“என் மகன் சிம்புவுக்கு குரு பெயர்ச்சி அமோகமாக வேலை செய்யும்..” என்ற டி.ராஜேந்தரின் வாக்கு அப்படியே பலித்து வருகிறது.
வரும் 17-ம் தேதியன்று வெளியாகவதாக இருந்த ‘வாலு’ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
“இந்தப் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு தங்களுடைய நிறுவனம் 10 கோடி ரூபாய் கடனாக வழங்கியதாகவும், இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னட விநியோக உரிமையை இதற்குப் பதிலாக தங்களுக்குத் தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்திருந்தார். இப்போது அந்த ஒப்பந்த்த்தை மீறி டி.ராஜேந்தர் மூலமாக படத்தை வெளியிட முயல்கிறார். எனவே எங்களிடம் வாங்கிய கடனை தயாரிப்பாளர் சக்கரவர்த்தி வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். அதுவரையிலும் படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டும்..” என்று சென்னையைச் சேர்ந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த்து.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் மூன்றாவது பார்ட்டியாக தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்த டி.ராஜேந்தரின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி. மேலும் கடன் பெற்ற, கொடுத்த ஒப்பந்த நகல்களின் உண்மைத்தன்மையை சரி பார்க்கவும், அது குறித்து மேலும் பதில் மனு தாக்கல் செய்யவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கினை மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
“படம் இந்த வாரம் ரிலீஸாகும் என்று விளம்பரமெல்லாம் செய்தாகிவிட்டது” என்கிற தயாரிப்பாளர் தரப்பு வக்கீல்களின் வாதத்திற்கு “தற்போதைய நிலையே தொடர வேண்டும்..” என்று கூறிவிட்டாராம் நீதிபதி.
இதனால் ‘வாலு’ படம் வரும் 17-ம் தேதி ரிலீஸாகாது என்று உறுதியாக நம்பலாம்.
இந்தச் செய்தி கேள்விப்பட்டவுடன் நடிகர் தனுஷ் சிம்புவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது சிம்பு மிகவும் நம்பிக்கையுடன் படப் பிரச்சினைகள் விரைவில் முடிந்துவிடும் என்றாராம். நிச்சயம் சிம்பு ஜெயிப்பார் என்று தனுஷும் வாழ்த்தியிருக்கிறார்.
ஆக வரும் வெள்ளிக்கிழமையன்று தனுஷின் ‘மாரி’ படம் போட்டியே இல்லாமல் களம் இறங்குகிறது..!