ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’..!

இயக்குனர் ராதா மோகனின் படங்களில் எப்பொழுதுமே இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அவரது படத்தில் வரும் பாடல்கள் வருடங்கள் கடந்தும் நினைவில் இருக்கும்.

அதேபோல் இவரது இயக்கத்தில் தற்போது வெளி வர தயாராக இருக்கும் 'உப்பு கருவாடு' படத்தின் பாடல்களும் தமிழ்த் திரை ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற நம்பிக்கையுள்ளது.

சமீபத்தில் நடிகை ஜோதிகா வெளியிட்ட இந்தப் படத்தின் டீசர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பட நிறுவனத்தினர் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த உள்ளனர்.

கருணாகரன், நந்திதா ஆகியோருடன் எம் எஸ் பாஸ்கர், மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன் மற்றும் டவுட் செந்தில் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை உரிமையை SONY நிறுவனத்தார் பெற்று உள்ளனர்.

“இந்த உப்புக் கருவாடு படத்தின் பாடல்களுக்கு நிச்சயம் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம். விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. அதையடுத்து படத்தினை ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபடவுள்ளோம். திரை உலகில் இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பினை நிச்சயம் இந்தப் படம் நிறைவேற்றும்..." என்கிறார் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.

இந்த 'உப்புக் கருவாடு' படத்தின் தமிழக விநியோக உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.