயக்குநர் டி.ராஜேந்தர் விஜய்யை பாராட்டி பொங்கித் தீர்த்தது இந்த நன்றிக் கடனுக்காகத்தானாம்.

இதனால் எல்லாவித தடைகளும் அகற்றப்பட்டு ‘வாலு’ படம் வெளியாக தயாராகிவிட்டது. இந்தப் படத்திற்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஆட்சேபணை மனுக்கள் அனைத்தும் இன்றைக்கு வாபஸ் பெறப்பட்டதால் கோர்ட்டில் இந்த வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக சிம்பு ஹீரோவாக நடித்த படம் ‘போடா போடி.’ இது 2002-ம் ஆண்டு வெளியானது நினைவிருக்கலாம். 3 ஆண்டு கால இடைவெளிக்கு பின்பு இந்தப் படம் வெளியாகவிருப்பதால் இந்த வாலு படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பெரிதும் கூடியுள்ளது.

Our Score