full screen background image

இசைஞானியை வீட்டிலும் சிந்திக்க வைத்த ‘உன் சமையலறையில்’ திரைப்படம்..!

இசைஞானியை வீட்டிலும் சிந்திக்க வைத்த ‘உன் சமையலறையில்’ திரைப்படம்..!

பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உன் சமையல்றையில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் கலர் லேப்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், பிரகாஷ்ராஜ், இசைஞானி இளையராஜா, நடிகை சிநேகா, பிரகாஷ்ராஜின் மனைவி போனிவர்மா, அறிமுக நாயகன் தேஜூஸ், அறிமுக நாயகி சம்யுக்தா, தம்பி ராமையா, நடிகர் குமாரவேல், பத்திரிகையாளர் ஞானவேல், பாடலாசிரியர் பழநிபாரதி, படத்தின் எடிட்டர் ஹர்ஷா, ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. சமையல், சாப்பாட்டில் ஆர்வமுள்ள இரண்டு மெச்சூரான ஆண், பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் படம் என்று சொல்ல வைக்கிறது டிரெயிலர்.  பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.. மீண்டும் ஞாபகப்படுத்த முடியவில்லை. என்னாச்சு இசைஞானிக்கு..?

இசைஞானியே வந்திருப்பதால் அனைவருமே ஒரு நிமிடத்தில் தங்களுடைய பேச்சை முடித்துக் கொண்டார்கள். தம்பி ராமையா பேசும்போது தனக்கு தேசிய விருதி கிடைத்தபோது பிரகாஷ்ராஜ் தனக்கு மெஸேஜ் அனுப்பி வாழ்த்தியதாகச் சொன்னார். பின்பு தானே பிரகாஷ்ராஜை போனில் தொடர்பு கொண்டு பேசியது தன்னை மிக மிக வாழ்த்திப் பேசியதாகவும், அதில் தான் நெகிழ்ந்து போனதாகவும் சொன்னார் தம்பி ராமையா.

அறிமுக நாயகி சம்யுக்தா பேச்சின் துவக்கத்தில் “அனைவருக்கும் முத்தாண்டு வாழ்த்துகள்..” என்று சொல்ல கூட்டமே கொல்லென்று சிரித்தது.. பின்பு பி.ஆர்.ஓ.விடம் அனைவரின் சிரிப்பிற்கான காரணத்தைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் வெட்கத்துடன் மீண்டும் “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்..” என்றார்..!

இசைஞானி 2 நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டார். “எந்தப் படத்தில், யாருடன் வேலை செய்தாலும், அந்தச் சமயத்தில் எனக்கு எது தோணுதோ அதுவே இசையாக வெளியாகும். அதற்கு மேல் எதையும் என் ஞாபகத்துல வைச்சுக்க மாட்டேன். ஆனால் இந்தப் படத்தின் பாடல் பற்றிய சிந்தனை நான் காலைல குளிக்கலாம்னு இருந்தப்போ திடீர்ன்னு தோணிச்சு.. ஒரு குவளை தண்ணியை தலையை ஊத்தினப்போ பளிச்சுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு.. இந்த வார்த்தையை இப்படி போட்டு.. இப்படி இருந்தா நல்லாயிருக்குமேன்னு.. இது இதுவரையிலும் என் வாழ்க்கையில் நடக்காத ஒரு நிகழ்வு..” என்றார்.

பிரகாஷ்ராஜ் அனைவருக்கும் சேர்த்து அதிக நேரமாக 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் நன்றி சொன்னவர், தனது மனைவியான போனிவர்மாவுக்கும் ஸ்பெஷலாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“ஹீரோயினை அவருடைய அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே எனக்குத் தெரியும். அப்போது நானும் அவருடைய அம்மாவும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம்..” என்றார். ஹீரோவின் பரம்பரையும் சினிமாதான். ஹீரோயினுக்கு பெங்களூர். ஹீரோவுக்கு ஹைதராபாத்.

இந்தப் படத்தின் வசனங்களை விஜியும், பத்திரிகையாளர் த.செ.ஞானவேலுவும் இணைந்து எழுதியிருக்கிறார்களாம். பெண் ஒளி்ப்பதிவாளர் ப்ரீதா மிக அழகாக படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நடிகை சினேகா கண்களுக்கு பிரேம் அணிந்து இன்னமும் அழகாகக் காட்சியளித்திருக்கிறார் படத்தில். இவருக்கும் பிரகாஷ்ராஜுக்கும்தான் படத்துல லவ்வாம்..

“இதுக்கு முன்னாடியே பல படங்களில் சிநேகாவை நடிக்க அழைத்தும் பல்வேறு காரணங்களினால் நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது. இப்போது இதில் நடிக்க வைத்து திருப்திபட்டுவிட்டேன்..” என்றார் பிரகாஷ்ராஜ்.

இளையராஜாவிடம் ஒரு பாடல் எழுதப்பட்ட பேப்பரை வாசிக்கக் கொடுத்த அடுத்த 2 நிமிடத்தில் அதற்கு மெட்டு போட்டு அதைப் பாடிக் காண்பித்ததாகச் சொல்லி ஆச்சரியப்பட்டார் பிரகாஷ்ராஜ். “ஆச்சரியம், பிரமிப்பையெல்லாம் இசைஞானி பக்கத்துல இருந்தால்தான் நம்மளால உணர முடியும்..” என்றார் முத்தாய்ப்பாக..!

நிகழ்ச்சி முடிந்தவுடன் இசைஞானியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு கூட்டம் அலைமோத.. “என்னய்யா..?” என்பதை போல பி.ஆர்.ஓ. நிகிலிடம் சைகை காட்டி சிரித்தார் இளையராஜா. அவ்வளவுதான் இருந்த கூட்டத்தை ஒரே சவுண்டில் விலக்கிவிட்டு பத்திரமாக அழைத்து வெளியில் அழைத்து வந்து காரில் ஏற்றிவிட்டார் பி.ஆர்.ஓ. இப்படீல்ல இருக்கணும்..!

இப்போது இசைஞானிக்குக் கிடைத்திருக்கும் விதூஷகர்கள் பட்டியலில் மிஷ்கினும், பிரகாஷ்ராஜும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் மூலமாவது இசைக் கடவுள் என்றென்னறும் நம்முடன் தொடர்பில் இருக்கட்டும்..!

Our Score