நவீன் கிருஷ்ணா இயக்கிய ‘உத்ரா’ படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது

நவீன் கிருஷ்ணா இயக்கிய ‘உத்ரா’ படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது

பேண்டஸி கதைகளுக்கு எப்போதும் ரசிர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் ரசிகர்களின் மனதை கவரும்விதத்தில் ‘உத்ரா’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகியான உத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரக்‌ஷா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அம்மன் வேடத்தில்  நடிகை கெளசல்யா நடித்திருக்கிறார். மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – எம்.சக்கரவர்த்தி, திரைக்கதை, இயக்கம் – நவீன் கிருஷ்ணா, இசை – சாய்தேவ், ஒளிப்பதிவு – ரமேஷ், வசனம் – குமார், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, சண்டை இயக்கம் – கில்லி சேகர், நடன இயக்கம் – ராதிகா.

படம் பற்றி இயக்குநர் நவீன் கிருஷ்ணா பேசும்போது, “வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை. அவ்வளவு ஏன்?  திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.  அப்படியே அந்த ஊரில் மீறி திருமணம் நடந்தாலும்  அந்த புதுமணத் தம்பதிகள் அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள்.

இது மூட நம்பிக்கை என்று கல்லூரி மாணவர்கள் நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை தேர்வு செய்து திருமணம் செய்வது போல் நாடகமாடுகிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.

அதை நம்பும் கிராம மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமான புதுமண தம்பதி அன்றிரவே  அரூபத்தால் கொலை செய்யப்படுகிறார்கள். கொலை எப்படி, ஏன் நடக்கிறது, கொலையாளி யார்?  என்பதை கல்லூரி மாணவர்கள்  கண்டுபிடிக்கிறார்கள்.

அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக் கிராமத்தில்  அம்மனின் பக்தையாக வாழ்ந்த உத்ரா என்ற பெண்ணின் சாபத்தால்தான் இந்தத் தொடர் மரணங்கள் நிகழ்கிறது என தெரிய வருகிறது.

அந்த சாபத்தை நீக்க, உத்ராவையும் அவள் காதலனையும் கொன்ற வில்லன் மாசியை அந்த ஊர் எல்லைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்.

ஆனால்,  எந்த அம்மனுக்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாளோ அந்த அம்மனே உத்ரா ஒர்  இறந்த ஆத்மா என தன் சன்னதிக்குள் அனுமதிக்க மறுக்கிறது. அதனால் அம்மனுக்கும், உத்ராவிற்கும் இடையே வாக்குவாதம் உண்டாகிறது.

அதை தொடர்ந்து அம்மன் ஆவி உருவமான உத்ராவை மாசியை கொல்ல அனுமதித்தாளா..? கல்லூரி மாணவர்கள்  உதவியுடன் உத்ரா மாசியை பழி வாங்கினாளா..? என்பதுதான் ‘உத்ரா’ படத்தின் விறுவிறு திரைக்கதை…” என்றார்.

இந்த ‘உத்ரா’ திரைப்படம் வரும் டிசம்பர் 10-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

Our Score