full screen background image

கோலாகலமாக நடந்து முடிந்த ‘அரிமா நம்பி’ இசை வெளியீட்டு விழா..!

கோலாகலமாக நடந்து முடிந்த ‘அரிமா நம்பி’ இசை வெளியீட்டு விழா..!

வி கிரியேஷன்ஸ் சார்பில் பிரமாண்ட விளம்பரத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ‘அரிமா நம்பி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் அமோகமாக நடந்து முடிந்தது.

சத்யம் வளாகத்தில் கார்களை நிறுத்தவே இடமில்லை. கார்களை வெளியில் சாலையிலேயே பலரும் நிறுத்திவிட்டு உள்ளே போய்விட.. அந்த் சாலையில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் சிக்கலில் இருந்தது. அரங்கத்தின் உள்ளேயும் நிறைந்த கூட்டம். வழக்கம்போல நிற்கவே இடமில்லை. சில பத்திரிகையாளர்களுக்கும்தான்..

இந்த விழாவின் இன்விடேஷனே மோனாலிஸா ஓவியம் அளவுக்கு உயரமாகவும் கனமாகவும் இருந்தது.. நிச்சயமாக ஒரு அழைப்பிதழுக்கு 40000 ரூபாயாவது செலவாகியிருக்கும். வெட்டிச் செலவு.

தாணு ஸார் இப்படித்தான்.. எதில் சிக்கனம் பார்க்க வேண்டுமோ அதில் பார்க்க மாட்டார்.. இந்த அழைப்பிதழ் பெரிதாக இருப்பதினால் படத்திற்கு என்ன விளம்பரம் கிடைத்துவிடப் போகிறது..? படம் வெளியாகும்போது இதுக்கான செலவுக்கு டிக்கெட்டுகளை எடுத்து சிவாஜி ரசிகர் மன்றத்திற்கு அள்ளி வீசினாலாவது கூடுதலான பார்வையாளர்கள் நிச்சயமான இந்தப் படத்திற்குக் கிடைப்பார்கள். யார் போய்ச் சொல்வது..?

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தனது தள்ளாத வயதிலும், நடக்க முடியாத நிலைமையிலும் தாணுவுக்காக தள்ளாடி வந்திருந்தார். இன்னொரு தள்ளாட்டத்துடன் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.ஆர்.முருகதாஸ், வீ.சேகர், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், புலவர் புலமைப்பித்தன், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, விக்கு வினாயக் ராம், சில கர்நாடக இசை பெரியவர்கள் என்று ஒரு பெரும் கூட்டம்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே சிகப்பு கலரு ஜிங்குச்சா ஸ்டைலில் டிரெஸ் அணிந்திருந்த படத்தி்ன் இசையமைப்பாளரும், பிரபல டிரம்ஸ் வீரருமான சிவமணியின் டிரம்ஸ் கச்சேரி களை கட்டியது.. மனிதர் ஒரு சின்ன பொருளைக்கூட விட மாட்டேன்றார்.. எல்லாத்துலேயும் நாலு தட்டு தட்டி அதையும் ராகமாக்கிக் காட்டுறார். சிவமணி இசையமைக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பதால் இவரது அழைப்பின் பேரில் சில கர்நாடக இசையுலகின் பெரியவர்களெல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள்..!

இவருடைய அலப்பறை முடிந்த பின்பு பிரபலங்களின் வாழ்த்து ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி, இசைஞானி இளையராஜா, மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என்று சிலரிடம் மட்டுமே அவர்களது வீட்டிற்கே சென்று ஆடியோவை ரிலீஸ் செய்து ஆசீர்வாதம் வாங்கி வந்திருக்கிறது இந்தப் படக் குழு. அதனையும் திரையிட்டுக் காண்பித்து புல் சார்ஜ் ஏற்றிக் கொண்டது.

அடுத்து மூன்று பாடல் காட்சிகளின் முக்கால்வாசியை மட்டும் காட்டினார்கள். ஒளிப்பதிவு அசத்தல். ஆர்.டி.ராஜசேகராம். கலக்கியிருக்கிறார் மனிதர். அதிலும் ஒரு ஷாட்டில் நீர்வீழ்ச்சியின் மேலே விக்ரம் பிரபு நிற்க.. கீழே நீர் வீழ்ச்சியின் மிக அருகில் இருக்கும் ஒரு பாறையில் பிரியா ஆனந்த் படுத்திருக்கும் காட்சி.. மிக அழகான படப்பதிவு.. பாடல் காட்சிகள் மூன்றுமே இதைத்தான் சொன்னது..

டிரெயில்லரை பார்த்தால் திரில்லர் கதை போல தெரிகிறது.. ஆனால் வேறுவிதமான விக்ரம் பிரபுவை பார்ப்பதாகவே தோன்றுகிறது.. அவரது முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது.. வெல்டன்.. காத்திருப்போம்..

கலைப்புலி தாணு வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் பிரியா ஆனந்த், இயக்குநர் ஆனந்த் சங்கர் மூவரும் மேடையேறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.

அடுத்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்த்துரை வழங்கினார். அபிராமி ராமநாதன், புலவர் புலமைப்பித்தன், ஏ.ஆர்.முருகதாஸ், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.

இதற்கே மணி 12 ஆகிவிட.. டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு ரசிகர்கள் வெளியில் வெறியாகக் காத்திருக்கும் செய்தி காத்துவாக்கில் உள்ளே வர.. உடனடியாக இசை வெளியீடு, டிரெயிலர் வெளியீடு, இசை நிறுவனத்தின் துவக்க விழா என்று மூன்றையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்தார்கள்.

விழாவுக்கு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் பல ஊர்களில் இருந்தும் வண்டி கட்டிக் கொண்டு வந்திருந்தனர். ‘சிவாஜி’, ‘பிரபு’, ‘விக்ரம் பிரபு’ மூவரின் பெயரைச் சொன்னபோதெல்லாம் விசில் சப்தமும், கை தட்டலும் காதைத் துளைத்தன. ஒரு கட்டத்தில் பிரபு கையெடுத்துக் கும்பிட்டு ‘போதும்பா’ என்று கெஞ்சிய பின்புதான் அடங்கினார்கள்.. நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர்கள், இ்பபோது சிவாஜி குடும்பத்தினரின் நலம் விரும்பிகளாக மாறிவிட்டார்கள் ..!

இதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் வாரிசுகள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..?

Our Score