‘மாயநதி’ – சினிமா விமர்சனம்

‘மாயநதி’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நாயகனாக நடித்திருக்கிறார்.

‘காதல் கசக்குதய்யா’, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா இந்தப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தை கவனிக்க, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பினை செய்திருக்கிறார். தினேஷ் மாஸ்டர் இப்படத்தின் இரண்டு பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். நேரம் : 2 மணி 05 நிமிடங்கள்.

மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே இந்த ‘மாயநதி’ திரைப்படம்.

பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக் கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா..? என்பதை கூடுமானவரையிலான யதார்த்த கதையில் கூறியுள்ளார்கள்.

ஒரு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ‘ஆடுகளம்’ நரேன். இவருடைய ஒரே மகள்தான் நாயகியான ‘கெளசல்யா’ என்னும் வெண்பா.

வெண்பா கைக் குழந்தையாக இருக்கும்போதே தாயை இழந்தவர். அன்றிலிருந்து இப்போதுவரையிலும் ஒரு தாயுமானவனாக இருந்து தன் மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் நரேன்.

வெண்பா சிறப்பாக படிப்பவர். பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடத்தைப் பிடித்தவர். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். அரசுத் தேர்வுக்கான அழுத்தம் அவரிடத்தில் இருக்கிறது.

இந்த நேரத்தில் அவருடன் படிக்கும் ஒரு மாணவியின் நண்பன் அந்த ஊர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஒரே மகன். அவன் வெண்பாவை காதலிப்பதாகச் சொல்லி டார்ச்சர் செய்கிறான். வெண்பா அவனைப் புறக்கணிக்கிறாள்.

அதே ஊரில் வசிக்கும் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் நாயகன் அபி சரவணன். வெண்பா தினமும் பள்ளிக்குச் செல்வது ஒரு ஆட்டோவில். அந்த ஆட்டோ டிரைவருக்கு காலில் அடிபட்டதால் அவருக்குப் பதிலாக அபி சரவணன் வெண்பாவை ஆட்டோவில் அழைத்துச் சென்று வருகிறான்.

இந்த நேரத்தில் தன்னைக் காதலிக்காத வெண்பா மீது திராவகம் வீசுகிறான் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன். இதை கடைசி நிமிடத்தில் பார்க்கும் அபி சரவணன் அதைத் தடுத்து வெண்பாவைக் காப்பாற்றுகிறான்.

இந்தக் காப்பாற்றுதலைத் தொடர்ந்து அபி சரவணன் மீது வெண்பாவுக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. இந்த ஈர்ப்பினை அபி சரவணனின் நண்பரான அப்புக்குட்டி ஏற்றிவிட.. அது அபி சரவணனுக்குள் காதலாக மாறுகிறது. இந்தக் காதல் ரியாக்டர் வெண்பாவையும் தொற்றிக் கொள்கிறது. இப்போது அவரது படிப்பு கெடுகிறது.

இந்தச் சூழலில் இதையறியும் அப்பா நரேன் மகளுக்கு அட்வைஸ் செய்ய.. முதலில் படிப்பைப் பார்க்கலாம் என்று தீர்மானிக்கிறாள் வெண்பா. ஆனால் அபி சரவணன் அவள் படிப்பு முடிந்தவுடன் தன்னை மறந்துவிட்டுப் போய்விடுவாளோ என்று நினைத்து திருமணத்திற்கு வற்புறுத்துகிறார்.

ஒரு நாள் வெண்பா இளமையின் தூண்டுதலில் அபி சரவணனை கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார். இதைப் பார்த்த அவரது அப்பா மனம் வெறுத்து எங்கோ போய்விடுகிறார்.

இதன் பின் நடப்பது என்ன என்பதுதான் இந்த ‘மாயநதி’ படத்தின் திரைக்கதை.

சில திரைப்படங்களில் நடித்த முன் அனுபவத்தை வைத்து தனது நடிப்பை திறம்படக் காட்டியிருக்கிறார் நாயகன் அபி சரவணன். தனது தந்தையிடம் முறைப்பதாகட்டும்.. நண்பர்களிடம் உதார் விடுவதாகட்டும்.. நாயகியிடம் காதல்வயப்பட்டதை உணரும் தருணமாகட்டும்.. சந்தேகமேயில்லாமல் தனது இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

திரைக்கதையின்படி அவர் செய்யும் அவசரத்தனமான திருமண நடவடிக்கை அவர் மீதான வெறுப்பை ஏற்படுத்தம் அளவுக்கு நடித்திருக்கிறார். அந்த ஒரு சில காட்சிகளில் ‘ஓ.கே’ என்று சொல்லும் அளவுக்கு காட்சிகளுடன் பொருந்தியிருக்கிறார். இவருக்கு ஏன் இன்னமும் சரியான இடம் தமிழ்த் திரையுலகத்தில் கிடைக்கவில்லை என்பது புரியவில்லை. சரியான இயக்குநரும், படமும், நேரமும் அமைந்தால் அது கிடைக்க வாய்ப்புண்டு.

நாயகியாக வெண்பா. இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்தியிருக்கிறார். அப்பா மீதான பாசம்.. படிப்பு மீதான அக்கறை.. நண்பி மீதான அன்பு.. அபி சரவணன் மீதான காதல் உணர்வு.. இதேபோல் படிப்புக்கும், காதலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு ஊசலாடும் தருணத்தை மிக அழகாக தன் முகத்தில் காண்பித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் தனது வாழ்க்கைக் கதையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுமிடத்தில் ஒரு சோகத்தை அப்படியே கொண்டு வந்துவிட்டார். பாராட்டுக்கள்.

அக்மார்க் பாசமான அப்பாவாக ‘ஆடுகளம்’ நரேன். வேறொரு நடிகரை நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு அந்தப் பாசத்தை அப்படியே காட்டியிருக்கிறார். மகளது காதலை ஏற்கவும் முடியாமல்.. ஜீரணிக்கவும் வழியில்லாமல் அவர் செய்யும் கடைசி முடிவு பரிதாபமானது..

நண்பராக அப்புக்குட்டி சில, பல சிரிப்பலைகளை எழுப்பியிருக்கிறார். உதவிக்கு கார்த்திக் ராஜாவின் பங்களிப்பும் சிறப்பு.

சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதிவு காண்பித்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கியிருக்கும்விதம் அருமை. அந்த லைட்டிங் செட்டிங்ஸே படத்தின் இதமான முடிவுக்கு ரசிகர்களைக் கொண்டு வருகிறது.

பவதாரணியின் இசையில் ‘இங்கு நீதானே’ பாடல் ரசிக்க வைத்திருக்கிறது. காதல் பாடலைவிடவும் காட்சிகளே கவர்ந்திழுக்கிறது.

படத்தில் ‘நல்லதைக் காட்டுகிறேன்’ என்கிற போர்வையில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண் மீது திராவகம் வீச வரும் காட்சி.. ஹீரோயிஸமாக அதை ஹீரோ தடுப்பது என்ற காட்சியை வைத்திருப்பது நமது கண்டனங்கள். நீக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி இது.

இதை இள வயதினர் பார்த்தால் இதைத்தான் தீர்வாக நினைப்பார்கள். அது அவர்களது அப்போதைய மன நிலையைப் பொறுத்தது. அதனை நாம் தூண்டிவிடக் கூடாது. இயக்குநர் தனது அடுத்தப் படத்தில் கவனமாக இருக்க வேண்டுகிறோம்.

பதின்ம வயதில் ஏற்படும் ‘இனக் கவர்ச்சி’யை இன்னமும் ‘காதல்’ என்ற போர்வையில் பலரும் நினைத்து அதில் வீழ்ந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ‘அது தவறு’ என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டியதை லைட்டாக சொல்லிவிட்டுப் போயிருப்பதுதான் படத்தின் மீதான மிகப் பெரிய கரும்புள்ளி.

அபி சரவணன் தான் செய்தது தவறு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். அதையும் அவர் சொல்லவில்லை. மாறாக.. வேறொரு காதலுக்காக தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள நினைப்பது எப்பேர்பட்ட முட்டாள்தனம்..? அதனால் வெண்பாவின் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்று அவர் நினைக்கவில்லையே..

இதுதான் இள வயது மனிதர்களின் மன நிலை. புரியாத நிலையில் இருப்பவர்களின் காதல்.. இப்படி அழுத்தம் திருத்தமாய் சொல்லி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய திரைப்படம், அதைச் செய்யாமல் முடிந்திருக்கிறது.

எப்படியிருந்தாலும் படம் பார்க்கும் இளம் காதலர்களுக்கு ஒரு படிப்பினையை இந்தப் படம் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

Our Score