“இதுக்கு கவுண்டமணியைவிட்டால் வேற யார் இருக்கா..?” – இயக்குநர் ஆரோக்கியதாஸின் கேள்வி..!

“இதுக்கு கவுண்டமணியைவிட்டால் வேற யார் இருக்கா..?” – இயக்குநர் ஆரோக்கியதாஸின் கேள்வி..!

சில நாட்களுக்கு முன்னர் ‘49-ஒ’ படத்தின் இசை வெளியீட்டின்போது மேடையில் கதாநாயகன் கவுண்டமணியுடன் சத்தியராஜும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடத்திய அரட்டை கலாட்டா அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

அந்த நகைச்சுவை பேரலையிலும்  கவுண்டமணி  விவசாயிகளைப் பற்றி ஆற்றிய உரை எல்லோரையும் சிந்திக்க வைத்தது. இந்தச் சிந்தனைக்கு  மூலக் காரணம் இயக்குனர் ஆரோக்கியதாஸ் என்பது  அனைவரும் அறிந்ததே. இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனிடம்  உதவியாளராக பணியாற்றிய ஆரோக்கியதாஸ், விவசாயம் மேல் தான் கொண்டு இருக்கும் அன்பையும் கவுண்டமணியுடன் தான் பணியாற்றிய அனுபவத்தையும் இங்கே கூறுகிறார்.

“நான் கிராமிய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன். ஒவ்வொரு விவசாயியின் வாழ்வின் ஆதார பிரச்சினையை கண்ணெதிரே கண்டவன். சமுதாயத்தில் விவசாயி மட்டுமே எப்பொழுதும் பின் தங்கியவனாகவே இருக்கிறான். அதற்கு காரணம் சமுதாயமா, அரசியலா, பொருளாதாரமா என்ற ஐயம் என் நெஞ்சை அரித்துக் கொண்டே இருக்கும்.

இதைப் பற்றிப் படம் எடுக்க முடிவு செய்யும்போதே அதன் அடிப்படை நையாண்டியாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். ஒரு மாபெரும் படையைவிட ஒரு நேர்மையாளனின் நாக்கும் அவனது   நையாண்டியும் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்தவன் நான். 

அத்தகைய ஒரு பாத்திரப் படைப்புக்கு கவுண்டமணி சாரை விட உகந்தவர் யார்.? திரைக்கு அப்பாற்பட்டு  அவருக்கு இருக்கும் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும், விழிப்புணர்ச்சியும் வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலனுக்கு பல கோடி நன்றி…”  என்றார் ஆரோக்கியதாஸ். 

Our Score