full screen background image

குழந்தைகளின் வளர்ப்பு பற்றி சொல்லித் தரும் படம் ‘பசங்க-2’

குழந்தைகளின் வளர்ப்பு பற்றி சொல்லித் தரும் படம் ‘பசங்க-2’

இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனமும் நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘பசங்க-2’.

pasanga 2 movie poster

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் அமலா பால், பிந்து மாதவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல குட்டீஸ்களும் படத்தில் நடித்துள்ளனர்.

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய.. அரோல் கொரோலி இசையமைத்திருக்கிறார்.  கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்திருக்கிறார். கலை இயக்கம் – எம்.பிரபாகர். நா.முத்துக்குமார், யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளனர். ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக். இணை தயாரிப்பு – ராஜசேகர், கற்பூரசுந்தபாண்டியன். எழுதி, இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. வரும் டிசம்பர் 4-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

இந்த ‘பசங்க-2’ படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் இன்று அளித்துள்ள விரிவான பேட்டி இது :

“எப்போதும் என் இயக்கத்தில் நல்ல படங்களையும் வித்தியாசமான படங்களையும் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

director-pandiraj (1)

ஆனால் என்னைப் பெறுத்தவரை எத்தனை படம் இயக்கினாலும்  குழந்தைகளுக்காக எப்போதும் ஒரு படம் இயக்க  வேண்டும் என்பதே என் ஆசையும், மகிழ்ச்சியும். சமீபத்தில் ‘காக்கா முட்டை’ பார்க்கும்போது அதுபோல் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் தோன்றியது.

பசங்க-1’ படத்தில் நான், என் நண்பர்கள்  என்னுடைய ஆசிரியர்கள் நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்திருந்தேன். ஆனால் இந்த ‘பசங்க-2’ முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

‘பசங்க-1’-ல் நடித்த எந்த கதாபாத்திரங்களும் இதில் இடம் பெறவில்லை. ‘பசங்க-2’ படத்தின் மையக் கதை என்னவென்று பார்த்தால் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளை பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள்  பயிலும் கல்வி முறையைப் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம்.

இந்தப் படத்திற்கான கதை ‘வம்சம்’ திரைப்படம் முடிந்தபொழுதே எனக்குக் கிடைத்துவிட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை  உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது. அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லவிருக்கும் கருத்துகள்  நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் சுமார் இரண்டு வருடங்கள் இது குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகவும் இருந்தது.

ஆய்வு என்பது சின்ன, சின்ன விஷயங்களில் மட்டும்தான். அதற்காக இந்தப் படம் அறிவியல் ரீதியான படமாக இருக்குமோ என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ‘Attensive Tyber Hyber DeActive’ என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் இந்தக் கதைக்கு அதிகமாக தேவைப்பட்டது. இப்படிப்பட்ட குழந்தைகள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இவர்கள் ‘சூப்பர் கிட்ஸ்’ அதாவது ‘அதீத புத்திசாலிகள்’  என்றும் சொல்லலாம். 

ஏன் என்றால் சாதாரணமாக மனிதனின் ‘IQU’ 110 என்றால் அதுவே குழந்தைகளுக்கு 120, 130-ஆக இருக்கும். அவர்களை நாம் சாதாரணமாக பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு துறு துறுவென்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய படம் என்பதால் ஆய்வில் ஏதாவது இது போன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் இதுவரை வரவில்லை.

மாதிரி படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை  சந்தித்து அவர்களைப் பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம். அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னர்தான் படத்தை துவக்கினோம்.

குழந்தைகள் மிகவும் ஜாலியாக லூட்டியடித்து ரசிகர்களை ரசனையில் ஆழ்த்துவார்கள். ஆனால் இந்த படத்தில் எந்தவிதமான காதல் காட்சிகளும் இடம் பெறாது. இதில் சூர்யாவும் ஒரு குழந்தைகள்  மருத்துவராக வந்து குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார்..

அதுவும் அறிவுரை சொல்வது போலில்லாமல் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக குழந்தைகள் சேட்டைகள் செய்யும் அதை நாம் நம் சிறுவயதில் நம் அப்பா, அம்மாவிடம் செய்த தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு நாம் ஏன் கோபப்பட வேண்டும் என்பதை எடுத்துரைப்பதுதான் சூர்யாவின் கதாபாத்திரம். அதைத் தவிர்த்து இந்தப் படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் இல்லை.

இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம் சூர்யா, அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் இது போன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப் பெரிய ஒன்று. ஏனென்றால் அவருடைய  ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும். அவர்களின் ஆதரவும் படத்திற்கு மிகவும் முக்கியம்.

இந்த முறை தெலுங்கு இசை வெளியிட்டு விழாவிற்க்கு போனபோது சூர்யாவிற்கு தமிழுக்கு இணையாக தெலுங்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது பெயரை மேடையில் உச்சரிக்கும்போதே அவ்வளவு கர ஓசைகள், ஆரவாரங்கள் என்று அரங்கமே அதிர்ந்தது. நான் அந்த பயணத்தில் சூர்யாவிடம், ‘நீங்கள் சீக்கிரமாக நேரடி தெலுங்கில் நடித்து உங்களுடைய ரசிகர்குக்கு விருந்தளிக்கவேண்டும்’ என்றேன். அப்படிப்பட்ட நடிகர் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பது பெருமைக்குரியது.

இந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் துவங்கினாலும் நாம் சொல்வது ஒரு நல்ல கருத்து, நல்ல படம் இதை பணத்துக்காக இல்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக  இருக்க வேண்டும்  என்பதால் இதை சூர்யாவின் வாயிலாக கொண்டு செல்லும்போது இன்னும் அதிக மக்களை சென்றடையும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம்.

இந்தப் படத்தை பார்த்து விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவரின் மனதிலும் இந்தப் படத்துல இரண்டு மணி நேரம் நல்ல கருத்தை கொடுத்துள்ளனர். இதேபோல் நாமும் நம் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் ஏற்படும்.

குழந்தையை எப்படி வளர்ப்பது மற்றும் குழந்தை இல்லாதவர்கள் எப்படி குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொள்வார்கள். அது மட்டுமின்றி இந்தப் படத்தை மற்றவர்களையும் பார்க்குமாறு சொல்வார்கள். அதுதான் எங்களின் வெற்றியாக அமையும்.

சூர்யாவிற்க்கு ஒரு ஜோடி கதைக்கு தேவைப்பட்ட நேரத்தில் சூர்யா-ஜோதிகா என்று முடிவு செய்தோம் அவர்களும் சரி என்று சொன்னார்கள். பின்பு ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால், இதில்  நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக யார் என்று யோசிக்கும்போது அமலாபால் இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இயக்குநர் விஜய்யிடம் பேசினேன். ‘அமலா திருமணத்திற்க்கு பிறகு நடிக்க மாட்டாரே.. இருந்தாலும் குழந்தைகள் படம் என்பதால் கேட்டு பார்க்கிறேன்’ என்று அம்லாபாலிடம் பேசியதும், அவரும் இது குழந்தைகள் பற்றிய படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே போல் பிந்துமாதவி அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்கள் அனைவரும் இந்தப் படத்தில் இணைவதற்கு காரணம் ஒன்றுதான்.. அது இந்தப் படம் குழந்தைகளுக்கான படம் என்பதுதான். குழந்தைகளுக்கான படம் என்பதில் தீவிரமாக இருக்க காரணம், எனக்கும் இரண்டு குழந்தைகள்  இருக்கிறது. ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான்.. இன்னொருவன் யு.கே.ஜி. படிக்கிறான்.

இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள். அவர்களுக்கு வேலையே எங்களது வீட்டு சுவரில் பேனா, பென்சில் வைத்து கிறுக்குவதுதான். நாங்கள் அவர்களுக்கு கிறுக்க பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுப்பதுதான் வேலையே. என் வீட்டிற்க்கு வந்தாள் புரியும். அதுதான் என் வீட்டிற்கு அழகு. சில சமயங்களில் அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் அந்த ஓவியங்கள் எங்களிடம் பேசுகின்றன.. அதுதான் ஆனந்தம்.

குழந்தைகளிடம் வீட்டிலும் சரி.. பள்ளியிலும் சரி  எதையும்  தினிப்பது கிடையாது. அவனுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறேன்.. என்ன தரம் வாங்கினாலும் அவனை பாராட்டுகிறேன்..  அதை அவன் ரசிக்கிறான்.. இப்பவே அவனுக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளது. எனது படத்தின் பாடல்களை அவனுக்கு போட்டுக் காட்டுவேன். அவன் ஆடுவதற்கேற்ற பாடல் இல்லை என்றால் பாட்டை மாத்து என்று சொல்லிவிடுவான். அவனுக்கு பசங்க-2-வில் உள்ள ‘சோட்டா பீமா’ பாடல் மிகவும் பிடிக்கும். வீட்டிற்கு போனால் அந்த பாடலைத்தான் போட்டு ஆடுவான்.

என் அப்பா எனக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தது கிடையாது நான் சுமாராக படித்ததால் என்னை அடி பின்னி எடுத்துவிடுவார். எப்போதும் என்னை என்னுடன் படித்த ஆசிரியர் மகனுடன் ஒப்பிட்டு பேசுவார். அவர் பள்ளிக்கு போகாத காரணத்தால்  அவருடைய ஆசைகளை என்னிடம் திணித்து நிறைவேற்ற ஆசைப்பட்டார்.

ஆனால் நான் என் அப்பா போல் கிடையாது. என் அப்பாவிடம் ‘நான் சினிமாவுக்கு போகிறேன்’ என்றேன் அவர் ஜாதகம் பார்த்துவிட்டு ‘உனக்கு இரும்பு கடைதான் சரியாக வரும். நீயும் அண்ணனை போல் கடை வைத்துவிடு’ என்றார்.

அப்பாவை எதிர்த்து சினிமாவிற்கு வந்தேன். ஒவ்வொருமுறையும் புதிய படம் இயக்கும்  போதும் முதல் படம் இயக்குவது போல்தான் இருக்கிறது. இன்னும் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எனக்கு இந்த ‘பசங்க-2’ படத்தில் கிடைத்த ஊதியம் விஷால் படத்தைவிட குறைவுதான். 

‘பசங்க-2’ குடும்பத்துடனும்,  குழந்தைகளுடனும் வந்து ரசிக்கும்படியாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை..” என்றார் ஒரே மூச்சாக..!

‘பசங்க’ படம் போலவே இதுவும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.!

Our Score