இந்தப் படத்தை சாட் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஓ.ராஜா கஜினி தயாரித்து, இயக்கியுள்ளார்.
படத்தில் நாயகனாக ரோஷன் அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோயினாக ஹிரோஷினி கோமலி நடித்துள்ளார்.
மேலும், ‘வெயில்’ பிரியங்கா, வேல.ராமமூர்த்தி, மதுசூதனராவ், இரா.ரவிஷங்கர், ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ புகழ் மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘கும்கி’, ‘மைனா’, தடையறத் தாக்க’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ‘மைனா’ சுகுமாரின் உதவியாளர்.
ரகுநந்தன் இசையமைக்க, மோகன்ராஜ், அருண் பாரதி, ‘கானா’ சுதாகர் மற்றும் ரோகேஷ் நால்வரும் பாடல் எழுதியிருக்கிறார்கள். நடனத்தை எஸ்.எல்.பாலாஜி, ராதிகா, சாய்பாரதி, மற்றும் ஹரீஷ் கார்த்திக் ஆகியோர் இணைந்து அமைத்திருக்கிறார்கள்.
பில்லா’ ஜெகன் சண்டைக் காட்சிகளை இயக்கியிருக்கிறார். படத் தொகுப்பை எஸ்.பி.அகமது கையாண்டிருக்கிறார். கலை இயக்கத்தை மோகன மகேந்திரன் மேற்கொள்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஓ.ராஜா கஜினி.
கல்லூரி மாணவரான நாயகன் ரோஷன், அநீதி எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்கும் குணமுடையவர். இதனாலேயே அவருடைய கல்லூரியில் அவர் பிரபலமாகியிருக்கிறா். கல்லூரியில் நடக்கும் மாணவர் பேரவை தேர்தலிலும் அவரே நின்று ஜெயித்து தலைவராகிறார்.
அருகில் இருக்கும் மகளிர் கல்லூரியில் கட்டிட வேலைகள் நடப்பதால் ஆண்கள் கல்லூரியிலேயே பெண்களும் சேர்ந்து படிக்க வருகிறார்கள். இதனால் நாயகி ஹிரோஸினி கல்லூரிக்குள் படிக்க வருகிறார்.
அவரைப் பார்த்தவுடன் வழக்கமான பாணியில் நாயகன் லவ்வாகிறார். ஆனால் ஒரு பிரச்சினையில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. பின்பு அதே கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றும் ‘வெயில்’ பிரியங்கா மூலமாக ஹீரோ பற்றிய நல்ல செய்திகள் நாயகிக்குத் தெரிய வர சட்டென்று காதலும் பிறக்கிறது.
இந்தக் காதல் நாயகியின் தந்தையான போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுசூதனனுக்குப் பிடிக்கவில்லை. அவர் இவர்களின் காதலை எதிர்க்கிறார். கல்லூரி விவகாரங்களில் தலையிட்டதால் ஹீரோ மீது ஊர்ப் பிரமுகரான வேல.ராமமூர்த்திக்கு கோபம் வருகிறது. அதே நேரம் நாயகனுக்கு இன்னொரு தாதாவான இரா.ரவிஷங்கர் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்.
இந்தக் காதல் எங்கே போய் முடிகிறது.. எப்படி முடிகிறது.. காதலர்கள் இருவரும் இணைந்தார்களா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் திரைக்கதை.
நாயகன் ரோஷன் புதுமுகம் என்பதால் அதிகமாக அவரிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது வரையில் நடித்திருக்கிறார். நடனக் காட்சிகளில் சிரமத்தைக் காட்டியிருக்கிறார் என்றாலும் சண்டை காட்சிகளில் நிறைவாகவே செய்திருக்கிறார். நடிப்பில் இன்னும் மெருகேறிய பின்பே இவரை விமர்சனம் செய்யலாம்.
நாயகிக்கு அதிகமாக வேலையில்லை. வழமையான சினிமா நாயகிகள்போலவே படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், நாயகனைவிடவும் ஒரு படி மேலே நடித்திருக்கிறார்.
பிரென்ச் டைப் லிப் கிஸ்ஸா அல்லது இந்தியன் டைப் லிப் கிஸ்ஸா என்று யோசித்து காட்சிப்படுத்தும் அளவுக்கு மெனக்கெட்ட இயக்குநர், இப்போதைய யூத்துகள் மனதில் அமரும் அளவுக்கான காதல் காட்சிகளை உருவாக்குவதிலும் தன்னுடைய திறமையைக் காட்டியிருக்கலாம்.
மற்றக் கதாபாத்திரங்களில் ‘வெயில்’ பிரியங்கா கவனத்தை ஈர்க்கிறார். மற்றவர்கள் தங்களுக்கான பங்களிப்பை ஏதோ செய்திருக்கிறார்கள். நகைச்சுவைக்காக இருக்கும் காட்சிகளும் நம்மைச் சிரிக்க வைக்கவேயில்லை.
ஒளிப்பதிவாளர் ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு தரமானதாகத்தான் இருக்கிறது. பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ரகுநந்தனின் பாடல்கள் கேட்கும் ரகம். முதல் பாதியில் வரும் கல்லூரி பாடல்கள் ஆட வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
நாடு இன்றைக்கு இருக்கும் நிலைமையில் எது பற்றியும் மாணவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்பதைச் சொல்வது போலவே இந்தப் படத்திற்குத் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
1980-களில் முழுக்க, முழுக்க கல்லூரி, மாணவர்கள், காதலை மட்டுமே மையப்படுத்தி படங்கள் வந்திருந்தன. அதுபோன்ற கதை.. 40 வருடங்கள் கழித்து வந்திருக்கிறது.
இறுதிக் காட்சியில் காதலர்கள் தங்களை அடையாளம் காணும் காட்சியில் மட்டுமே இயக்குநரின் ‘டச்’ நன்கு தெரிகிறது.
திரைக்கதையில் இருக்கும் ஒழுங்கற்ற தன்மையினால் கதாபாத்திரங்களின் நடிப்பையும் நம்மால் உள் வாங்க முடியவில்லை. அவர்களாலும் சிறப்பாகக் கொடுக்க முடியவில்லை.
படத்தின் நீளமும் அதிகம். முதல் பாதியிலேயே 4 பாடல்களை ஒலிக்கின்றன. திரைக்கதையை சமன்படுத்தி, நீளத்தைக் குறைத்து, இயக்கத் திறனைக் கூட்டி படத்தை உருவாக்கியிருந்தால் ‘இந்த உற்றான் நமக்கும் உற்றான்’ என்று சொல்லியிருக்கலாம்..!