பிரபலமான, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள் ஒரு படத்தின் தலைப்பாக வருவது அந்த படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால்தான். நடிகர் அஜீத் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்று மிக பிரபலமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலின் முதல் வரியை தலைப்பாகக் கொண்டு இப்போது ஒரு படம் உருவாகிறது.
‘டெய்சி’ என்று முதலில் தலைப்பிடப்பட்டு பிறகு இந்தப் படத்தின் கதையின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்குமன்பதால் ‘உனக்கென்ன வேணும் சொல்லு. டெய்சி ‘ என்று மாற்றப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி, ‘மைம்’ கோபி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி, படத் தொகுப்பாளர் –ஹரிஹரன், இசை – சிவ சரவணன், கலை இயக்குனர் – CH மோகன்ஜி, கதை – MRK & ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பு – N ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின், இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம்.
படம் பற்றி பேசிய இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம், “இந்தக் கதை அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையாக இருந்தாலும், மூலக் கருத்து ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் கதைதான். இந்தக் கதைக்கு பொருத்தமாக பல தலைப்புகள் தேடினோம்.. எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ தலைப்பாகத்தான் இருந்தது. தந்தை மகள் உறவை சித்தரிக்க இதைவிட சிறந்த தலைப்பு எது..?
எந்த உறவிலும் உறுதிமொழி முக்கியமானது. மற்ற உறவுகளை விட தந்தை மகளுக்குள் இருக்கும் உறவும், அதன் வாயிலாக கொடுக்கப்படும் உறுதி மொழியும் காலத்தை தாண்டி நீடிக்கும் என்பர்.
தந்தை, கருவில் இருக்கும் தன் சிசுவிடம் கொடுக்கும் உறுதிமொழி.. அதைக் காப்பாற்ற முடியாமல் அவர் திசை மாறும் சூழ்நிலை, காப்பாற்றப்படாத உறுதிமொழியின் காரணமாக உயிர் இழக்கும் அந்தக் குழந்தை பின்னர் ஆவியாகி தன்னுடைய நிலைமைக்கு பழி வாங்கும் சூழ்நிலை என்று தடதடக்கும் திரைக்கதை மூலம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் இந்த ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’.
இந்த வகை படங்கள் பொதுவாக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் இந்தப் படம் சில, பல நிஜ சம்பவங்களின் கோர்வையாகும்.
Auraa Cinemas நிறுவனம் இந்தப் படத்தை உலகெங்கும் திரையிட உள்ளனர். ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ள ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை..”’ என்று உறுதிபடக் கூறினார்.










