“என் அப்பா ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ பிரகாஷ்ராஜ் மாதிரி..” – நெகிழும் நடிகர் சக்திவேல் வாசு

“என் அப்பா ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ பிரகாஷ்ராஜ் மாதிரி..” – நெகிழும் நடிகர் சக்திவேல் வாசு

இன்று காலையில் கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘தற்காப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ஹீரோ சக்திவேல்வாசுவும் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது,  “இந்தப் படத்துக்கு நிறைய பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது. காரணம், நாங்கள் எல்லாருமே நல்லவர்கள். சமுத்திரக்கனி என்றாலே பாசிடிவ் எனர்ஜிதான். அதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.

என் அப்பா எனக்காகப் போய் வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குநர் மிஷ்கின் சார்தான். இங்கே அவர் வந்திருக்கிறார். ஜனநாதன் சார் வந்திருக்கிறார். கார்த்தி அண்ணா வந்து இருக்கிறார். அவர் ‘சிறுத்தை’யில் நடித்த போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். காரணம் சிக்ஸ் பேக்ஸ் இருக்காது. அதே போல ‘தல’ அஜீத் நடிக்கும் யதார்த்தமான போலீஸ் கேரக்டர்களும் எனக்குப் பிடிக்கும். அவர் எப்போதும் யதார்த்தமாக போலீஸ் தொப்பையுடன்தான்  வருவார். தொப்பை இல்லை என்றால் தமிழ்நாடு போலீசே கிடையாது.

அப்பாவுக்கும் எனக்கும் நெருக்கம் குறைவு. அப்பா பேச மாட்டாரா என்று நினைத்து ஏங்கி இருக்கிறேன். அப்பா எப்போதும் சினிமா, சினிமா என்று பரபரப்பாக இருப்பார். ஆனால் அதெல்லாம் குடும்பத்திற்காக என்று எனக்கு மனைவி, மகன் என்று வந்த பிறகு இப்போதுதான் புரிகிறது.

அப்பாக்கள், மகன்கள் மீது வைத்திருக்கும் பாசம் வெளியில் தெரியாது. என் அப்பா சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் மாதிரி. நான் ஜெயம் ரவி மாதிரி. அப்படித்தான்  பல நாள் நினைத்திருந்தேன். அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது.

இந்தப் படத்துக்காக நாங்கள் வியர்வைதான் சிந்தினோம். ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொழிலாளர்கள் எல்லாமே ரத்தம் சிந்தினார்கள். ஒருவருக்கு ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார். அவரது மண்டை உடைந்து விட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.

மறுநாள் மருத்துவமனைக்கு போய் அந்தத் தொழிலாளரை பார்த்து, ‘எப்படி இருக்கிறீர்கள்..?’ என்றேன்.. ‘நான் நல்லாருக்கேன் ஸார். நம்ம ஷூட்டிங் எப்படி போகுது?’ என்று விசாரித்தார்.. எனக்கு அழுகையே வந்துவிட்டது, தொழிலாளர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ” என்றார்.

Our Score