‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘பயணம்’, ‘அபியும் நானும்’, ‘கெளரவம்’ என்று குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படங்களை எடுத்து பெயர் பெற்றிருக்கும் இயக்குநர் ராதா மோகனின் அடுத்த படமான ‘உப்பு கருவாடு’ வரும் நவம்பர் 27, வெள்ளியன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமாரவேல், சாம்ஸ் நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், பிரபல நடன கலைஞர் சதீஷ், டவுட் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி. ஸ்டீவ் வாட்ஸ் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.
First Copy Pictures மற்றும் Night Show Cinema ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. Auraa Cinemas நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
படத்தின் டிரெயிலரும், இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. டிரெயிலரை பார்த்தபோதே படத்தின் கதை என்னவென்று ஓரளவுக்கு ஊகிக்க முடிந்த்து.
சினிமா சம்பந்தமான கதைதான். சினிமாவில இயக்குநராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் பயணிக்கும் கருணாகரனுக்கு 9 நவக்கிரகங்களாக அவரைச் சுற்றி 9 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் சில செயல்களால் இவருடைய சினிமா கனவு கொஞ்சம், கொஞ்சமாக கலைந்து போவதும், கடைசியாக எப்படி அவர் தன்னுடைய லட்சியத்தை அடைகிறார் என்பதுதான் படம் போல தோன்றுகிறது.
தன்னுடைய படம் என்றாலே அதில் குத்துப் பாடல் இருக்காது என்கிற மாயையை இதில் உடைத்தெறிந்திருக்கிறார் ராதாமோகன். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குத்துப் பாடல் காட்சியில் நந்திதா செமத்தியான குத்தாட்டம் போட்டிருக்கிறார். ஆனால் உடைகளில் ஒரு டீசன்ஸி தெரிகிறது..!
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “மொழி படத்தில் நான் எதுவுமே சொந்தமா செய்யலை. ராதாமோகன் என்ன செய்யச் சொன்னாரோ அதைத்தான் நான் செய்தேன். அந்தப் படத்தில் எனக்கு மாநில அரசின் விருது கிடைத்தாலும், அதற்கான முழு பெருமை ராதாமோகனையே சேரும். இந்தப் படத்திலும் அவர் என்ன சொன்னாரோ.. அதையேதான் செய்திருக்கிறேன். இந்தப் படமும் ‘மொழி’ போலவே நிச்சயம் பேசப்படும்.” என்றார்.
‘உப்பு கருவாடு’ படத்தை உலகமெங்கும் வெளியிடும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனத்தின் தலைவர் மகேஷ் கோவிந்தராஜ் பேசும்போது, ”இந்தப் படத்தை என் தந்தையுடன்தான் பார்த்தேன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். அப்படி ரசித்துப் பார்த்தார். அதைப் பார்க்கவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. வெளியே வந்தபோது என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அப்படியொரு நகைச்சுவைப் படம் இது. தமிழகத்தில் 180 தியேட்டர்களில் வெளியிடுகிறோம். உலகம் முழுக்க பல நாடுகளிலும் இந்தப் படத்தைத் திரையிட ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
ஒரு தியேட்டர் அதிபர் என்னிடம் படத்தில் யார் நடித்திருக்கிறார்கள்.. யார் இயக்குநர் என்றெல்லாம் கேட்டுவிட்டு ‘உங்க படம் எனக்கு வேண்டாம்’ என்றார். ‘ஏன் ஸார். நல்ல டைரக்டர். நல்ல காமெடி படம் ஸார்.’ என்றேன். ‘இல்ல.. வேண்டாம். வசூல் வராது. எனக்கு வசூல்தான் முக்கியம்..’ என்றார். இப்படி சிலர் சொல்வதை பார்க்கும்போது மனசுக்கு ரொம்பவும் வேதனையாவும் இருக்கு..” என்றார்.
அடுத்து பேச வந்த தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன், ”நான் வங்கியில் பணியாற்றி வந்தேன். அங்கே ஓய்வு பெற்று அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஒரு படம் எடுக்கலாம் என்ற யோசனை வந்தது. அந்த நேரத்தில் நண்பன் வெங்கட்டுதான் இந்த ராதாமோகனை என்னிடத்தில் அழைத்து வந்து கதை கேட்க வைத்தார். வெங்கட் ஸாருக்கு எனது நன்றி..
ராதாமோகனிடம் கதை கேட்டவுடனேயே எனக்குப் பிடித்திருந்தது. அவருடைய முந்தைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன். அத்தனை அற்புதமானவை அவை. அவருடைய இயக்கத்தில் நான் ஒரு படம் தயாரிப்பது எனக்கே பெருமையான விஷயம்.
மகேஷ் ஸார் இந்தப் படத்தை பார்த்துவிட்டு மத்தவங்க மாதிரி ‘அப்புறமா பேசுறேன்.. ஒரு வாரம் கழித்து பார்ப்போம்’ என்றெல்லாம் சொல்லாமல்.. படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடனேயே, ‘இந்தப் படத்தை நான் வாங்கிக்கிறேன் ஸார்’ என்று சொன்னார். அவருக்கும் எனது நன்றி.
இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணியமான நகைச்சுவைப் படமாக வந்திருக்கிறது. எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் படம் இது. இந்தப் படத்தை வேண்டாம் என்று சொன்ன தியேட்டர்காரர்கள்கூட, படம் வந்த பிறகு நிச்சயம் இந்தப் படம் வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போடுவார்கள்.
ராதா மோகன் மிகச் சிறந்த இயக்குநராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் இருப்பவர். ராதா மோகனோடு இன்னொரு படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்…” என்றார்.
இயக்குநர் ராதா மோகன் பேசும்போது, ”சில கதாபாத்திரங்களை வடிவமைக்கும்போதே அதற்கு பொருத்தமான முகங்களும் ஞாபகத்திற்கு வரும். இந்தப் படத்தில் நந்திதாவுக்கு வித்தியாசமான, முக்கியமான கதாபாத்திரம். எனக்கு இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே நந்திதா முகம்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. அவரை மனதில் வைத்துத்தான் அவருடைய கேரக்டரை உருவாக்கினேன். மேலும், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், நந்திதா எல்லோரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள். எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி…” என்றார் .