தமிழ் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகும் படம் ‘வா பகண்டையா’.
படத்தின் தலைப்பே சற்று யோசிக்க வைக்கும்விதத்தில் இருப்பது போல, படத்தின் கதையும், படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.
‘வா பகண்டையா’ என்பது ஒரு கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ‘வா பகண்டையா’ என்ற கிராமம்தான் கதைக் களம் என்பதால், படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக அறிமுக நடிகர் நிழன் நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார்.
இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து பாடல்கள் எழுதுகிறார். ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஏ.ராஜ்குமார், சுவேதா மோகன், ரீட்டா, யாசீன் நிஸார், தீபக் ஆகியோர் பாடியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்துள்ளன.
ஒளி ரெவல்யூசன் சார்பில் ப.ஜெயகுமார் இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியும் இருக்கிறார்.

‘வா பகண்டையா’ கிராமத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவனும், தட கள வீரனுமான ஹீரோவும், அதே கிராமத்தை சேர்ந்த மிராசுதாரரின் மகளான ஹீரோயினும் சிறு வயது முதலே நட்பாக பழகுகிறார்கள். பிறகு அதுவே காதலாக மலர, இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஹீரோவை இந்தியாவின் சிறந்த தட கள வீரனாக்குவதற்காக ஹீரோயின் போராடி வருகிறார்.
அதே சமயம், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்களின் காதலுக்கு அவர்களது சமூகம் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறும் காதல் ஜோடி, தங்களது காதலை எதிர்ப்பவர்களை எதிர்த்து போராட, இறுதியில் அந்த போராட்டத்தில் வென்றார்களா.. ஹீரோவின் லட்சியத்தை ஹீரோயின் நிறைவேற்றினாரா.. என்பதுதான் படத்தின் கதை.
காதல், காமெடி, ஆக்ஷன் என முழுக்க, முழுக்க கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் மக்களுக்கு தேவையான மெசஜ் ஒன்றையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து, பின்னணி வேலைகளும் முழுமை பெற்றுள்ள ‘வா பகண்டையா’-வின் பாடல் வெளியீட்டு விழா, விரைவில் நடைபெற உள்ளது.
“பாடல் வெளியீட்டுக்குப் பிறகு பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் ஒலிப்பது உறுதி…” என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் படக் குழுவினர்.